பாதாள சாக்கடைக்குள் வைக்கப்பட்டு இருந்த காய்கறி, பழங்கள் பறிமுதல்

பாதாள சாக்கடைக்குள் வைக்கப்பட்டு இருந்த காய்கறி, பழங்களை பறிமுதல் செய்து மாநகராட்சியினர் நடவடிக்கை எடுத்துள்ளனர்.

Update: 2018-02-10 23:30 GMT
மும்பை,

மும்பை சாந்தாகுருஸ் வக்கோலா பகுதியில் வியாபாரிகள் காய்கறி, பழங்களை பாதாள சாக்கடைக்குள் பதுக்கி வைத்து வெளியே எடுப்பது போன்ற வீடியோ சமீபத்தில் பரவியது. இந்த வீடியோ பொது மக்கள் இடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியது. எனினும் வியாபாரிகள் பாதாள சாக்கடைக்குள் காய்கறி, பழங்களை வைப்பதால் அது கெட்டுபோகாமலும், வாடி வதங்காமலும் இருப்பதாக சாதாரணமாக பதில் அளித்தனர்.

இந்தநிலையில் வக்கோலா பகுதியில் மாநகராட்சி சுகாதாரத்துறையினர் அதிரடி சோதனையை மேற்கொண்டனர். அதிகாரிகளை பார்த்ததும் அங்கு இருந்த வியாபாரிகள் ஓடிவிட்டனர்.

இந்தநிலையில் அதிகாரிகள் அந்த பகுதியில் உள்ள பாதாளசாக்கடையில் இருந்து சுமார் ½ லாரி அளவுக்கு காய்கறி மற்றும் பழங்களை பறிமுதல் செய்தனர். இதுகுறித்து மாநகராட்சி அதிகாரி ஒருவர் கூறுகையில் ‘‘ காய்கறி, பழங்களை பாதாள சாக்கடைக்குள் மறைத்து வைத்து பொது மக்களின் உயிருடன் விளையாடிய வியாபாரிகள் மீது நடவடிக்கை எடுக்கப்படும். அவர்கள் மீது வழக்குப்பதிவு செய்யப்படும் ’’ என்றார்.

சட்டவிரோத நடைபாதை ஆக்கிரமிப்புகளை மாநகராட்சியினர் அகற்ற வரும் நேரங்களில் வியாபாரிகள் காய்கறி, பழங்களை பாதாள சாக்கடைக்குள் மறைத்து வைப்பதை வாடிக்கையாக கொண்டு இருப்பதாகவும் கூறப்படுகிறது. 

மேலும் செய்திகள்