நெல்லையில் கலெக்டர் அலுவலக ஊழியர் தூக்குப்போட்டு தற்கொலை பணியில் அதிகாரிகள் நெருக்கடி கொடுத்ததாக டைரியில் தகவல்

நெல்லையில் கலெக்டர் அலுவலக ஊழியர் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.

Update: 2018-02-10 21:30 GMT
நெல்லை,

நெல்லையில் கலெக்டர் அலுவலக ஊழியர் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். பணியில் அதிகாரிகள் நெருக்கடி கொடுத்ததாக அவர் எழுதிய டைரியில் கூறப்பட்டுள்ளது.

அரசு ஊழியர்

பாளையங்கோட்டை ஆயிரத்தம்மன் கோவில் தெருவை சேர்ந்தவர் முத்துமாலை (வயது 37). இவர், நெல்லை கலெக்டர் அலுவலகத்தில் நிலஅளவை துறையில் பணியாற்றி வந்தார். இவருடைய மனைவி கோமதி. இவர்களுக்கு திருமணம் ஆகி 10 ஆண்டுகள் ஆகிறது. கடந்த 3 மாதங்களுக்கு முன்புதான் பெண் குழந்தை பிறந்தது.

முத்துமாலை கடந்த சில நாட்களாக சோர்வாக காணப்பட்டார். நேற்று காலையில் வழக்கம்போல் எழுந்து வேலைக்கு செல்வதற்கு தயாரானார். அப்போது மாடியில் உள்ள அறைக்கு சென்று குளித்து விட்டு வருவதாக மனைவியிடம் கூறிச் சென்றவர் நீண்ட நேரம் ஆகியும் வரவில்லை.

தூக்கில் பிணம்

குளிக்க சென்றவரை காணவில்லையே என்று சத்தம் கொடுத்துக் கொண்டே மாடியில் உள்ள அறைக்கு கோமதி சென்றார். அங்கு அவர் கண்ட காட்சி நெஞ்சை நொறுக்குவதாக இருந்தது. அங்குள்ள மின்விசிறியில் வேட்டியில் முத்துமாலை தூக்கில் பிணமாக தொங்கினார். அவரது உடலை பார்த்து கோமதி கதறி அழுதார். அவரது அழுகை சத்தம் கேட்டு அக்கம் பக்கத்தில் உள்ளவர்கள் ஓடி வந்தனர்.

தகவல் அறிந்த பாளையங்கோட்டை போலீசாரும் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்தனர். முத்துமாலை உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக பாளையங்கோட்டை ஐகிரவுண்டு அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

டைரி சிக்கியது

வீட்டில் உள்ளவர்களிடம் போலீசார் விசாரணை நடத்தினர். தொடர்ந்து முத்துமாலை தற்கொலை செய்து கொண்ட அறையில் போலீசார் அதிரடி சோதனை நடத்தினர். அங்கு முத்துமாலை எழுதி வைத்திருந்த ஒரு டைரி சிக்கியது.

அந்த டைரியில், பணியின் போது உயர் அதிகாரிகள் முத்துமாலைக்கு கொடுத்த பல்வேறு நெருக்கடிகள் குறித்து குறிப்பிடப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. அதன் அடிப்படையில் போலீசார் விசாரணையை முடுக்கி விட்டுள்ளனர்.

உறவினர்கள் புகார்


முத்துமாலை தற்கொலை குறித்து உறவினர்கள் கூறுகையில், கடந்த ஒரு வாரத்துக்கு முன்பு முத்துமாலை வேலை செய்த துறையில் உயர் அதிகாரிகள் ஆய்வு நடந்துள்ளது. அப்போது முத்துமாலைக்கு அதிக வேலை கொடுத்துள்ளனர். இதனை அவரால் சமாளிக்க முடியவில்லை. இதுபற்றி வீட்டில் உள்ளவர்களிடம் கூறினார். அப்போது தனக்கு இந்த வேலை பிடிக்கவில்லை என்றும், வேறு வேலைக்கு செல்ல போகிறேன் என்றும் கூறினார். ஆனால் நாங்கள் அவரை சமாதானம் செய்து வேலை செய்ய சொன்னோம். இப்படி ஒரு துயரமான முடிவை எடுப்பார் என்று யாரும் எதிர்பார்க்கவில்லை என்றனர்.

முத்துமாலை வீட்டின் முன்பு திரண்டு நின்ற உறவினர்கள், தற்கொலைக்கு காரணமான அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கூறி ஆவேசமாக கோ‌ஷங்களை எழுப்பினர். அங்கிருந்த போலீசார் அவர்களை சமாதானம் செய்தனர். அதன்பிறகு அவர்கள் அமைதியாக கலைந்து சென்றனர். இதனால் அங்கு சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.

மனைவி கதறல்

முத்துமாலை மனைவி அமுதா கதறி அழுதபடியே நிருபர்களிடம் கூறியதாவது:–

எங்களுக்கு திருமணம் ஆகி 10 ஆண்டுகள் ஆகிறது. கடந்த 3 மாதங்களுக்கு முன்பு தான் பெண் குழந்தை பிறந்தது. அந்த குழந்தை மீது எனது கணவர் பாசமாக இருப்பார். கடந்த சில நாட்களாகவே வேலை பளு அதிகமாக இருக்கிறது. என்னால் வேலை செய்ய முடியவில்லை. அதிகமாக வேலை கொடுத்து அதிகாரிகள் நெருக்கடி இருப்பதாக என்னிடம் கூறினார். உங்களுக்கு பிடிக்கவில்லை என்றால் வேறு வேலை பார்த்துக் கொள்வோம் என்று ஆறுதல் கூறினேன். ஆனால் அவர் திடீரென்று தற்கொலை செய்து கொண்டது என்னால் தாங்க முடியவில்லை. இந்த குழந்தையை எப்படி காப்பாற்ற போகிறேன் என்று தெரியவில்லை. எனது கணவர் தற்காலைக்கு காரணமான அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்.

இவ்வாறு அவர் கூறினார்.

மேலும் செய்திகள்