ரூ.62 லட்சம், 20 பவுன் நகை திருட்டு போனதாக நாடகமாடிய கிரானைட் அதிபர் கைது

பாப்பிரெட்டிப்பட்டி அருகே வீட்டில் வைத்திருந்த ரூ.62 லட்சம் மற்றும் 20 பவுன் நகை திருட்டு போனதாக நாடகமாடிய கிரானைட் அதிபரை போலீசார் கைது செய்தனர்.

Update: 2018-02-13 22:15 GMT
பொம்மிடி,

பாப்பிரெட்டிப்பட்டி அருகே உள்ள ராமியம்பட்டியைச் சேர்ந்தவர் விஜயகுமார் (வயது 58). இவருடைய மகன்கள் விமல் (30), பிரபாகரன் (28). கிரானைட் தொழில் அதிபர்கள்.

விஜயகுமாருக்கு ஆந்திர மாநிலம் சித்தூரில் கிரானைட் குவாரி உள்ளது. பாப்பிரெட்டிப்பட்டி அருகே உள்ள தாதனூரில் கிரானைட் அறுக்கும் ஆலையும் உள்ளது. கடந்த 9-ந்தேதி விஜயகுமார் குடும்பத்துடன் திருப்பதிக்கு சாமி கும்பிட சென்றார். பின்னர் அங்கிருந்து ஊருக்கு திரும்பினார். அப்போது, வீட்டில் வைத்திருந்த ரூ.62 லட்சம், 20 பவுன் நகைகள் திருட்டு போனதாக பாப்பிரெட்டிப்பட்டி போலீசில் பிரபாகரன் புகார் செய்தார்.

இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். தர்மபுரி மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு பண்டி கங்காதர் சம்பவ இடத்துக்கு வந்து விசாரணை நடத்தினார். பிரபாகரன், விமல், விஜயகுமாரிடம் இதுபற்றி தீவிரமாக போலீசார் விசாரணை நடத்தினார்கள். அப்போது பிரபாகரன், தங்கள் வீட்டில் திருட்டு நடக்கவில்லை என்றும், தொழிலில் நஷ்டம் ஏற்பட்டதால் கடன் தொல்லையில் இருந்து தப்பிக்க இவ்வாறு புகார் செய்ததாகவும் தெரிவித்தார். இதையடுத்து பிரபாகரனை போலீசார் நேற்று கைது செய்தனர். தொடர்ந்து அவரிடம் போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகிறார்கள்.

திருட்டு நடந்ததாக நாடகமாடிய கிரானைட் அதிபர் கைது செய்யப்பட்ட சம்பவம் அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

மேலும் செய்திகள்