ஜல்லிக்கட்டில் 511 காளைகள் சீறிப்பாய்ந்தன

மணப்பாறை அருகே நடந்த ஜல்லிக்கட்டில் 511 காளைகள் களத்தில் சீறிப்பாய்ந்தன.

Update: 2018-02-09 22:45 GMT
மணப்பாறை,

மணப்பாறையை அடுத்த ராயம்பட்டியில் உள்ள புனித செபஸ்தியார் ஆலய திரு விழாவையொட்டி நேற்று ஜல்லிக்கட்டு நடைபெற்றது. இதனை ஸ்ரீரங்கம் கோட்டாட்சியர் பொன்ராமர் தொடங்கி வைத்தார். முதலில் செபஸ்தியார் ஆலய காளை வாடிவாசலில் இருந்து அவிழ்த்து விடப்பட்டது. அதனை யாரும் பிடிக்கவில்லை.

இதைத்தொடர்ந்து உள்ளூர் மாடுகளும், அதன்பின்னர் திருச்சி, திண்டுக்கல், மதுரை, புதுக்கோட்டை, சிவகங்கை, கரூர் என பல்வேறு மாவட்டங்களில் இருந்து அழைத்து வரப்பட்ட காளைகள் வாடிவாசலில் இருந்து ஒன்றன்பின் ஒன்றாக அவிழ்த்து விடப்பட்டன. இதில் பல காளைகள் மின்னல் வேகத்தில் சென்றன. சில காளைகள் களத்தில் நின்று விளையாடின. மேலும் சில காளைகள் தன்னை அடக்க வந்த வீரர்களை நெருங்க கூட விடாமல் விரட்டின.

ஆனாலும் வீரர்கள் தங்களுடைய வீரத்தை வெளிப் படுத்தி காளையின் திமிலை இறுகப்பற்றிக் கொண்டு அடக்கி அசத்தினர். இதில் வெற்றிபெற்ற காளைகளின் உரிமையாளர்களுக்கும், காளையை அடக்கிய வீரர்களுக்கும் கட்டில், பீரோ, சைக்கிள், சில்வர் பாத்திரங்கள், தங்கம் மற்றும் வெள்ளி நாணயங்கள் என பல்வேறு பரிசுப்பொருட்கள் வழங்கப்பட்டன. மாடுபிடி வீரர்கள் ஒவ்வொரு குழுக்களாக காளைகளை பிடிக்க களத்திற்குள் அனுமதிக்கப்பட்டனர். மாட்டின் வாலையோ, கொம்பையோ பிடிக்கக்கூடாது என்று தொடர்ந்து ஒலிபெருக்கி மூலம் எச்சரிக்கை செய்யப்பட்டது.

ஜல்லிக்கட்டில் பங்கேற்பதற்காக அழைத்துவரப்பட்ட 530 காளைகளில் 19 தகுதி நீக்கம் செய்யப்பட்டதால், 511 காளைகள் போட்டியில் பங்கேற்றன. இதேபோல் 210 வீரர்களில் 3 பேர் உடல் தகுதி இல்லாமல் நிராகரிக்கப்பட்டதால் 207 வீரர்கள் மட்டுமே போட்டியில் பங்கேற்றனர். சிறந்த மாடுபிடி வீரருக்கும், காளைக்கும் பரிசுகள் வழங்கப்பட்டன. இதில் காளைகள் முட்டியதில் 6 மாடுபிடி வீரர்கள், ஒரு மாட்டின் உரிமையாளர் என மொத்தம் 7 பேர் காயமடைந்தனர். காயமடைந்தவர்களுக்கு அதே பகுதியில் அமைக்கப்பட்டிருந்த மருத்துவ முகாமில் உடனடி சிகிச்சை அளிக்கப்பட்டது. திருச்சி மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சிபாஷ் கல்யாண் தலைமையிலான அதிகாரிகள் ஜல்லிக்கட்டை தொடர்ந்து கண்காணித்து வந்தனர். ஏராளமான போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர். ஆயிரக்கணக்கான மக்கள் ஜல்லிக்கட்டை கண்டு ரசித்தனர்.

மேலும் செய்திகள்