பள்ளி மாணவரை தற்கொலைக்கு தூண்டியதாக 4 பேர் கைது

லால்குடி அருகே பள்ளி மாணவரை தற்கொலைக்கு தூண்டியதாக 4 மாணவர்களை போலீசார் கைது செய்தனர்.

Update: 2018-02-09 21:46 GMT
லால்குடி,

திருச்சி மாவட்டம், லால்குடியை அடுத்த மாந்துறை கிராமம், காமாட்சி கார்டன் பகுதியில் வசித்து வருபவர் திலகவதி(வயது 50). இவர் ஸ்ரீரங்கம் அரசு மருத்துவமனையில் துப்புரவு பணியாளராக பணிபுரிந்து வருகிறார். இவருடைய கணவர் ராமதாஸ் வெளிநாட்டில் வேலை பார்த்து வருகிறார். இவர்களுக்கு பாஸ்கர்(21), ரஞ்சித்குமார் (15) என 2 மகன்கள் உள்ளனர். இதில் ரஞ்சித்குமார் அப்பகுதியில் உள்ள இ.ஆர். மேல்நிலைப்பள்ளியில் 10 வகுப்பு படித்து வந்தார்.

இந்தநிலையில் இவர் திருநங்கை போல் சுபாவம் உடையவர் என்று சக மாணவர்கள் அவரை கேலி செய்துள்ளனர். இது குறித்து ரஞ்சித்குமார் தனது தாயார் திலகவதியிடம் கூறியுள்ளார். இதனால் ஆத்திரமடைந்த அடைந்த திலகவதி, பள்ளியின் ஆசிரியரை சந்தித்து நடந்ததை கூறியுள்ளார். இதை அடுத்து ஆசிரியரும், அந்த மாணவர்களை கண்டித்து அனுப்பியதாக கூறப்படுகிறது.

இந்நிலையில் கடந்த 7-ந் தேதி வழக்கம் போல் பள்ளிக்கு சென்ற ரஞ்சித்குமாரை, சில மாணவர்கள் மீண்டும் கேலி செய்து அவமானப்படுத்தியதாக தெரிகிறது. இதனால் மனமுடைந்த நிலையில் காணப்பட்ட அவர், நேற்று முன்தினம் பள்ளிக்கு செல்லாமல் பள்ளி சீருடையை அணிந்தவாறு வீட்டிலேயே இருந்துள்ளார். திலகவதி வேலைக்கு சென்றுவிட்டார். இந்நிலையில் மாணவர் ரஞ்சித்குமார் வீட்டில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.

மாலையில் திலகவதி வீட்டின் முன்பக்க கேட்டும், முன் கதவும் பூட்டியுள்ளதையும், பின் கதவு திறந்துள்ளதையும் பார்த்து சந்தேகமடைந்த, பக்கத்து வீட்டை சேர்ந்தவர்கள், திலகவதி வீட்டிற்குள் சென்று பார்த்தபோது, ரஞ்சித்குமார் தூக்கில் தொங்கியதை கண்டு அதிர்ச்சியடைந்தனர். இது குறித்து திலகவதிக்கும், லால்குடி போலீசாருக்கும் அவர்கள் தகவல் தெரிவித்தனர்.

இதையடுத்து அங்கு வந்த போலீசார், ரஞ்சித்குமாரின் உடலை கைப்பற்றி பார்வையிட்டபோது, அவருடைய பாக்கெட்டில் ஒரு கடிதம் இருந்தது.

அதில், அம்மா நான் தான் உங்கள் ரஞ்சித். பள்ளியில் பசங்க என்னை ஒரு பெண்ணாக பார்க்கிறார்கள். அதனால் இந்த முடிவை எடுத்துவிட்டேன். என்னை மன்னித்து விடுங்கள். இதற்கு காரணம் பள்ளியில் படிக்கும் சில மாணவர்கள்தான், என்று உருக்கமாக எழுதப்பட்டிருந்தது. அந்த கடிதத்தை ரஞ்சித்குமார் எழுதி வைத்திருந்ததாக போலீசார் கூறினர். இதையடுத்து போலீசார், ரஞ்சித்குமாரின் உடலை லால்குடி அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர்.

மேலும் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சிபாஷ் கல்யாண், லால்குடி துணை சூப்பிரண்டு ரமேஷ்பாபு ஆகியோர் சம்பவ இடத்திற்கு நேரில் சென்று பார்வையிட்டனர். இந்த சம்பவம் குறித்து இன்ஸ்பெக்டர் தினேஷ்குமார், சப்-இன்ஸ்பெக்டர் சதீஷ்குமார் ஆகியோர் வழக்குப்பதிவு செய்து ரஞ்சித்குமாரை தற்கொலைக்கு தூண்டியதாக, அவர் எழுதிய கடிதத்தில் குறிப்பிட்டுள்ள 4 மாணவர்களை கைது செய்தனர். பின்னர் அவர்களை கோர்ட்டில் ஆஜர்படுத்தி சிறுவர் சீர்திருத்த பள்ளியில் அடைத்தனர்.

மேலும் செய்திகள்