கொள்ளிடம் ஆற்றின் குறுக்கே ரூ.56 கோடியில் உயர்மட்ட பாலம் அமைச்சர் இடத்தை ஆய்வு செய்தார்

தஞ்சை மாவட்டத்தையும், அரியலூர் மாவட்டத்தையும் இணைக்கும் வகையில் கொள்ளிடம் ஆற்றின் குறுக்கே ரூ.56 கோடியில் புதிதாக உயர்மட்ட பாலம் கட்டுவதற்கான இடத்தினை அமைச்சர் துரைக்கண்ணு ஆய்வு செய்தார்.

Update: 2018-02-13 23:00 GMT
கபிஸ்தலம்,

தஞ்சை மாவட்டத்தையும், அரியலூர் மாவட்டத்தையும் இணைக்கும் வகையில் பாபநாசம் ஒன்றியம் கோவிந்தநாட்டுச்சேரி ஊராட்சியில் கொள்ளிடம் ஆற்றின் குறுக்கே புதிய பாலம் கட்ட வேண்டும் என பொதுமக்களும், விவசாயிகளும் நீண்ட நாட்களாக கோரிக்கை விடுத்து வந்தனர்.

அரியலூர் மாவட்டத்தில் உள்ள ராமநல்லுார் மற்றும் சுற்றியுள்ள சுமார் 20-க்கும் மேற்பட்ட கிராமங்களில் தினசரி விளைவிக்கும் அனைத்து விதமான காய்கறிகள் உள்ளிட்ட பணப்பயிர்களை நாள்தோறும் மாட்டு வண்டிகள் மூலம் சுமார் 20 கிலோ மீட்டர் அளவிற்கு சுற்றி திருவையாறு சென்று பின்னர் அங்கிருந்து கும்பகோணம் மற்றும் தஞ்சை காய்கறி மார்க்கெட்டுக்கு கொண்டு செல்ல மிகுந்த சிரமம் இருப்பதாக தெரிவித்தனர்.

பொதுமக்கள், விவசாயிகளின் நீண்ட நாள் கோரிக்கையினை ஏற்று தஞ்சை மாவட்டம் பாபநாசம் ஒன்றியம் கோவிந்தநாட்டுச்சேரி ஊராட்சியில் இருந்து அரியலூர் மாவட்டம் ராமநல்லூர் வரையில் கொள்ளிடம் ஆற்றின் குறுக்கே ரூ.56 கோடி மதிப்பில் உயர் மட்ட பாலம் கட்டுவதற்கான பேரணை தயார் செய்து கொள்ளிடம் ஆற்றில் பாலம் கட்ட உள்ள இடத்திற்கு சென்று அமைச்சர் துரைக்கண்ணு நேற்று பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

பின்னர் கும்பகோணம்-திருவையாறு சாலையில் சருக்கை ஊராட்சி மெயின் ரோட்டில் திருமண மண்டபம் கட்டுவதற்கான இடத்தினையும் அமைச்சர் ஆய்வு செய்தார்.

அமைச்சருடன் தஞ்சை கலெக்டர் அண்ணாதுரை, நெடுஞ்சாலை துறை கோட்ட பொறியாளர் சரவண செல்வன், உதவி செயற்பொறியாளர் இந்திராகாந்தி, முன்னாள் எம்.எல்.ஏ. ராம்குமார், முன்னாள் ஒன்றியக்குழு தலைவர் கோபிநாதன், மாவட்ட கூட்டுறவு ஒன்றிய தலைவர் மோகன், தாசில்தார் மாணிக்கராஜ், ஆணையர் நாராயணன், வட்ட வழங்கல் அலுவலர் பூங்கொடி, கூட்டுறவு சங்க நிர்வாகிகள் ஜாகீர் உசேன், முருகதாஸ், முருகானந்தம், பழனிச்சாமி ஆகியோர் உடன் சென்றனர். 

மேலும் செய்திகள்