நர்சு தற்கொலை செய்த விவகாரம்: 2 பெண் டாக்டர்கள் பணியிட மாற்றம்

வெள்ளகோவில் அரசு ஆரம்ப சுகாதார நிலைய நர்சு தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்ட விவகாரம் தொடர்பாக 2 பெண் டாக்டர்கள் பணியிட மாற்றம் செய்யப்பட்டனர்.

Update: 2018-02-14 23:15 GMT
காங்கேயம்,

கடலூர் மாவட்டம் பண்ருட்டி தாலுகா நரிமேடு அய்யனார் கோவில் வீதியை சேர்ந்தவர் ராமலிங்கம். இவரது மகள் மணிமாலா (வயது 25) திருமணமாகவில்லை. இவர் திருப்பூர் மாவட்டம் வெள்ளகோவில் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் வேலை பார்த்து வந்தார். அங்குள்ள அரசு குடியிருப்பில் தங்கி வேலைக்கு சென்று வந்தார்.

இந்த நிலையில் கடந்த 10-ந்தேதி இரவு மணிமாலா தங்கியிருந்த குடியிருப்பில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். இதுபற்றி வெள்ளகோவில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினார்கள். மணிமாலாவின் உடல் பிரேத பரிசோதனைக்காக காங்கேயம் அரசு மருத்துவமனையில் உள்ள பிரேத பரிசோதனை அறையில் வைக்கப்பட்டிருந்தது. தொடர்ந்து கடந்த 11-ந்தேதி பிரேத பரிசோதனை நடந்தது.

இதைத்தொடர்ந்து தற்கொலை செய்த மணிமாலாவின் குடும்பத்தினர், உறவினர்கள் மற்றும் செவிலியர்கள், அரசு ஊழியர்கள் மருத்துவமனை வளாகத்தில் திரண்டனர். இதனால் பரபரப்பு ஏற்பட்டது. இதைத்தொடர்ந்து காங்கேயம் அரசு மருத்துவமனை முன்பு பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டது.

தற்கொலை செய்த மணிமாலாவை தற்கொலைக்கு தூண்டிய வட்டார மருத்துவ அலுவலர் டாக்டர் தமயந்தி மற்றும் டாக்டர் சக்தி அகிலாண்டேஸ்வரி ஆகிய 2 பேர் மீதும் வழக்குப்பதிவு செய்து கைது செய்ய வேண்டும் என்று மணிமாலாவின் தந்தை ராமலிங்கம் மற்றும் உறவினர்கள் புகார் கூறினார்கள்.

இதைத்தொடர்ந்து கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழ்நாடு நர்சுகள் சங்கம், அரசு ஊழியர் சங்கம் மற்றும் உறவினர்கள் காங்கேயம் அரசு மருத்துவமனை முன்பு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். மணிமாலாவின் தற்கொலைக்கு காரணமான பெண் டாக்டர்கள் இருவர் மீதும் வழக்குப்பதிவு செய்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோஷம் எழுப்பினர்.

மேலும் டாக்டர்கள் இருவர் மீதும் வழக்குப்பதிவு செய்தால் மட்டுமே மணிமாலாவின் உடலை பெற்றுக்கொள்வோம் என்று உறவினர்கள் கூறினார்கள். இதைத்தொடர்ந்து கடந்த 11-ந்தேதி முதல் 13-ந்தேதிவரை தொடர்ந்து 3 நாட்கள் இரவு-பகல் என போராட்டம் தொடர்ந்து நடந்தது. இந்த போராட்டத்தின் போது 11-ந்தேதி மற்றும் 12-ந்தேதி ஆகிய 2 நாட்கள் நடந்த பேச்சுவார்த்தையில் உடன்பாடு ஏற்படவில்லை.

நேற்று முன்தினம் 3-வது நாளாக போராட்டம் தொடர்ந்து நடந்தது. இதற்கிடையில் போராட்டம் நடத்தியவர்களில் சங்க பிரதிநிதிகள் குழு திருப்பூர் மாவட்ட கலெக்டர் கே.எஸ்.பழனிசாமியை சந்தித்து முறையிட்டனர். இதைத்தொடர்ந்து இரவு 11 மணியளவில் காங்கேயம் தாலுகா அலுவலகத்தில் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு உமா மற்றும் சுகாதாரத்துறை உயர் அதிகாரிகள் முன்னிலையில் நடந்த பேச்சுவார்த்தையில் சமரச தீர்வு எட்டப்பட்டது.

அதன்படி வெள்ளகோவில் அரசு ஆரம்ப சுகாதார நிலைய மருத்துவ அலுவலர் டாக்டர் தமயந்தி ஈரோடு மாவட்டம் சித்தோட்டிற்கும், மற்றொரு டாக்டர் சக்தி அகிலாண்டேஸ்வரி திண்டுக்கல் மாவட்டம் செந்துறைக்கும் பணியிட மாறுதல் செய்யப்படுவார்கள் என்று உறுதி கூறப்பட்டது. மேலும் ஆர்.டி.ஓ. தலைமையில் விசாரணை மேற்கொள்ளப்படும் என்றும், மணிமாலாவின் குடும்பத்தில் ஒருவருக்கு பொது சுகாதாரத்துறையில் பணி வழங்கப்படும் என்றும், மணிமாலாவின் குடும்பத்திற்கு முதல்-அமைச்சர் பொது நிவாரண நிதி கிடைக்க பரிந்துரை செய்யப்படும் என்றும் பேச்சுவார்த்தையில் முடிவு செய்யப்பட்டுள்ளதாக போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் தெரிவித்தனர்.

இதைத்தொடர்ந்து 3 நாட்கள் நடந்த போராட்டம் வாபஸ் பெறப்பட்டதாகவும் நள்ளிரவு 12.30 மணிக்கு தெரிவிக்கப்பட்டது. இதனையடுத்து அதிகாலை சுமார் 2 மணியளவில் மணிமாலாவின் உடலை பெற்றோர் மற்றும் உறவினர்கள் பெற்றுக்கொண்டு வேன் மூலம் தங்களது சொந்த ஊரான கடலூர் மாவட்டம் பண்ருட்டி தாலுகா நரிமேட்டுக்கு கொண்டு சென்றனர். இதையடுத்து காங்கேயத்தில் 3 நாட்களாக நடந்த போராட்டம் முடிவுக்கு வந்தது.

மேலும் செய்திகள்