விசாரணைக்காக அழைத்து சென்றவர்களை விடுவிக்கக்கோரி போலீஸ் நிலையத்தை முற்றுகையிட்ட திருநங்கைகள்

விசாரணைக்காக அழைத்து சென்ற திருநங்கைகளை விடுவிக்கக்கோரி கண்டோன்மெண்ட் போலீஸ் நிலையத்தை முற்றுகையிட்ட திருநங்கைகளால் பரபரப்பு ஏற்பட்டது.

Update: 2018-02-13 22:45 GMT
திருச்சி,

திருச்சி மாநகரத்தில் திருநங்கைகள் சிலர் இரவு நேரங்களில் பாலியல் தொழில் செய்து வருவதும், பொதுமக்களை மிரட்டி பணம் பறித்து வருவதாகவும் திருச்சி மாநகர போலீஸ் கமிஷனர் அலுவலகத்துக்கு புகார்கள் வந்தன. அவ்வாறு ஈடுபடும் திருநங்கைகளை கைது செய்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என போலீசாருக்கு, போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் இருந்து உத்தரவு பிறப்பிக்கப்பட்டது.

இந்நிலையில் 3 திருநங்கைகள் நேற்று காலை திருச்சி மத்திய பஸ் நிலையத்தில் பிச்சை எடுத்து கொண்டிருந்தனர். இதனை கண்ட போலீசார் மிரட்டி பணம் பறிக்கிறார்கள் என்று எண்ணி அவர்களை கண்டோன்மெண்ட் போலீஸ் நிலையத்துக்கு அழைத்து சென்று விசாரணை நடத்தி கைது செய்யும் நடவடிக்கைகளில் ஈடுபட்டனர்.

இதுகுறித்து தகவலறிந்த திருநங்கைகள் சமூக செயல்பாட்டு கூட்டமைப்பு தலைவி சோனாலி தலைமையில் செயலாளர் ஆயிஷா உள்ளிட்ட 50-க்கும் மேற்பட்ட திருநங்கைகள் போலீஸ் நிலையத்துக்கு திரண்டு வந்து முற்றுகையிட்டனர். இதனை கண்ட போலீசார் திருநங்கைகளிடம் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர்.

அப்போது திருநங்கைகள் எங்கள் கூட்டமைப்பை சேர்ந்த திருநங்கைகள் பெற்றோரால் கைவிடப்பட்டவர்கள். மேலும் எங்களுக்கு நிலையான வேலை ஏதும் இல்லாததால் தான் சாப்பாட்டிற்காக பிச்சை எடுக்கிறோம். நாங்கள் மிரட்டி பணம் பறிக்கும் சம்பவங்களிலும், பாலியல் தொழிலிலும் ஈடுபடவில்லை. ஆனால் ஒரு சில திருநங்கைகள் தான் அவ்வாறு ஈடுபடுகின்றனர். போலீசார் கூட்டி வந்த அந்த 3 திருநங்கைகளும் அப்படிப்பட்டவர்கள் இல்லை. இதனால் அவர் களை விடுவிக்க வேண்டும் என்று வலியுறுத்தினர்.

இதனை தொடர்ந்து போலீசார் அந்த 3 திருநங்கைகளையும் விடுவித்தனர். திருநங்கைகள் நிருபர்களிடம் கூறுகையில், ‘எங்களுக்கு மாவட்ட நிர்வாகம் இலவச வீட்டுமனை பட்டா அல்லது இலவச வீடு வழங்க வேண்டும். நிலையான வேலை வாய்ப்பை வழங்கினால் நாங்கள் பிச்சை எடுப்பதை கூட நிறுத்தி விடுகிறோம்’ என்றனர். இதையடுத்து அவர்கள் கலைந்து சென்றனர். இதற்கிடையில் போலீசார் பாலியல் தொழிலில் ஈடுபட்டு மிரட்டி பணம் பறிக்கும் சம்பவங்களில் ஈடுபட்டதாக 2 திருநங்கைகளை அழைத்து வந்து விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவம் நேற்று அங்கு பரபரப்பை ஏற்படுத்தியது. 

மேலும் செய்திகள்