தாராபுரம் போலீஸ் நிலையத்தை முற்றுகையிட்ட இந்து முன்னணியினர்

அனுமதியில்லாமல் செயல்படும் வழிபாட்டு தலங்களை அகற்றக்கோரி தாராபுரம் போலீஸ் நிலையத்தை இந்து முன்னணியினர் முற்றுகையிட்டு போராட்டம் நடத்தினார்கள்.

Update: 2018-02-10 22:00 GMT
தாராபுரம்,

இந்து முன்னணி நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் தாராபுரம் போலீஸ் நிலையத்தை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தினார்கள். இந்த முற்றுகை போராட்டம் குறித்து இந்து முன்னணியின் நகர செயலாளர் சங்கிலித்துரை கூறியதாவது:–

 தாராபுரம் நாச்சிமுத்துப்புதூர் குறுக்குத் தெருவில் ஒரு தரப்பினர் வழிபாடு செய்யும் தலம் உள்ளது. இதற்கு முறையான அனுமதி பெறவில்லை. கட்டிடம் கட்டுவதற்கு முன்பு எந்த பயன்பாட்டிற்காக அனுமதி வாங்கப்பட்டதோ, அந்த பயன்பாட்டிற்கு மட்டுமே கட்டிடம் பயன்படுத்த வேண்டும்.

 மதம் மாற்றுவதற்காக இந்த பகுதியில் ஏஜெண்டுகள் நியமிக்கப்பட்டுள்ளனர். இவர்கள் தெருக்களுக்கு சென்று வாகனங்கள் மூலம் அந்த குறிப்பிட்ட வழிபாட்டு தலத்திற்கு அழைத்து செல்கிறார்கள். இதை உடனே தடுத்து நிறுத்த வேண்டும். அனுமதியின்றி செயல்படும் வழிபாட்டு தலங்கள் அனைத்தும் அகற்றப்பட வேண்டும். மதமாற்றத்தில் ஈடுபடுவோர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று ஏற்கனவே கோரிக்கை வைத்திருந்தோம். எந்தவித நடவடிக்கையும் எடுக்காததால் போலீஸ் நிலையத்தை முற்றுகையிட்டோம்.

இவ்வாறு அவர் கூறினார்.

உடனே போலீஸ் இன்ஸ்பெக்டர் முருகேசன் முற்றுகையில் ஈடுபட்டிருந்தவர்களை அழைத்து பேச்சுவார்த்தை நடத்தினார். முறையாக மனு கொடுத்த பிறகு, அதன் அடிப்படையில் உரிய விசாரணை நடத்தி, தகுந்த நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவிக்கப்பட்டது. அதையடுத்து முற்றுகையில் ஈடுபட்டிருந்தவர்கள் கலைந்து சென்றனர்.

மேலும் செய்திகள்