ரியல் பேட்மேன்!
ரஷியாவின் கிம்கி பகுதியில் நிஜ பேட்மேனை ரஷிய மக்கள் புகழ்ந்து கொண்டிருக்கிறார்கள்.
ரஷியாவின் கிம்கி பகுதியில் போதை மருந்து வியாபாரம் அதிக அளவில் நடைபெற்று வருகிறது. காவல் துறை எவ்வளவு முயன்றும் இதை ஒழிக்க முடியவில்லை. ஆனால் ஒரே மாதத்திற்குள் 40 குற்றவாளிகள் கண்டு பிடிக்கப்பட்டு, காவல் துறையிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளனர். அதற்குக் காரணம் பேட்மேன் ஆடை அணிந்த ஒரு மர்ம மனிதர்.
“ஜனவரி முதல் வாரத்தில் பேட்மேன் ஆடையில் ஒருவர், ஒரு கிடங்குக்குள் நுழைந்தார். அவர் நீண்ட நேரம் கழித்து வெளியே வந்தபோது, கிடங்கு தானாக தீப்பற்றி எரிந்தது. திரைப்படத்தில் வரும் காட்சியை போலவே அது தெரிந்தது. உடனே காவலர்களுக்குத் தகவல் கொடுத்தேன். அவர்கள் வந்து பார்த்தபோது, கிடங்கின் ஒரு மூலையில் கைகள் கட்டப்பட்ட நிலையில் இருவர் மயங்கி கிடந்தனர். அவர்கள் மோசமாக தாக்கப்பட்டிருந்தனர். அதற்கு பிறகுதான் அவர்கள் போதை மருந்து தயாரிப்பவர்கள் என்றும், அந்த கிடங்கு போதை பொருட்களை உற்பத்தி செய்யும் கிடங்கு என்றும் தெரிந்தது” என்கிறார் ஒரு டாக்ஸி டிரைவர்.
பேட்மேன் யார் என்ற விவரம் தெரியாமல் எல்லோரும் குழப்பத்தில் இருந்தபோது, பத்திரிகையில் கடிதம் ஒன்று வெளியானது. “நான் களை எடுப்பவன். மனிதநேயத்துக்கான முதல் சூப்பர் ஹீரோவாக இருக்க விரும்புகிறேன். உங்களுக்கு என்னைத் தெரியாது. சமூகத்தைச் சீரழித்து வரும் போதை மருந்து விற்பனையாளர்களுடனும், பாலியல் பலாத்காரம் செய்பவர்களுடனும் போராடி, குற்றவாளிகளைப் பிடித்துக் கொடுத்திருக்கிறேன். நான் எந்த சமூக விரோதியையும் கொலை செய்யவில்லை.
நான் காவல் துறைக்கோ, அரசாங்கத்துக்கோ எதிரி இல்லை. ஆனால் காவல் துறையே கண்டுபிடிக்க முடியாத இடத்துக்கு சென்று, குற்றவாளிகளைக் கண்டுபிடிக்கும் திறமை எனக்கு இருக்கிறது. நான் புகழுக்காகவோ, வேறு எதையும் எதிர்பார்த்தோ இந்தக் காரியங்களைச் செய்யவில்லை. சமூகத்தை முன்னேற்ற வேண்டும் என்று விரும்புபவர்கள் யார் வேண்டுமானாலும் என் டிவிட்டர் பக்கத்தில் குற்றவாளிகள் குறித்து தகவல்களை அளிக்கலாம்” என்று அந்தக் கடிதத்தில் எழுதப்பட்டிருந்தது. இந்த நிஜ பேட்மேனை ரஷிய மக்கள் புகழ்ந்து கொண்டிருக்க, காவல் துறை இவரை தீவிரமாக தேடி வருகிறது.