மதுரையில் விவசாயிகள் திடீர் மறியல்

மதுரையில் வைகை அணையில் இருந்து பாசனத்துக்கு தண்ணீர் திறந்து விடக்கோரி விவசாயிகள் திடீர் மறியல் செய்தனர்.

Update: 2018-02-12 22:00 GMT
மதுரை,

வைகை அணையில் இருந்து பாசனத்துக்கு தண்ணீர் திறந்து விடக்கோரி விவசாயிகள் நேற்று காலை தல்லாகுளத்தில் உள்ள பொதுப்பணித்துறை அலுவலகத்திற்கு திரண்டு வந்தனர். தங்களது கையில் கருகிய பயிர்களையும் கொண்டு வந்தனர். அங்கு அவர்கள் அதிகாரிகளை சந்திக்க அனுமதி கேட்டனர். ஆனால் அனுமதி மறுக்கப்பட்டது. இதனால் விவசாயிகள் கோஷம் எழுப்பினர். அதன்பின்னரும் விவசாயிகளுடன் பேச்சுவார்த்தை நடத்த எந்த அதிகாரியும் வரவில்லை. சுமார் 1 மணி நேரம் காத்திருந்த விவசாயிகள், விரக்தி அடைந்து அங்கிருந்து ஊர்வலமாக கிளம்பி தமுக்கம் தமிழன்னை சிலைக்கு வந்தனர். அங்கு அவர்கள் திடீரென்று சாலையில் அமர்ந்து மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். துணை போலீஸ் கமிஷனர் சசி மோகன் தலைமையில் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர். அவர்கள் விவசாயிகளுடன் தொடர்ந்து பேச்சுவார்த்தை நடத்தினர். ஆனால் விவசாயிகள் கலைந்து செல்ல மறுத்து விட்டனர். பின்னர் போலீசார், விவசாயிகளை வலுக்கட்டாயமாக வண்டியில் ஏற்றினர். ஒரு சிலர் வாகனத்தில் ஏற மறுத்து அங்கிருந்து கிளம்பி சென்றனர். இறுதியாக 136 விவசாயிகளை போலீசார் கைது செய்து அழைத்து சென்றனர். அதன்பின், அந்த பகுதியில் போக்குவரத்து மீண்டும் தொடங்கியது. 

மேலும் செய்திகள்