கெங்குவார்பட்டி பேரூராட்சியில் துப்புரவு பணியாளர்களுக்கு குறைவான சம்பளம் கலெக்டரிடம் புகார்

கெங்குவார்பட்டி பேரூராட்சியில் துப்புரவு பணியாளர்களுக்கு குறைவான சம்பளம் வழங்கப்படுவதாக கலெக்டரிடம் துப்புரவு பணியாளர்கள் புகார் தெரிவித்தனர்.

Update: 2018-02-12 21:30 GMT
தேனி

தேனி மாவட்டம் கெங்குவார்பட்டி பேரூராட்சி பகுதியை சேர்ந்த தினக்கூலி அடிப்படையில் வேலை பார்க்கும் பெண் துப்புரவு பணியாளர்கள் சிலர் நேற்று கலெக்டர் அலுவலகத்துக்கு வந்தனர். அவர்கள் மாவட்ட கலெக்டர் வெங்கடாசலத்திடம் ஒரு மனு அளித்தனர்.

அந்த மனுவில் கூறப்பட்டு உள்ளதாவது:-

நாங்கள் தினக்கூலி அடிப்படையில் துப்புரவு பணியாளர்களாக பணியாற்றி வருகிறோம். கடந்த 2014-ம் ஆண்டு செப்டம்பர் மாதம் முதல் பணியாற்றி வரும் எங்களுக்கு மாத சம்பளமாக ரூ.4,500 மட்டுமே வழங்கப்படுகிறது. தற்போதைய விலைவாசி உயர்வின் காரணமாக மிகுந்த சிரமத்துடன் வாழ்ந்து வருகிறோம்.

சம்பளத்தை உயர்த்தி வழங்கக்கோரி பலமுறை கேட்டதால் ஊதிய உயர்வுக்கு உத்தரவுகள் பிறப்பிக்கப்பட்டன. இருப்பினும் அந்த உத்தரவை இதுவரை நடைமுறைப்படுத்தாமல் காலம் தாழ்த்தி வருகின்றனர். எனவே ஊதியத்தை உயர்த்தி வழங்க வேண்டும்.

இவ்வாறு அதில் கூறியுள்ளனர்.

மேலும் அந்த பெண் பணியாளர்கள் கூறுகையில், ‘2016-2017-ம் நிதியாண்டில் துப்புரவு பணியாளர்களுக்கு ரூ.233 தினக்கூலி என்று நிர்ணயம் செய்யப்பட்டது. பின்னர், இந்த தினக்கூலியை ரூ.300 என உயர்த்தி மாவட்ட கலெக்டர் செயல்முறை உத்தரவு பிறப்பித்தார். ஆனால், தினக்கூலியாக ரூ.150 வீதம் வழங்கப்படுகிறது. அதுவும் ஏதோ நோட்டில் கையெழுத்து வாங்கி விட்டு கையில் கொடுத்து விடுகிறார்கள்’ என்றனர். இதுகுறித்து விசாரணை நடத்தி உரிய நடவடிக்கை எடுப்பதாக கலெக்டர் தெரிவித்தார்.

மேலும் செய்திகள்