அடையாளம் தெரியாத வாகனம் மோதியது மோட்டார் சைக்கிளில் சென்ற போலீஸ் ஏட்டு பலி

பொறையாறு அருகே அடையாளம் தெரியாத வாகனம் மோதி மோட்டார் சைக்கிளில் சென்ற போலீஸ் ஏட்டு பலியானார். சப்-இன்ஸ்பெக்டர் உள்பட 2 பேர் படுகாயம் அடைந்தார்.

Update: 2018-02-11 23:00 GMT
பொறையாறு,

நாகை மாவட்டம் மயிலாடுதுறை பெரியதைக்கால் தெருவை சேர்ந்தவர் சுப்பிரமணியன் (வயது 57). இவர் பொறையாறு போலீஸ் நிலையத்தில் சப்-இன்ஸ்பெக்டராக பணியாற்றி வருகிறார். இதே போலீஸ் நிலையத்தில் சித்தர்காடு பிரசாந்திபுரம் பகுதியை சேர்ந்த இளங்கோவன் (54) என்பவர் ஏட்டாக பணியாற்றி வந்தார். இவர்கள் இருவரும் நேற்று முன்தினம் இரவு பணியில் இருந்தனர். அப்போது பொறையாறு அருகே காழியப்பநல்லூர் பகுதியில் ஒரு வீட்டில் திருட முயற்்சி செய்தவரை கிராம மக்கள் பிடித்து வைத்துள்ளதாக நேற்று அதிகாலை இவர்களுக்கு தகவல் கிடைத்தது. இதைத்தொடர்ந்து போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் சுப்பிரமணியன், ஏட்டு இளங்கோவன் ஆகியோர் ஒரு மோட்டார் சைக்கிளில் காழியப்பநல்லூருக்கு சென்றனர். பின்னர் திருட முயன்றவரை பிடித்து விசாரணைக்காக மோட்டார் சைக்கிளின் நடுவில் உட்கார வைத்து பொறையாறு போலீஸ் நிலையத்தை நோக்கி 3 பேரும் சென்று கொண்டிருந்தனர். மோட்டார் சைக்கிளை சப்- இன்ஸ்பெக்டர் சுப்பிரமணி யன் ஓட்டி சென்றார்.

காழியப்பநல்லூர் கிராமத்தில் சென்றபோது சீர்காழியில் இருந்து காரைக்காலை நோக்கி சென்ற அடையாளம் தெரியாத வாகனம் மோட்டார் சைக்கிள் மீது மோதிவிட்டு நிற்காமல் சென்று விட்டது. இதனால் மோட்டார் சைக்கிள் நிலைதடுமாறி அருகில் இருந்த பனை மரத்தில் மோதியது. இதில் மோட்டார் சைக்கிளின் பின்னால் உட்கார்ந்து இருந்த ஏட்டு இளங்கோவன் பலத்த காயம் அடைந்து ரத்த வெள்ளத்தில் சம்பவ இடத்திலேயே பலியானார். சப்-இன்ஸ்பெக்டர் சுப்பிரமணியன் மற்றும் அவர்கள் பிடித்து கொண்டு வந்த முருகன் ஆகிய இருவரும் படுகாயமடைந்தனர்.

இதுகுறித்து தகவல் அறிந்த பொறையாறு போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து பொது மக்கள் உதவியுடன் விபத்தில் பலியான இளங்கோவனின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக மயிலாடுதுறை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். படுகாயம் அடைந்த சப்-இன்ஸ்பெக்டர் சுப்பிரமணியனை மீட்டு சிகிச்சைக்காக தஞ்சையில் உள்ள தனியார் ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். மேலும் விசாரணைக்கு அழைத்து வரப்பட்ட முருகன் என்பவரை சிகிச்சைக்காக மயிலாடுதுறை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். இதுகுறித்து பொறையாறு போலீசார் வழக்குப்பதிவு செய்து, மோட்டார் சைக்கிள் மீது மோதிவிட்டு நிற்காமல் சென்ற அடையாளம் தெரியாத வாகனத்தையும் அதன் டிரைவரையும் தேடி வருகிறார்கள். பலியான போலீஸ் ஏட்டு இளங்கோவனுக்கு ராணி என்ற மனைவி உள்ளார். இவர் மயிலாடுதுறை அருகே மணல்மேடு புத்தமங்கலம் கிராமத்தில் ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளியில் ஆசிரியையாக பணியாற்றி வருகிறார். இவர்களுக்கு இலக்கியா, ரஞ்சனி, கலைவாணி ஆகிய மகள்களும், ஜெயச்சந்திரன் என்ற மகனும் உள்ளனர். 

மேலும் செய்திகள்