பிரதமர் மோடியை கண்டித்து பக்கோடா தயாரித்து விற்பனை செய்யும் போராட்டம்

பிரதமர் மோடியை கண்டித்து திருச்சியில் இளைஞர் காங்கிரசார் பக்கோடா தயாரித்து விற்பனை செய்யும் போராட்டம் நடத்தினார்கள்.

Update: 2018-02-12 23:00 GMT
திருச்சி,

படித்த இளைஞர்கள் வேலை இல்லா திண்டாட்டத்தை போக்க பக்கோடா விற்பனை செய்யலாம் என பிரதமர் நரேந்திர மோடி பேசியதை கண்டித்தும், கிண்டல் செய்தும் காங்கிரசார் நாடு முழுவதும் பல்வேறு போராட்டங்களை நடத்தி வருகிறார்கள். திருச்சி மாவட்ட காங்கிரஸ் கட்சி அலுவலகமான அருணா சல மன்ற வளாகத்தில் நேற்று இளைஞர் காங்கிரஸ் சார்பில் பிரதமர் மோடியை கண்டித்து பக்கோடா தயாரித்து விற்பனை செய்யும் போராட்டம் நடைபெற்றது.

இதற்காக அங்கு கியாஸ் சிலிண்டர் மற்றும் அடுப்பு கொண்டு வரப்பட்டு மகளிர் காங்கிரஸ் மாநில செயலாளர் ஜெகதீஸ்வரி உள்ளிட்ட நிர்வாகிகள் பக்கோடா மாவை பிசைந்து அதனை எண்ணெய் சட்டியில் போட்டு பக்கோடா தயாரித்தனர். பின்னர் அதனை சிறு சிறு பாக்கெட்டுகளாக கட்டினார்கள். தமிழ்நாடு இளைஞர் காங்கிரஸ் மாநில துணை தலைவர் விச்சு என்கிற லெனின் பிரசாத் பட்டமளிப்பு விழாவில் அணியும் கருப்பு நிற அங்கி அணிந்து தலையில் தொப்பி வைத்துக்கொண்டு பக்கோடா விற்பனை செய்தார்.

அவர்கள் கட்சி அலுவலகத்திற்கு வெளியே விற்பனை செய்ய வந்த போது போலீசார் அவர்களை கயிறு கட்டி தடுத்து நிறுத்தினார்கள். இதனால் போலீசாருக்கும், அவர்களுக்கும் இடையே வாய்த்தகராறு ஏற்பட்டது. பின்னர் போராட்டத்தில் பங்கேற்ற அனைவருக்கும் பக்கோடாவும், டீயும் வினியோகம் செய்யப்பட்டது.

காங்கிரஸ் மாநில துணை தலைவர் சுப.சோமு, மாவட்ட தலைவர்கள் ஜவகர், கலை, முன்னாள் மாவட்ட தலைவர்கள் ஜெரோம் ஆரோக்கிய ராஜ், சரவணன், இளைஞர் காங்கிரஸ் மாவட்ட தலைவர் பிரேம் மற்றும் விமல், மணிகண்டன், மகேந்திரன், ஹரி, தினேஷ் உள்பட நிர்வாகிகள் பலர் இதில் கலந்து கொண்டனர். 

மேலும் செய்திகள்