பெண்ணை கத்தியால் குத்திய ராணுவ வீரர் கைது

தண்டராம்பட்டு அருகே பெண்ணை கத்தியால் குத்திய ராணுவ வீரரை போலீசார் கைது செய்தனர். பெண் படுகாயத்துடன் சிகிச்சை பெற்று வருகிறார்.

Update: 2018-02-13 22:15 GMT
தண்டராம்பட்டு,

தண்டராம்பட்டு அருகில் உள்ள மேல்அகரம் கிராமத்தை சேர்ந்தவர் பச்சையப்பன் (வயது 26). இவர் பஞ்சாப் மாநிலத்தில் ராணுவ வீரராக பணியாற்றி வருகிறார். பச்சையப்பனுக்கும் பக்கத்து ஊரான ராதாபுரத்தை சேர்ந்த திலகவதி (24) என்பவருக்கும் பள்ளியில் படிக்கும் நாள் முதல் நெருங்கிய நட்பு இருந்து வந்தது. பின்னர் அது காதலாக மாறியது.

பச்சையப்பன் ராணுவத்துக்கு சென்றபின் திலகவதியை அதே ஊரை சேர்ந்த தனியார் பஸ் டிரைவர் சிவக்குமார் (29) என்பவருக்கு அவரது பெற்றோர் திருமணம் செய்து வைத்துள்ளனர். திலகவதிக்கு தற்போது ஒரு வயதில் குழந்தையும் உள்ளது.

இந்த நிலையில் நேற்று முன்தினம் பச்சையப்பன் தன் சொந்த ஊருக்கு வந்தார். தன்னை ஏமாற்றிய திலகவதியை பார்க்க ராதாபுரம் சென்று நியாயம் கேட்டுள்ளார். இருவருக்கும் இடையே வாய்த்தகராறு ஏற்பட்டுள்ளது.

பெண்ணுக்கு கத்திக்குத்து

அப்போது ஆத்திரமடைந்த பச்சையப்பன் மறைத்து வைத்திருந்த கத்தியால் திலகவதியின் இடுப்பு, கை, கழுத்து போன்ற பகுதியில் சரமாரியாக குத்தி உள்ளார். திலகவதியின் அலறல் சத்தம் கேட்டு அக்கம்பக்கம் உள்ளவர்கள் ஓடி வந்து திலகவதியை காப்பாற்றி திருவண்ணாமலை அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு திலகவதி தீவிர சிகிச்சை பெற்று வருகிறார்.

இதுகுறித்து தண்டராம்பட்டு போலீஸ் இன்ஸ்பெக்டர் மதியழகன் வழக்குப்பதிவு செய்து ராணுவ வீரர் பச்சையப்பனை கைது செய்து விசாரணை நடத்தி வருகிறார். 

மேலும் செய்திகள்