விமானத்தில் வழங்கிய நூடுல்ஸ் சாப்பிட்ட சிங்கப்பூர் பயணி சாவு போலீசார் விசாரணை

நூடுல்ஸ் சாப்பிட்டதால் விமானத்தில் வந்த சிங்கப்பூர் பயணி இறந்தார். இது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

Update: 2018-02-14 22:15 GMT
சமயபுரம்,

சிங்கப்பூரை சேர்ந்த சுப்ர மணியன் மகன் சுமன் (வயது 35). இவர் மகாசிவராத்திரியை முன்னிட்டு திருவண்ணாமலையில் உள்ள ஒரு கோவிலில் சாமி தரிசனம் செய்ய திட்டமிட்டார். இதற்காக கடந்த 7-ந்தேதி சிங்கப்பூரில் இருந்து விமானத்தில் திருச்சி வந்தார். பின்னர் மண்ணச்சநல்லூர் அருகே நொச்சியத்தில் உள்ள தனது நண்பர் வீட்டில் 3 நாட்களாக தங்கி ஓய்வெடுத்தார். திருச்சி வந்ததில் இருந்து அவருக்கு அடிக்கடி வயிற்று வலி ஏற்பட்டு உள்ளது.

விமானத்தில் வந்த போது நூடுல்ஸ் கொடுக்கப்பட்டது. அதை சாப்பிட்டதில் இருந்து அடிக்கடி வயிற்று வலி ஏற்பட்டு வருவதாகவும் அவர் தனது நண்பரிடம் கூறியுள்ளார். இதைத்தொடர்ந்து திருச்சியில் உள்ள தனியார் ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வந்தார். ஆனால் வயிற்று வலி சரியாகவில்லை. இந்த நிலையில் அவருக்கு நேற்று மீண்டும் வயிற்று வலி ஏற்பட்டு மிகவும் அவதிப்பட்டார். சிறிது நேரத்தில் அவருக்கு மயக்கம் ஏற்பட்டது. இதைத்தொடர்ந்து அவரை மயங்கிய நிலையில் ஸ்ரீரங்கம் அரசு மருத்துவமனைக்கு கொண்டு வந்தனர். அங்கு அவரை பரிசோதித்த டாக்டர்கள் சுமன் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர்.

போலீசார் விசாரணை

இது குறித்து தகவல் அறிந்த மண்ணச்சநல்லூர் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் மோகன்ராஜ் மற்றும் போலீசார் ஆஸ்பத்திரிக்கு சென்று சுமன் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். பின்னர் வழக்குப்பதிவு செய்து அவர் விமானத்தில் சாப்பிட்ட நூடுல்ஸ் விஷமாக மாறி அதனால் வயிற்று வலி ஏற்பட்டு இறந்தாரா? அல்லது வேறு ஏதாவது காரணமா? என்பது குறித்து விசாரித்து வருகின்றனர்.

சுமனின் மூதாதையர்கள் 3 தலைமுறைக்கு முன்னர் சிங்கப்பூர் குடிபெயர்ந்து உள்ளனர். சுமன் சிங்கப்பூர் குடியுரிமை பெற்று உள்ளதும், சிங்கப்பூர் ஆளும் கட்சியில் அவர் முக்கிய பொறுப்பில் இருந்து வந்ததும் தெரிய வந்தது. இவருக்கு இன்னும் திருமணம் ஆகவில்லை என்பது குறிப் பிடத்தக்கது. 

மேலும் செய்திகள்