ராகுல் காந்தி மாமிசம் சாப்பிட்டுவிட்டு கோவிலுக்கு செல்லவில்லை சித்தராமையா பேட்டி

ராகுல் காந்தி மாமிசம் சாப்பிட்டுவிட்டு கோவிலுக்கு செல்லவில்லை என்றும், எடியூரப்பாவின் குற்றச்சாட்டு தவறானது என்றும் முதல்-மந்திரி சித்தராமையா கூறினார்.

Update: 2018-02-13 21:00 GMT
பெங்களூரு,

ராகுல் காந்தி மாமிசம் சாப்பிட்டுவிட்டு கோவிலுக்கு செல்லவில்லை என்றும், எடியூரப்பாவின் குற்றச்சாட்டு தவறானது என்றும் முதல்-மந்திரி சித்தராமையா கூறினார்.

இதுதொடர்பாக முதல்- மந்திரி சித்தராமையா கலபுரகியில் நேற்று நிருபர்களுக்கு பேட்டி அளிக்கையில் கூறிய தாவது:-

எடியூரப்பா கூறியது தவறானது

அகில இந்திய காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி மாமிசம் சாப்பிட்டுவிட்டு கோவிலுக்கு சென்றதாக எடியூரப்பா குற்றம்சாட்டி உள்ளார். உணவு முறை அவரவர்களின் தனிப்பட்ட விஷயம். மாமிசம் சாப்பிட்டுவிட்டு கோவிலுக்கு சென்றது பெரிய விஷயமே இல்லை. எடியூரப்பா கூறியது தவறானது. ராகுல் காந்தி மாமிசம் சாப்பிட்டுவிட்டு கோவிலுக்கு செல்லவில்லை. இதை ராகுல் காந்தியே தெளிவுபடுத்தி உள்ளார்.

பிரதமர் மோடி ஒரு முறை அல்ல, 100 தடவை கர்நாடகத்திற்கு வந்தாலும் எங்களுக்கு எந்த பாதிப்பும் இல்லை. அவர் ஒரு அரசியல் கட்சியை சேர்ந்தவர். அதனால் அவர் வருகிறார். அவர் கடந்த முறை பெங்களூரு வந்தபோது காங்கிரஸ் அரசு 10 சதவீத ‘கமிஷன்’ அரசு என்று குற்றம்சாட்டினார். இப்போது அவர் வரும்போது அதற்கு ஆதாரத்தை வெளியிடுகிறாராம். ஆவணங்கள் இருந்தால் அதை அவர் வெளியிடட்டும் பார்க்கலாம்.

10 சதவீத ‘கமிஷன்’ அரசு

எங்கள் அரசில் ‘கமிஷன்’ விவகாரம் இல்லை. முந்தைய பா.ஜனதா அரசில் தான் அத்தகைய ‘கமிஷன்’ விவகாரம் இருந்தது. 100 சதவீத ‘கமிஷன்’ அரசை நடத்தியது பா.ஜனதா. ராகுல் காந்தியின் 2-வது கட்ட தேர்தல் பிரசார சுற்றுப்பயணம் வருகிற 24-ந் தேதி தொடங்கி 3 நாட்கள் நடைபெறும். அவர் மும்பை கர்நாடக பகுதியில் சுற்றுப்பயணம் செய்து ஆதரவு திரட்டுவார்.

ராகுல் காந்தி செல்லும் இடத்தில் காங்கிரஸ் தோற்கும் என்று பா.ஜனதாவினர் சொல்வது சரியல்ல. அப்படி என்றால் குஜராத்தில் காங்கிரஸ் வெற்றிக்கு மிக அருகில் சென்றது எப்படி?. ராகுல் காந்தி அகில இந்திய காங்கிரஸ் தலைவராக ஆன பிறகு எங்களுக்கு கூடுதல் பலம் கிடைத்துள்ளது. எனது சொத்து மதிப்பு ரூ.13 கோடி என்று ஒரு ஆய்வு கூறியுள்ளது. அது எங்களின் குடும்ப சொத்தின் மதிப்பு. கடந்த சட்டமன்ற தேர்தலின்போது எனது குடும்ப சொத்து விவரங்களை அறிவித்தேன்.

கோவா அரசு கேட்கவில்லை

எனது சகோதரர்களின் சொத்து விவரங்களையும் தேர்தல் ஆணையத்திடம் தாக்கல் செய்தேன். எனது மூத்த சகோதரர் இறந்த பிறகு குடும்பத்தின் தலைவராக நான் இருந்தேன். இப்போது குடும்ப சொத்துகளை பாகம் பிரித்துக் கொண்டோம். அத்துடன் 6½ கோடி கன்னடர்களும் எனது சொத்து தான்.

கோவா அரசு, கோர்ட்டு அவமதிப்பு வழக்கை நடுவர் மன்றத்தில் வாபஸ் பெற்றுள்ளது. நாங்கள் விதிமுறைகளை மீறி எந்த பணிகளையும் மேற்கொள்ளவில்லை என்று முதலிலேயே சொன்னோம். அப்போது கோவா அரசு கேட்கவில்லை. இப்போது அவர்கள் புரிந்து கொண்டு அந்த வழக்கை வாபஸ் பெற்று இருக்கிறார்கள்.

இவ்வாறு சித்தராமையா கூறினார்.

மேலும் செய்திகள்