பாரதியார் பல்கலைக்கழகத்தில் டாக்டர் பட்டம் வழங்க மாணவர்களிடம் பணம் வசூல், இடைத்தரகர்களாக செயல்பட்டவர்கள் சிக்குகிறார்கள்

டாக்டர் பட்டம் வழங்க கோவை பாரதியார் பல்கலைக்கழகத்தில் மாணவர்களிடம் பணம் வசூலித்ததாக புகார் செய்யப்பட்டுள்ளது. இதற்கு இடைத்தரகர்களாக செயல்பட்டவர்களிடம் விசாரணை நடத்த லஞ்ச ஒழிப்பு போலீஸ் அதிகாரிகள் முடிவு செய்துள்ளனர்.

Update: 2018-02-11 22:15 GMT
கோவை,

கோவை பாரதியார் பல்கலைக்கழக உதவி பேராசிரியர் சுரேஷ் என்பவரிடம் ரூ.30 லட்சம் லஞ்சம் வாங்கிய வழக்கில் துணைவேந்தர் கணபதி, பேராசிரியர் தர்மராஜ் ஆகியோரை லஞ்ச ஒழிப்பு போலீசார் கைது செய்தனர். தற்போது அவர்கள் இருவரும் கோவை மத்திய சிறையில் உள்ளனர். அத்துடன் அவர்கள் இருவரும் பணியிடை நீக்கமும் செய்யப்பட்டு உள்ளனர்.

இதற்கிடையே, பல்கலைக்கழகத்தில் கடந்த 2016-ம் ஆண்டு பேராசிரியர்கள் பணி நியமனத்தில் நடந்த முறைகேடுகள் குறித்து லஞ்ச ஒழிப்பு போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள். பல்கலைக்கழகத்தில் 3 முறை லஞ்ச ஒழிப்பு போலீசார் நடத்திய சோதனையில் இது தொடர்பாக ஏராளமான ஆவணங்கள் சிக்கின.

ஏற்கனவே பணி நியமனத்தில் நடந்த முறைகேடுகள் தொடர்பாக அரசுக்கு பல்வேறு புகார்கள் சென்றன. பேராசிரியர் பணிக்கு 1,462 பேர் விண்ணப்பித்திருந்தனர். இவர்களில் ரூ.30 லட்சம் முதல் ரூ.40 லட்சம் வரை கொடுத்தவர்களுக்கு மட்டுமே பணி வழங்கியதாக நேர்முக தேர்வில் பங்கேற்றவர்கள் புகார் கூறியிருந்தனர். அவர்களிடமும் போலீசார் விசாரணை நடத்தினர். கோவை கவுண்டம்பாளையத்தில் உள்ள லஞ்ச ஒழிப்பு அலுவலகத்தில் இந்த விசாரணை நடைபெற்றது.

இதில் துணைவேந்தர் கணபதிக்கு இடைத்தரகராக செயல்பட்டவர்கள் பற்றி விவரங்கள் போலீசாருக்கு கிடைத்தது. அதன் அடிப்படையில் இடைத்தரகராக செயல்பட்டவர்களின் பட்டியல் சேகரிக்கப்பட்டு உள்ளது. அவர்களிடம் இன்னும் ஓரிரு நாட்களில் விசாரணை நடத்த லஞ்ச ஒழிப்பு போலீசார் திட்டமிட்டுள்ளனர்.

பல்கலைக்கழகத்தில் டாக் டர் பட்டம் வழங்க மாணவர்களிடம் லட்சக்கணக்கான ரூபாய் வசூலிக்கப் பட்டதாக புகார் எழுந்துள்ளது. பல்கலைக்கழகத்தில் உள்ள பல்வேறு துறைகளில் ஏராளமான மாணவர்கள் பி.எச்.டி. படித்து வருகின்றனர். இவர்கள் பலரிடம் துணைவேந்தர் உள்ளிட்டவர்கள் இடைத்தரகர்கள் மூலம் பணம் வசூல் செய்ததாக கூறப்படுகிறது.இதனால் அவர்கள் சிக்குவார்கள் என்று தெரிகிறது.

குறிப்பாக கல்வியியல் துறையில் பி.எச்.டி. பட்டம் முடிக்க ஒருவருக்கு ரூ.5 லட்சம் வரை பெறப்பட்டு உள்ளதாக கூறப்படுகிறது. இது தொடர்பாக சமீபத்தில் பி.எச்டி. படித்து முடித்தவர்கள் மற்றும் தற்போது படித்து வருபவர்களிடமும் லஞ்ச ஒழிப்பு போலீஸ் அதிகாரிகள் விசாரணை நடத்த உள்ளனர். 

மேலும் செய்திகள்