வால்பாறையில் வீட்டை உடைத்து காட்டுயானைகள் அட்டகாசம்

வால்பாறையில் வீட்டை உடைத்து காட்டுயானைகள் அட்டகாசம் செய்தன.

Update: 2018-02-13 21:38 GMT
வால்பாறை,

வால்பாறை அருகே உள்ள ஊசிமலை டாப் பிரிவு எஸ்டேட் குடியிருப்பு பகுதிக்குள் நள்ளிரவில் 4 குட்டிகள் உட்பட 9 யானைகள் கொண்ட கூட்டம் புகுந்தது. இந்த யானைகள் குடியிருப்புக்குள் நுழைந்து ஆனந்தி, ராணி, தியாகராஜன் ஆகிய தொழிலாளர்களின் வீடுகளின் கதவு ஜன்னலை உடைத்து துதிக்கையை உள்ளே விட்டு வீட்டிலிருந்த பொருட்களை எடுத்து உடைத்து சேதப்படுத்தின. பின்னர் தொழிலாளர்கள் அனைவரும் விழித்துக்கொண்டு வால்பாறை வனச்சரக வனத்துறையினருக்கு தகவல் கொடுத்து விட்டு கூச்சலிட்டு யானையை விரட்டிக் கொண்டிருந்துள்ளனர்.

இந்த யானைகள் குடியிருப்பில் உள்ள ராஜேந்திரன் என்பவரின் வீட்டு சுவற்றையும், கதவு ஜன்னலையும் உடைத்து துதிக்கையை உள்ளே விட்டு உள் அறையிலிருந்த அரிசி, பருப்பை எடுத்து சாப்பிட்டு விட்டு பீரோவை வெளியே இழுத்து உள்ளிருந்த பொருட்கள் முழுவதையும் சேதப்படுத்தின. பின்னர் வீட்டிலிருந்த பொருட்களை வெளியே வீசி எறிந்து விட்டு உள்ளே நுழைவதற்கு முயற்சித்துள்ளன.

இதனால் ராஜேந்திரன் தனது மனைவியையும் குழந்தைகளையும் கூட்டிக் கொண்டு பின்பக்க வழியாக அருகில் இருந்தவர்கள் வீட்டுக்குள் ஓடி உயிர் தப்பினர். ஆனால் யானைகள் கூட்டம் தொடர்ந்து போகாமல் குடியிருப்புகளை சுற்றி சுற்றி வந்ததால் தொழிலாளர்கள் அனைவரும் வீடுகளை விட்டு வெளியே வந்து யானைகளை கூச்சலிட்டும், குடியிருப்பு பகுதியில் தீமூட்டியும் விரட்டியுள்ளனர்.

பின்னர் அருகில் இருந்த வனப்பகுதிக்குள் போய் காட்டுயானைகள் முகாமிட்டு நின்று கொண்டன. எந்த நேரத்திலும் குடியிருப்பு பகுதிக்குள் நுழைந்துவிடலாம் என்ற அச்சத்தில் தொழிலாளர்கள் இருந்து வந்தனர்.

இந்த நிலையில் வனச்சரகர் சக்திவேல் உத்தரவின் பேரில் வனவர் கோபாலகிருஷ்ணன் வேட்டைத்தடுப்பு காவலர்களுடன் சம்பவ இடத்துக்கு வந்து யானைகள் மீண்டும் குடியிருப்புக்குள் நுழையாமல் கண்காணித்தனர். வனத்துறையினருடன் சேர்ந்து எஸ்டேட் பகுதி தொழிலாளர்களும் யானைகளை விரட்டுவதிலேயே பொழுதை கழித்தனர். விடியவிடிய வீடுகளை விட்டு வெளியே வந்து யானைகள் வந்துவிடும் என்ற பயத்திலேயே இருந்தனர்.

மேலும் செய்திகள்