மாற்றுத்திறனாளிக்கு கடன் வழங்க ரூ.8 ஆயிரம் லஞ்சம் வாங்கிய வங்கி மேலாளர் கைது

ஆம்பூர் அருகே கடன் வழங்க மாற்றுத்திறனாளியிடம் ரூ.8 ஆயிரம் லஞ்சம் வாங்கிய வங்கி மேலாளரை சி.பி.ஐ.போலீசார் கைது செய்தனர்.

Update: 2018-02-13 23:00 GMT
ஆம்பூர்,

வேலூர் மாவட்டம் ஆம்பூர் அருகே அரங்கல்துருகம் ஊராட்சியில் ‘பாங்க் ஆப் இந்தியா’ வங்கி கிளை உள்ளது. தேசிய மயமாக்கப்பட்ட இந்த வங்கியின் கிளை மேலாளராக ஆந்திர மாநிலத்தை சேர்ந்த ராமநாதன் (வயது 52) என்பவர் பணியாற்றி வருகிறார். இந்த வங்கியில் அரங்கல்துருகம் மற்றும் சுற்றுப்புற பகுதிகளை சேர்ந்தவர்கள் கணக்கு தொடங்கியுள்ளனர்.

இதே பகுதியில் உள்ள பார்சனாபல்லி கிராமத்தை சேர்ந்தவர் பார்த்தீபன் (வயது 27). மாற்றுத்திறனாளியான இவர் விவசாயிகள் மற்றும் மகளிர் சுயஉதவிக்குழுக்களுக்கு கடன் வாங்கி கொடுப்பது, மாற்றுத்திறனாளிகளை கலெக்டர் அலுவலகத்துக்கு அழைத்து சென்று மாற்றுத்திறனாளிக்கான சான்றிதழ்கள் வாங்கி கொடுப்பது போன்ற சமூக சேவைகளில் ஈடுபட்டு வந்தார்.

கடந்த சில தினங்களுக்கு முன்பு அரங்கல்துருகத்திலுள்ள ‘பாங்க் ஆப் இந்தியா’ வங்கி கிளையில் ரூ.4 லட்சம் கடன் கேட்டு இவர் விண்ணப்பித்துள்ளார். இந்த கடனுக்காக வங்கி மேலாளர் ராமநாதனை பலமுறை அணுகியுள்ளார். ஆனால் அவர் கடன் வழங்காமல் இழுத்தடித்து வந்துள்ளார்.

இந்த நிலையில் பார்த்தீபன் வங்கி மேலாளர் ராமநாதனை மீண்டும் சந்தித்து கடன் வழங்க வற்புறுத்தினார். அப்போது “ரூ.4 லட்சம் கடன் தொகைக்கு ரூ.40 ஆயிரம் லஞ்சம் கொடுக்க வேண்டும். அவ்வாறு தந்தால் வங்கிக்கடன் வழங்கப்படும்” என ராமநாதன் கூறியுள்ளார். அதற்கு பார்த்தீபன், தன்னால் அவ்வளவு பணம் கொடுக்க முடியாது என்றும் குறைத்து சொல்லுங்கள் என்றும் கேட்டுக்கொண்டார்.

ஆனால் வங்கி மேலாளர் ராமநாதன் அதற்கு சம்மதிக்கவில்லை. இதனால் பார்த்தீபன் ரூ.40 ஆயிரம் கொடுப்பதாகவும் முதல் கட்டமாக ரூ.8 ஆயிரத்தை தருவதாகவும் மீத தொகையை தவணை முறையில் கொடுப்பதாகவும் பெயரளவுக்கு ஒப்புக்கொண்டார். அதனை ஏற்று வங்கி மேலாளர் கடன் வழங்க சம்மதம் தெரிவித்தார்.

எனினும் லஞ்சம் தர விரும்பாத அவர் தன்னிடம் வங்கி மேலாளர் லஞ்சம் கேட்பது குறித்து மத்திய புலனாய்வு பிரிவு (சி.பி.ஐ.) போலீசாருக்கு தகவல் அளித்தார்.

அதன்பேரில் சென்னையில் இருந்து சி.பி.ஐ. துணை போலீஸ் சூப்பிரண்டு சோமையா தலைமையில் இன்ஸ்பெக்டர் முத்துக்குமரன் உள்ளிட்ட 7 பேர் அடங்கிய குழுவினர் நேற்று அரங்கல்துருகம் கிராமத்திற்கு ஒரு காரில் வந்தனர்.

அவர்கள் மாற்றுத்திறனாளி பார்த்தீபனிடம் முதலில் விசாரணை நடத்தினர். அப்போது அவர் முதல் தவணையாக ரூ.8 ஆயிரம் கொடுக்க உள்ளதாக கூறிவிட்டு, பின்னர் வங்கிக்கு சென்று மேலாளர் ராமநாதனிடம் பணத்தை கொடுத்தார்.

அப்போது சி.பி.ஐ. போலீசாரும் வாடிக்கையாளர்களை போல அந்த வங்கிக்குள் சென்று கண்காணித்தனர். இந்த நிலையில் பார்த்தீபனிடம் இருந்து வங்கி மேலாளர் ராமநாதன் லஞ்ச பணத்தை பெற்றபோது அவரை சி.பி.ஐ.போலீசார் சுற்றி வளைத்து பிடித்தனர். பின்னர் அவரிடம் தொடர்ந்து விசாரணை நடத்தினர். மேலும் வங்கி ஊழியர்கள் யாரையும் வெளியே செல்ல அனுமதிக்காமல் வங்கியின் கதவை உள்பக்கமாக பூட்டிவிட்டு தொடர்ந்து விசாரணையை தொடங்கினர்.

இதனிடையே வங்கி மேலாளர் லஞ்ச ஒழிப்பு போலீசாரிடம் சிக்கிய தகவல் அப்பகுதியில் பரவியதை தொடர்ந்து 100-க்கும் மேற்பட்ட மக்கள் வங்கி முன்பு காத்திருந்து வேடிக்கை பார்த்தனர்.

இதையடுத்து நேற்று இரவு சி.பி.ஐ. போலீசார் ராமநாதனை கைது செய்து அழைத்து சென்றனர்.

கடன் வழங்க மாற்றுத்திறனாளியிடம் லஞ்சம் வாங்கிய வங்கி மேலாளர் சிக்கி கொண்ட சம்பவம் ஆம்பூர் பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. 

மேலும் செய்திகள்