அசுத்தமான குடிநீரை குடித்த 3 பேர் பலி; 45 பேருக்கு மருத்துவமனைகளில் சிகிச்சை

பத்ராவதி தாலுகா மைதோளலு கிராமத்தில் அசுத்தமான குடிநீரை குடித்த 3 பேர் பலியானார்கள். 45 பேர் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகிறார்கள்.

Update: 2018-02-12 23:45 GMT
சிவமொக்கா,

இதனால் தண்ணீரை சுத்திகரித்த பின்னர் மக்களுக்கு வினியோகம் செய்யுமாறு கிராம பஞ்சாயத்து நிர்வாகத்துக்கு மாவட்ட சுகாதாரத்துறை அதிகாரி உத்தரவிட்டுள்ளார்.

சிவமொக்கா மாவட்டம் பத்ராவதி தாலுகாவிற்கு உட்பட்டது மைதோளலு கிராமம். இந்த கிராமத்தில் மேல்நிலை நீர்த்தேக்கத்தொட்டி அமைக்கப்பட்டுள்ளது. அந்த தொட்டியில் இருந்து குடிநீருக்காக மக்களுக்கு தண்ணீர் வினியோகம் செய்யப்பட்டு வருகிறது. அந்த மேல்நிலை நீர்த்தேக்கத்தொட்டி பஞ்சாயத்து நிர்வாகம் சார்பில் பராமரிக்கப்பட்டு வருகிறது.

மேலும் கிராம மக்கள், கிராமத்தில் அமைந்திருக்கும் ஒரு கோவிலுக்கு பின்புறம் உள்ள குளத்தில் இருந்து தண்ணீர் எடுத்து அதை குடிநீருக்காக பயன்படுத்தி வந்தனர். இந்த நிலையில் கடந்த 4 நாட்களுக்கு முன்பு மேல்நிலை நீர்த்தேக்கத்தொட்டியில் இருந்து மக்களுக்கு தண்ணீர் வினியோகம் செய்யப்பட்டது.

அந்த தண்ணீரை குடித்த அதே கிராமத்தைச் சேர்ந்த விவசாயியான சிவப்பா(வயது 75), அவருடைய மகன் அனுமந்தப்பா(45) மற்றும் பஞ்சப்பா ஆகியோருக்கு உடல்நலக்குறைவு ஏற்பட்டது. பின்னர் திடீரென வாந்தி, மயக்கம் ஏற்பட்டு 3 பேரும் மயக்கம் அடைந்தனர். இதைப்பார்த்து அதிர்ச்சி அடைந்த கிராம மக்கள் அவர்கள் 3 பேரையும் மீட்டு சிகிச்சைக்காக அரசு ஆஸ்பத்திரியில் அனுமதித்தனர். அங்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டும் சிவப்பா உள்பட 3 பேரும் பரிதாபமாக இறந்தனர். இதனால் கிராம மக்கள் பீதி அடைந்தனர். அசுத்தமான குடிநீர் வினியோகம் செய்யப்பட்டதாகவும், அதை குடித்ததாலேயே 3 பேரும் இறந்துவிட்டதாகவும் கூறி அவர்கள் குற்றம்சாட்டினர்.

இதற்கிடையே நேற்று முன்தினம் அந்த தண்ணீரைக் குடித்த மேலும் 45 பேர் உடல்நலக்குறைவால் பாதிக்கப்பட்டனர். அவர்களுக்கும் திடீரென வாந்தி-மயக்கம் ஏற்பட்டது. இதையடுத்து அவர்கள் அனைவரும் பத்ராவதியில் உள்ள தனியார் மருத்துவமனைகளில் சேர்க்கப்பட்டனர். அங்கு அவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இதில் 12 பேரின் நிலைமை கவலைக்கிடமாக உள்ளதாக டாக்டர்கள் தெரிவித்தனர்.

இந்த நிலையில் நேற்று கிராமத்தில் தண்டோரா மூலம் குடிநீரை அனைவரும் காய்ச்சி வடிகட்டி குடிக்குமாறு அறிவுறுத்தப்பட்டது. மேலும் கோவில் குளத்தில் இருந்து யாரும் தண்ணீரை எடுத்து பயன்படுத்த வேண்டாம் என்று தெரிவிக்கப்பட்டது.

இதற்கிடையே மேல்நிலை நீர்த்தேக்கத்தொட்டியில் உள்ள தண்ணீரை குளோரின் போட்டு சுத்தப்படுத்தி சுத்திகரித்த பின்னர் மக்களுக்கு வினியோகம் செய்யுமாறு மாவட்ட சுகாதாரத்துறை அதிகாரி அனுமந்தப்பா, கிராம பஞ்சாயத்து நிர்வாகத்துக்கு உத்தரவிட்டுள்ளார். அசுத்தமான குடிநீர் குடித்த 3 பேர் பலியாகி விட்டதும், மேலும் 45 பேர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருப்பதும் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.'

மேலும் செய்திகள்