தமிழக அரசின் மானிய விலை ஸ்கூட்டருக்கு விண்ணப்பிக்க அரசு அலுவலகங்களில் அலைமோதிய பெண்கள் கூட்டம்

தமிழக அரசின் மானிய விலை ஸ்கூட்டருக்கு விண்ணப்பிக்க அரசு அலுவலகங்களில் பெண்கள் கூட்டம் அலைமோதியது.

Update: 2018-02-10 21:15 GMT
நெல்லை,

தமிழக அரசின் மானிய விலை ஸ்கூட்டருக்கு விண்ணப்பிக்க அரசு அலுவலகங்களில் பெண்கள் கூட்டம் அலைமோதியது.

மானிய விலையில் ஸ்கூட்டர்

தமிழக முதல்–அமைச்சராக ஜெயலலிதா இருந்த போது வேலைக்கு செல்லும் பெண்கள் ஸ்கூட்டர் வாங்கி கொள்ள ரூ.25 ஆயிரம் மானியம் வழங்கப்படும் என அறிவித்தார். அவர் மறைந்த பின்னர் “அம்மா இரு சக்கர வாகன திட்டம்“ என்ற பெயரால் தமிழக அரசால் இந்த திட்டம் செயல்படுத்தப்பட உள்ளது.

இந்த திட்டத்தில் பெண்கள் ஸ்கூட்டர் வாங்குவதற்கான விண்ணப்பங்கள் கடந்த மாதம் 22–ந் தேதி முதல் வினியோகம் செய்யப்பட்டன. பஞ்சாயத்து, நகர பஞ்சாயத்து, நகரசபை, நெல்லை மாநகராட்சி மண்டல அலுவலகங்களில் விண்ணப்பங்கள் கொடுக்கப்பட்டன. பெண்கள் ஆர்வத்துடன் விண்ணப்பங்களை வாங்கி சென்றனர். இந்த திட்டத்தில் பயன்பெறும் பெண்கள் ஓட்டுனர் உரிமம் பெற வேண்டும் என அறிவிக்கப்பட்டது.

ஓட்டுனர் உரிமம் பெறுவதற்கு முன்பாக பழகுனர் உரிமம் பெற வேண்டும். இந்த உரிமம் பெற நெல்லை வட்டார போக்குவரத்து அலுவலகத்தில் குவிந்தனர். கடந்த சில நாட்களாக வட்டார போக்குவரத்து அலுவலகத்தில் பெண்கள் கூட்டம் அதிகமாக இருந்தது. கடந்த 5–ந் தேதி கடைசி நாளாக அறிவிக்கப்பட்டது. தினந்தோறும் பெண்கள் கூட்டம் அதிகம் வந்ததால் இந்த திட்டத்தில் விண்ணப்பிக்கும் தேதியை 10–ந் தேதி வரை தமிழக அரசு நீடித்தது.

நீண்ட வரிசையில்...

கடைசி நாளான நேற்று பூர்த்தி செய்ய விண்ணப்பங்கள் கொடுக்க அரசு அலுவலகங்களில் பெண்கள் கூட்டம் அலைமோதியது. நெல்லை மாநகராட்சி, நகரசபை, நகர பஞ்சாயத்து, பஞ்சாயத்து அலுவலகங்களில் பெண்கள் விண்ணப்பங்களை கொடுத்தனர். மாலை 5 மணி வரை விண்ணப்பங்கள் பெறப்பட்டன. ஒரு சில அலுவலகங்களில் 6 மணி வரை விண்ணப்பங்கள் பெறப்பட்டன. நேற்றுடன் பூர்த்தி செய்த விண்ணப்பங்கள் பெறும் பணி நிறைவடைந்தது.

மேலும் செய்திகள்