கள்ளக்காதலுக்கு இடையூறாக இருந்ததால் விவசாயியை அடித்துக்கொன்று உடல் தீ வைத்து எரிப்பு

திட்டச்சேரி அருகே கள்ளக்காதலுக்கு இடையூறாக இருந்ததால் விவசாயியை அடித்துக்கொன்று உடல் தீ வைத்து எரிக்கப்பட்டது. இதுதொடர்பாக அவரது மனைவி மற்றும் கள்ளக்காதலனை போலீசார் கைது செய்தனர்.

Update: 2018-02-12 23:00 GMT
திட்டச்சேரி,

புதுச்சேரி மாநிலம் காரைக்கால் மாவட்டம் ஊழியபத்து மெயின்ரோடு பகுதியை சேர்ந்தவர் மகேந்திரன்(வயது 38). விவசாயி. இவருக்கு கீதா(36) என்ற மனைவியும், கோமதி(8), அனுஷ்கா(6) என்ற 2 மகள்களும் உள்ளனர். மகேந்திரனுக்கு நாகை மாவட்டம் திட்டச்சேரியை அடுத்த அருள்மொழிதேவன் பகுதியில் இரண்டு ஏக்கர் நிலம் உள்ளது. இவருடைய நிலத்தின் அருகிலேயே அவரது சகோதரர்களின் நிலமும் உள்ளது.

இந்த நிலையில் மகேந்திரன் நேற்று முன்தினம் வயலுக்கு தண்ணீர் பாய்ச்சி விட்டு வருவதாக வீட்டில் கூறிவிட்டு சென்றார். பின்னர் அவர் வீடு திரும்பவில்லை. இதனால் சந்தேகம் அடைந்த அவரது மனைவி கீதா மற்றும் சகோதரர்கள் வயலுக்கு சென்று பார்த்தனர்.

அப்போது நரிதின்ன வாய்க்கால் கரையில் மகேந்திரனின் உடல் எரிந்த நிலையில் கிடந்தது. இதுகுறித்து திட்டச்சேரி போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அதன் பேரில் நாகூர் போலீஸ் இன்ஸ்பெக்டர் குலோத்துங்கன், திட்டச்சேரி போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர்கள் மணிமேகலை, மகாதேவன் மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று மகேந்திரனின் உடலை கைப்பற்றினர்.

மகேந்திரனின் தலையில் கட்டையால் தாக்கியதில் காயம் ஏற்பட்டு ரத்தம் வெளியேறி இருந்தது தெரிய வந்தது. இதனால் யாரோ மகேந்திரனை கட்டையால் தாக்கி கொலை செய்து விட்டு, உடல் அடையாளம் தெரியாமல் இருக்க தீவைத்து எரித்தது தெரிய வந்தது. பின்னர் போலீசார், மகேந்திரனின் உடலை பிரேத பரிசோதனைக்காக நாகை அரசு மருத்துவ மனைக்கு அனுப்பி வைத்தனர்.

தொடர்ந்து போலீசார் நடத்திய விசாரணையில் நேற்று முன்தினம் மகேந்திரன் வயலுக்கு சென்றபோது, ஊழியப்பத்து படுகை பகுதியை சேர்ந்த கொத்தனார் வேலை பார்த்து வரும் ஹரிஹரனும்(30) உடன் சென்றது தெரிய வந்தது. இதையடுத்து போலீசார் ஹரிஹரனை பிடித்து விசாரித்தனர்.

போலீசாரின் தீவிர விசாரணையில் பல்வேறு திடுக்கிடும் தகவல்கள் வெளியானது. இதுகுறித்து போலீஸ் தரப்பில் கூறியதாவது:-

கொலை செய்யப்பட்ட மகேந்திரன் மனைவி கீதாவுக்கும், ஹரிஹரனுக்கும் இடையே கடந்த 2 ஆண்டுகளாக கள்ளத்தொடர்பு இருந்து வந்துள்ளது. இதனை அறிந்த மகேந்திரன் பலமுறை கீதாவை கண்டித்துள்ளார். ஆனாலும் அதை பொருட்படுத்தாமல் இருவரும் தொடர்ந்து பழகி வந்துள்ளனர். அதனால் இருவரையும் மகேந்திரன் கடுமையாக எச்சரித்துள்ளார். இதையடுத்து தங்களது கள்ளத்தொடர்புக்கு மகேந்திரன் இடையூறாக இருந்ததால் அவரை கொலை செய்ய ஹரிஹரனும், கீதாவும் திட்டமிட்டனர்.

அதன்படி சம்பவத்தன்று மகேந்திரன் வயலுக்கு சென்றபோது, ஹரிஹரனும் அவருடன் சென்றுள்ளார். அப்போது வயலில் நீர் இறைக்கும் என்ஜினுக்காக டீசல் வாங்கி சென்றுள்ளனர். நரிதின்ன வாய்க்கால் கரையில் சென்று கொண்டிருந்தபோது திடீரென ஹரிஹரன், மகேந்திரனின் தலையில் கட்டையால் தாக்கியுள்ளார். இதில் ரத்த வெள்ளத்தில் அவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளார். இதனையடுத்து என்ஜினுக்கு ஊற்ற எடுத்து சென்ற டீசலை மகேந்திரன் உடலின் மீது ஊற்றி தீ வைத்துவிட்டு ஹரிஹரன் அங்கிருந்து தப்பி சென்றுள்ளார்.

இவ்வாறு போலீசார் தெரிவித்தனர்.

இதுகுறித்து திட்டச்சேரி போலீசார் வழக்குப்பதிவு செய்து மகேந்திரன் மனைவி கீதாவையும், அவரது கள்ளக்கதலன் ஹரிஹரனையும் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

கள்ளக்காதலுக்கு இடையூறாக இருந்ததற்காக விவசாயியை மனைவி தனது கள்ளக்காதலனுடன் சேர்ந்து தீர்த்து கட்டிய சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. 

மேலும் செய்திகள்