‘கொக்கி’ தயாரித்து உபயோகிக்கும் காகங்கள்

ஒரு காக்கை புழு, பூச்சிகளை வேட்டையாட கொக்கிகளைத் தயாரித்துப் பயன்படுத்தி வருகிறது.

Update: 2018-02-10 10:13 GMT
னிதர்களாகிய நாம் நமது அறிவுநுட்பம் பற்றி பெருமைப்பட்டுக்கொண்டாலும், உயிரினங்களும் தாம் புத்திசாலித்தனத்தில் சளைத்தவை இல்லை என நிரூபித்து வருகின்றன.

அந்த வகையில், ஒரு காக்கை இனம், புழு, பூச்சிகளை வேட்டையாட கொக்கிகளைத் தயாரித்துப் பயன்படுத்தி வருகிறது.

பசிபிக் பெருங்கடலின் தெற்குப் பகுதியில் உள்ள டஜன் கணக்கான தீவுகளை உள்ளடக்கியதே, பிரான்ஸ் நாட்டின் கீழே அமைந்திருக்கும் நியூ கலேடோனியா.

இந்தத் தீவில் காணப்படும் காகங்கள், செடிகளில் இருந்து கிடைக்கின்ற பொருட்களைக் கொண்டு ஒருவித கொக்கிகளை எளிதாக உருவாக்குகின்றன. பூச்சிகளின் முட்டைப் புழுக்கள் மற்றும் சிலந்திகளைப் பிடிப்பதற்கு அக்கொக்கி களைப் பயன்படுத்துகின்றன.

இந்தக் கொக்கிகள் 10 மடங்கு விரைவாக உணவைத் தேட உதவுகின்றன என்று ஆய்வுகள் காட்டுகின்றன.

கொக்கிகளை உருவாக்கத் தெரிந்த ஒரே இனமாக இந்தக் காகங்கள் உள்ளன.

சுமார் 23 ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்னால், முற்கால மனிதர்கள் மீன்பிடிக் கொக்கி களைத் தயாரித்தது, மிகவும் முக்கியமான தொழில்நுட்பத் திருப்புமுனையாக அமைந்தது.

ஜப்பானின் ஒகினாவா தீவில் உள்ள ஒரு குகையில் சிப்பியில் செதுக்கப்பட்ட கொக்கிகளை அகழ்வாய்வின்போது கண்டுபிடித்த தொல்லியல் ஆராய்ச்சியாளர்கள், இத்தகைய முற்கால ‘கடல்சார் தொழில்நுட்பம்’, தீவுகளில் மனிதர்கள் உயிர்வாழ உதவியது என்று தெரிவித்துள்ளனர்.

மீன்பிடிப்புக்கான நம்முடைய கண்டுபிடிப்புகள், ஆயிரம் தலைமுறைகளுக்கு உட்பட்டது. இந்த 1000 தலைமுறைகளுக்குள் மீன்பிடி கொக்கி உருவாக்கத்தில் இருந்து விண்கலன்களை அனுப்புவது வரை மனிதர்கள் முன்னேறியிருப்பதைப் பார்க்கிறபோது, உண்மையிலேயே மிகவும் பெரிய வளர்ச்சியாகத் தெரிகிறது.

“கலேடோனியா காகங்கள் கொக்கி செய்வதைப் பார்க்கின்றபோது, ஒரு தொழில்நுட்பம் பரிணமித்து வளர்கின்ற தருணத்தைப் பார்க்கிறேன்” என்று பேராசிரியர் ருட்ஸ் கூறுகிறார்.

முற்கால மனிதர்களின் கருவி பயன்பாடு பற்றி ஆய்வு செய்யும் ஜெர்மனியில் உள்ள உர்ஸ்பர்க் பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த சுற்றுச்சூழலியல் ஆர்வலர் ஜுயன், காகங்களின் இந்தக் கருவி தயாரிக்கும் மற்றும் பயன்படுத்தும் பண்பு ஆச்சரியத்தை ஏற்படுத்துகிறது என்கிறார்.

“சின்னஞ்சிறிய உயிரினங்கள் கூட கருவிகளைத் தயாரித்துக்கொள்வதற்குப் போதுமான அறிவுக்கூர்மையோடு உள்ளன என்பதையும், சில வேளைகளில் மனிதர்களாகிய நம்முடைய முன்னோரைவிட அவை சிறந்து விளங்கின என்பதையும் நாம் பணிவுடன் ஏற்றுத்தான் ஆகவேண்டும்” என்கிறார் அவர்.

“காகங்கள் தயாரிக்கும் கருவிகளின் எதிர்கால வளர்ச்சி பற்றி அனுமானித்தால், இந்தக் கொக்கிகளைச் செய்வதோடு பறவைகளின் கதை முடிந்துவிடுகிறது என்று நான் நினைக்கவில்லை. இந்தப் பறவை இனம் இன்னும் சிறந்த கருவிகளைத் தயாரிக்கும் என்றே எண்ணுகிறேன்” என ஜுயன் சொல்கிறார்.

அது நடந்தாலும் ஆச்சரியமில்லை! 

மேலும் செய்திகள்