மணிமுத்தாறு பிரதான கால்வாயில் இருந்து 16-ந் தேதி முதல் தண்ணீர் திறக்கப்படும்

மணிமுத்தாறு பிரதான கால்வாயில் இருந்து 4-வது ரீச் 10-வது மடைக்கு 16-ந் தேதி முதல் தண்ணீர் திறக்கப்படும் என சமாதான கூட்டத்தில் அதிகாரிகள் தெரிவித்தனர்.

Update: 2018-02-12 22:30 GMT
நாங்குநேரி,

நெல்லை மாவட்டம் நாங்குநேரி தாலுகா அச்சம்பாடு, இட்டமொழி, சுவிசேஷபுரம், கடையன்குளம், வாகைநேரி, மகாதேவன்குளம், எருமைகுளம், கடைகுளம், ஆயன்குளம் ஆகிய குளங்களில் தண்ணீர் இல்லாமல், நெற்பயிர்கள் கருகின. எனவே மணிமுத்தாறு 4-வது ரீச் பாசனத்தை சேர்ந்த இந்த குளங்களுக்கு மணிமுத்தாறு அணை தண்ணீர் திறந்து விடக்கோரி இப்பகுதி விவசாயிகள் கோரிக்கை விடுத்தனர்.

இதையடுத்து கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் மணிமுத்தாறு அணையில் இருந்து தண்ணீர் திறந்துவிட தமிழக அரசு உத்தரவிட்டது. ஆனால் அதிகாரிகள் அதற்குரிய நடவடிக்கை எடுக்கவில்லை எனவும், இதனால் குளங்களுக்கு தண்ணீர் வரவில்லை எனவும் விவசாயிகள் குற்றம் சாட்டினர்.

இந்த நிலையில் அந்த குளத்து பாசனம் மூலம் விவசாயம் செய்து வரும் விவசாயிகள், உடனடியாக தண்ணீர் கேட்டு சாலைமறியல் போராட்டம் நடத்த முடிவு செய்தனர். அதன்படி நேற்று காலை நாங்குநேரி அருகே மன்னார்புரத்தில் நெல்லை- திசையன்விளை ரோட்டில் மறியல் போராட்டம் நடத்த விவசாயிகள் திரண்டு சென்றனர்.

இதுபற்றிய தகவல் அறிந்ததும் அதிகாரிகள் விரைந்து சென்று அவர்களை தடுத்து நிறுத்தினர். பின்னர் பேச்சுவார்த்தைக்காக, அவர்களை நாங்குநேரி தாலுகா அலுவலகத்துக்கு அழைத்துச் சென்றனர்.

அங்கு தாசில்தார் ஆதிநாராயணன் தலைமையில் சமாதான கூட்டம் நடந்தது. கூட்டத்தில் மண்டல துணை தாசில்தார் பாலசுப்பிரமணியன், வருவாய் ஆய்வாளர் சுஜாதா, பொதுப்பணித்துறை உதவி என்ஜினீயர் ரமேஷ், திசையன்விளை போலீஸ் இன்ஸ்பெக்டர் ஆன்டனி, மூலைக்கரைப்பட்டி சப்-இன்ஸ்பெக்டர் விஜயகுமார், வட்டார வளர்ச்சி அலுவலர் முத்துலட்சுமி, கிராம நிர்வாக அலுவலர்கள் ராம்குமார், செல்வகுமார், மகா அரிச்சந்திரன், வெள்ள உபரிநீர் கால்வாய் மேம்பாட்டு விவசாயிகள் சங்க தலைவர் முத்துக்குட்டி, செயலாளர் சுதாகர் பாலாஜி மற்றும் விவசாய சங்க தலைவர்கள் மகராஜன், சுப்பிரமணியன், அருள் மாணிக்கம், முருகையா, கோவிந்தன் உள்பட பலர் கலந்துகொண்டனர்.

கூட்டத்தில், இதுதொடர்பாக உடனடி தீர்வு காண நெல்லை பொதுப்பணித்துறை உயர் அதிகாரிகளிடம் முறையிட முடிவு செய்யப்பட்டு, பின்னர் அனைத்து விவசாயிகளும் பாளையங்கோட்டைக்கு புறப்பட்டுச் சென்றனர்.

அதன்படி பாளையங்கோட்டை பொதுப்பணித்துறை அலுவலகத்துக்கு சென்ற விவசாய சங்க பிரதிநிதிகள் மற்றும் விவசாயிகள், மணிமுத்தாறு பாசன பொறியாளர் சுப்பிரமணியன் உள்ளிட்ட அதிகாரிகள் குழுவினரை சந்தித்தனர். பின்னர் அங்கு நடந்த சமாதான கூட்டத்தில் விவசாய சங்க பிரதிநிதிகள் பலர் கலந்துகொண்டு தங்களது கோரிக்கையை வலியுறுத்தினர்.

அதனை தொடர்ந்து, மணிமுத்தாறு பிரதான கால்வாயில் இருந்து 4-வது ரீச் 10-வது மடைக்கு வருகிற 16-ந் தேதி(வெள்ளிக்கிழமை) முதல் தண்ணீர் திறக்கப்படும் என அதிகாரிகள் உறுதி அளித்தனர். இதை தொடர்ந்து விவசாயிகளின் போராட்டம் ஒத்தி வைக்கப்பட்டது.

மேலும் செய்திகள்