கட்சியில் கடுமையாக உழைப்பவர்களுக்கு உரிய அங்கீகாரம் அளிக்கப்படும் - குமரகுரு எம்.எல்.ஏ. பேச்சு

கட்சியில் கடுமையாக உழைப்பவர்களுக்கு உரிய அங்கீகாரம் அளிக்கப்படும் என்று மணலூர்பேட்டையில் நடந்த அ.தி.மு.க. ஆலோசனை கூட்டத்தில் குமரகுரு எம்.எல்.ஏ. பேசினார்.

Update: 2018-02-10 22:30 GMT
திருக்கோவிலூர்,

முகையூர் மற்றும் மணம்பூண்டி ஒன்றிய அ.தி.மு.க. நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம் திருக்கோவிலூர் அருகே மணம்பூண்டியில் நடைபெற்றது. இதற்கு ஒன்றிய செயலாளர் எஸ்.பழனிச்சாமி தலைமை தாங்கினார். மணலூர்பேட்டை நகர செயலாளர் என்.தங்கவேல், ஒன்றிய அவைத்தலைவர் மேலந்தல் வி.துரைராஜ், முன்னாள் ஒன்றிய துணைசெயலாளர் சொரையப்பட்டு வி.நெடுஞ்செழியன், மாவட்ட பொருளாளர் ராமச்சந்திரன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

முன்னாள் மாவட்ட திட்டக்குழு உறுப்பினரும், முன்னாள் மாவட்ட ஊராட்சிக்குழு உறுப்பினருமான மாரங்கியூர் எம்.இளங்கோவன் வரவேற்றார். சிறப்பு அழைப்பாளராக விழுப்புரம் தெற்கு மாவட்ட அ.தி.மு.க செயலாளர் ஆர்.குமரகுரு எம்.எல்.ஏ. கலந்து கொண்டு கட்சியில் புதிய உறுப்பினர்கள் சேர்க்கைக்கான விண்ணப்பங்களை முகையூர் மற்றும் மணம்பூண்டி ஒன்றிய கிளை நிர்வாகிகளிடம் வழங்கி பேசினார். அப்போது அவர் பேசியதாவது:-

அ.தி.மு.க.வில் தற்போது நடைபெறும் உறுப்பினர் சேர்க்கை என்பது மிக முக்கிய பணி ஆகும். கட்சியில் உறுப்பினர்கள் சேர்ப்பதில் கடுமையாக உழைப்பவர்களுக்கு எதிர்வரும் கூட்டுறவு மற்றும் உள்ளாட்சி தேர்தலின் போது உரிய அங்கீகாரம் அளிக்கப்படும். மறைந்த முன்னாள் முதல்-அமைச்சர் ஜெயலலிதா கூறியதுபோல், அ.தி.மு.க. என்ற மகத்தான இயக்கம்தான் இன்னும் 100 ஆண்டுகள் தமிழகத்தை ஆள போகிறது. ஜெயலலிதா விட்டுச்சென்ற பணிகளை முதல்- அமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி திறம்பட செயல்படுத்தி வருகிறார்.

நடைபெற உள்ள உள்ளாட்சி மற்றும் கூட்டுறவு சங்க தேர்தல்களில் அ.தி.மு.க. 100 சதவீத வெற்றிபெறும் என்பதில் எந்த சந்தேகமும் வேண்டாம். இவ்வாறு ஆர்.குமரகுரு எம்.எல்.ஏ. பேசினார்.

மேலும் செய்திகள்