புதுவையில் போலீசார் விழிப்புணர்வு சைக்கிள் பேரணி

காவல்துறை- பொதுமக்கள் இடையே நல்லுறவை வலியுறுத்தி போலீசாரின் விழிப்புணர்வு சைக்கிள் பேரணியை டி.ஜி.பி. சுனில் குமார் கவுதம் தொடங்கி வைத்தார்.

Update: 2018-02-10 23:53 GMT
புதுச்சேரி,

காவல்துறையில் அதிகாரியாக பணியாற்றி பல்வேறு சாதனைகளை செய்த கவர்னர் கிரண்பெடி புதுச்சேரியில் பொறுப்பேற்றது முதல் காவல்துறையில் பல்வேறு சீர்திருத்தங்களை மேற்கொள்ளுமாறு அதிகாரிகளுக்கு உத்தரவிட்டுள்ளார். அதன்படி குற்றங்களை கட்டுப்படுத்த காவல்துறையில் பல்வேறு புதிய திட்டங்களை போலீஸ் டி.ஜி.பி. சுனில்குமார் கவுதம் அமல்படுத்தி வருகின்றார்.

இதன் ஒரு பகுதியாக புதுவைக்கு சுற்றுலா வரும் பயணிகளின் பாதுகாப்பை உறுதிப்படுத்தும் விதமாக காவல்துறையில் சுற்றுலா பிரிவு ஏற்படுத்தப்பட்டுள்ளது. ஆண் மற்றும் பெண் காவலர்கள் சைக்கிளில் ரோந்து செல்லும் பணியும் தொடங்கி வைக்கப்பட்டுள்ளது.

இந்தநிலையில் காவல்துறைக்கும், பொதுமக்களுக்கும் இடையே நல்லுறவை மேம்படுத்தவும், குற்றச் சம்பவங்களை தடுக்கவும் புதுச்சேரி நகர மற்றும் கிராமப்புறங்களில் விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில் காவல்துறை சார்பில் 30 கிலோமீட்டர் தூர விழிப்புணர்வு சைக்கிள் பேரணிக்கு ஏற்பாடு செய்யப்பட்டு இருந்தது.

இந்த சைக்கிள் பேரணி நேற்று காலை கடற்கரை சாலையில் உள்ள காவல்துறை தலைமை அலுவலகம் முன்பிருந்து தொடங்கியது. இதை போலீஸ் டி.ஜி.பி. சுனில்குமார் கவுதம் தொடங்கி வைத்தார். இதில் போலீஸ். டி.ஐ.ஜி.க்கள், சீனியர் போலீஸ் சூப்பிரண்டுகள், சூப்பிரண்டுகள், இன்ஸ்பெக்டர்கள், சப்-இன்ஸ்பெக்டர் மற்றும் பீட் ஆபீசர்கள் கலந்து கொண்டனர்.

இந்த பேரணி புஸ்சி வீதி, மறைமலை அடிகள் சாலை, நெல்லித்தோப்பு சிக்னல், இந்திராகாந்தி சிலை, மூலக்குளம், பிச்சவீரன்பேட், அரசூர், வில்லியனூர் எம்.ஜி.ஆர். சிலை, ஒதியம்பட்டு, கொம்பாக்கம், முருங்கப்பாக்கம், மரப்பாலம் வழியாக கடற்கரை காந்திதிடலை அடைந்தது.

பேரணியின் போது வில்லியனூர் திருமண நிலையத்தில் போலீசார், பொதுமக்கள் கலந்துரையாடல் கூட்டம் நடந்தது. இதில் போலீசார் மீதான குறை, நிறைகளை டி.ஜி.பி. சுனில் குமார் கவுதம் கேட்டறிந்தார். இதேபோல் நைனார்மண்டபத்தில் உள்ள தனியார் பள்ளியில் நடைபெற்ற விழிப்புணர்வு நிகழ்ச்சியில் மாணவ-மாணவிகளுடன் கலந்துரையாடினார்.

மேலும் செய்திகள்