அம்மிக்குழவியை தூக்கிப் போட்டு தொழிலாளியை கொன்ற மனைவி

பாளையங்கோட்டை அருகே மதுபோதையில் தகராறு செய்த தொழிலாளி மீது அம்மிக்குழவியை தூக்கிப்போட்டு கொலை செய்த மனைவியை போலீசார் கைது செய்தனர்.

Update: 2018-02-11 23:26 GMT
நெல்லை,

பாளையங்கோட்டை அருகே உள்ள கிருஷ்ணாபுரம் சிங்நகரை சேர்ந்தவர் உடையார். அவருடைய மகன் ஆறுமுகம் (வயது 43), கட்டிட தொழிலாளி. இவருக்கு முத்துலட்சுமி(34) என்ற மனைவியும், நாகஜோதி (15) என்ற மகளும், நாகராஜன் (14) என்ற மகனும் உள்ளனர்.

முத்துலட்சுமி கூலி வேலை பார்த்து வருகிறார். நாக ஜோதி 9-ம் வகுப்பு படித்து வருகிறார். நாகராஜன் பள்ளிக்கூடம் செல்லவில்லை.

ஆறுமுகத்துக்கு மதுகுடிக்கும் பழக்கம் இருந்ததாக தெரிகிறது. அவர் மது குடித்து விட்டு மனைவியிடம் அடிக்கடி தகராறு செய்து வந்ததாக கூறப்படுகிறது.

நேற்று மாலையில் முத்துலட்சுமி வீட்டில் இருந்தபோது அங்கு வந்த ஆறுமுகம் மனைவியிடம் தகராறு செய்து அவரை அடித்து உதைத்ததாக கூறப்படுகிறது. இதில் ஆத்திரம் அடைந்த முத்துலட்சுமி அருகில் கிடந்த கம்பால் கணவர் ஆறுமுகத்தை சரமாரியாக தாக்கியதாக கூறப்படுகிறது. கீழே விழுந்த ஆறுமுகம் மீது அம்மிக்குழவி கல்லை தூக்கி முத்துலட்சுமி போட்டதாக தெரிகிறது. இதில் படுகாயம் அடைந்த ஆறுமுகம் சம்பவ இடத்திலேயே துடிதுடித்து பரிதாபமாக இறந்தார். கணவர் இறந்தவுடன் முத்துலட்சுமி அங்கிருந்து தப்பி ஓடிவிட்டார்.

இந்தநிலையில் வெளியே சென்று இருந்த நாகஜோதி வீட்டுக்கு வந்தார். வீட்டின் முன்பாக தனது தந்தை இறந்து கிடந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்தார். அவரது உடலை பார்த்து கதறி அழுதார்.

தகவல் அறிந்த தாழையூத்து துணை போலீஸ் சூப்பிரண்டு பொன்னரசு, சிவந்திப்பட்டி போலீஸ் இன்ஸ்பெக்டர் செல்வி மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து பார்வையிட்டனர். ஆறுமுகம் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். இதுகுறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து முத்துலட்சுமியை கைது செய்தனர்.

கணவரை மனைவியே அடித்துக் கொன்ற சம்பவம் அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.

மேலும் செய்திகள்