தமிழகத்தில் அனைத்து நியமனங்களிலும் முறைகேடுகள் பரவியுள்ளது டி.டி.வி.தினகரன் பேச்சு

தமிழகத்தில் அனைத்து நியமனங்களிலும் முறைகேடுகள் பரவியுள்ளது என்று டி.டி.வி.தினகரன் கூறினார்.

Update: 2018-02-10 23:15 GMT
தஞ்சாவூர்,

டி.டி.வி.தினகரன் எம்.எல்.ஏ. மக்கள் சந்திப்பு பயணத்தை தஞ்சை மாவட்டத்தில் கடந்த 2-ந் தேதி தஞ்சை வடக்கு மாவட்டத்தில் தொடங்கினர். நேற்று அவர் தனது இரண்டாவது கட்ட சுற்றுப்பயணத்தை தஞ்சை தொகுதியில் தொடங்கினார்.

தஞ்சையை அடுத்த புன்னைநல்லூர் மாரியம்மன் கோவிலில் மக்கள் மத்தியில் அவர் பேசியதாவது:-

தஞ்சை வடக்கு மாவட்டத்தில் நான் மக்கள் சந்திப்பு நிகழ்ச்சியை தொடங்கியபோது மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்தது. அப்போது மக்கள் இந்த ஆட்சிக்கு முடிவு கட்ட வேண்டும் என்றனர். அதேபோல் இந்த மக்கள் விரோத ஆட்சி விரைவில் முடிவுக்கு வரும். மீண்டும் ஜெயலலிதா ஆட்சி வர வேண்டும்.

தமிழகத்தின் நெற்களஞ்சியமான டெல்டா பகுதியில் விவசாயம் தான் முக்கியமானது. ஆனால் விவசாயத்தை பாதிக்கும் வகையில் மத்திய அரசு பல்வேறு திட்டங்களை இங்கு செயல்படுத்தி மீத்தேன், ஹைட்ரோகார்பன், ஷேல் எரிவாயு, கெயில் திட்டங்களில் குழாய் பதிப்பது போன்ற செயல்களை செய்கிறது.

கர்நாடக அரசு முறையாக தண்ணீர் வழங்காத காரணத்தாலும், மழை பெய்தாலும் டெல்டா பகுதி விவசாயிகள் அதிக அளவில் பாதிக்கப்படுகிறார்கள். இந்த திட்டங்களால் வருங்காலத்தில் விவசாயம் இல்லாமல் போய்விடும். கதிராமங்கலம், நெடுவாசல், மன்னார்குடி போன்ற இடங்களில் எல்லாம் விவசாயிகளுக்கு எதிரான திட்டங்களை, விவசாயிகளை பாதிக்கும் திட்டங்களை செயல்படுத்த அனுமதி வழங்கப்படுகிறது. ஜெயலலிதா முதல்-அமைச்சராக இருந்த வரை இந்த திட்டங்களுக்கு அனுமதி அளிக்கவில்லை.

ஜெயலலிதாவின் பெயரை சொல்லி இன்றைக்கு தமிழகத்தில் ஆட்சி செய்பவர்கள், தங்களது ஆட்சி தொடர்ந்தால் போதும், 33 பேரும் பதவியில் இருந்தால் போதும். மக்களை பாதிக்கும் எந்த திட்டத்தையும் மத்திய அரசு கொண்டு வந்தாலும் சரி, அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள், போக்குவரத்து தொழிலாளர் போராட்டம் நடத்தினாலும் சரி, அதையெல்லாம் கண்டு கொள்வதில்லை. இதனால் நீதிமன்றம் தலையிட வேண்டிய சூழ்நிலை ஏற்படுகிறது.

தமிழகத்தில் நிதி இல்லை என்று கூறுகிறார்கள். ஆனால், எம்.எல்.ஏ.க்களுக்கு அவர்களை கேட்காமலேயே சம்பளத்தை ரூ.1 லட்சத்து 5 ஆயிரமாக உயர்த்தி உள்ளனர். காரணம், எம்.எல்.ஏ.க்களை தக்க வைத்துக்கொள்ள வேண்டும் என்பதற்காக. அவர்கள் இருந்தால் தான் இந்த ஆட்சி தொடரும்.

ஜெயலலிதாவின் ஆட்சியை பாதுகாக்க வேண்டும் என போராடிய 18 எம்.எல்.ஏ.க்களின் பதவியை நீக்கம் செய்துள்ளனர். எந்த நேரமும் இது தொடர்பாக நீதிமன்ற தீர்ப்பு வரும். எனவே இந்த ஆட்சி விரைவில் கவிழும்.

தமிழகத்தில் அனைத்து நியமனங்களிலும் முறைகேடுகள் பரவியுள்ளது. துணைவேந்தர் கைது செய்யப்படுகிறார். மந்திரியின் பேச்சை கேட்கவில்லை என்றால் அதிகாரிகளை மாற்றுகிறார்கள். தமிழகத்திற்கு கெட்ட பெயரை இந்த ஆட்சியாளர்கள் ஏற்படுத்துகிறார்கள். இந்திய துணை கண்டத்தில் ஊழலுக்கு பெயர் போன அரசாங்கமாக தமிழக அரசு திகழ்கிறது. வருங்காலத்தில் இந்த அரசாங்கம் பதவி நீக்கம் செய்யப்பட்டு பல வழக்குகளில் நீதிமன்றத்தில் பதில் சொல்ல வேண்டிய நிலை வரும்.

பணம் இருக்கிறது என்பதால் மக்களை விலைக்கு வாங்க முடியாது. 234 தொகுதியிலும் டி.டி.வி. தினகரன் தான் வேட்பாளர் என மக்கள் கருத தொடங்கி விட்டனர். நாங்கள் ஆட்சிக்கு வந்தவுடன் அனைத்து ஏரி, குளங்களை தூர்வாரி, மழைநீரை சேமிக்க நடவடிக்கை எடுப்போம். எனவே தமிழகத்தில் நல்லாட்சி அமைய ஆதரவு அளியுங்கள்.

இவ்வாறு அவர் பேசினார்.

இந்த நிகழ்ச்சியில் டி.டி.வி. தினகரன் அணி பொருளாளர் ரெங்கசாமி, தஞ்சை தெற்கு மாவட்ட செயலாளர் மா.சேகர், மாநில வக்கீல் பிரிவு இணை செயலாளர் தங்கப்பன், அண்ணா தொழிற்சங்க முன்னாள் பொருளாளர் வேங்கை.கணேசன், ஜெயலலிதா பேரவை மாநில இணை செயலாளர் ராஜேஸ்வரன், முன்னாள் துணை மேயர் மணிகண்டன், ஜெயலலிதா பேரவை மாவட்ட செயலாளர் எம்.என்.துரை, தஞ்சை தெற்கு ஒன்றிய செயலாளர் செந்தில்வேலன், மாரியம்மன் கோவில் முன்னாள் ஊராட்சி மன்ற தலைவர் தனசேகர், நிர்வாகிகள் ஒய்.எஸ்.பாலு, மேலவீதி பன்னீர்செல்வம், அய்யாவு மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

மாலையில் கரந்தை சி.ஆர்.சி. டெப்போ, வல்லம் அண்ணாசிலை அருகில், மருங்குளம் கடைத்தெரு, நாஞ்சிக்கோட்டை சாலை அண்ணாநகர் ஆகிய இடங்களில் மக்கள் மத்தியில் அவர் பேசினார்.

மேலும் செய்திகள்