கல்வி சுற்றுலாவுக்காக மே மாதம் ‘நாசா’ செல்கின்றனர்

சென்னை மாநகராட்சி பள்ளிகளை சேர்ந்த மாணவ-மாணவிகள் 8 பேர் கல்வி சுற்றுலாவுக்காக மே மாதம் ‘நாசா’ அழைத்துச் செல்லப்படுகின்றனர்.

Update: 2018-02-09 22:45 GMT
சென்னை,

பெருநகர சென்னை மாநகராட்சி கல்வித்துறையும், சென்னை கிழக்கு ரோட்டரி கிளப்பும் இணைந்து மாணவர்களின் அறிவுத்திறனை வளர்க்கும் வகையில் கடந்த 2 ஆண்டுகளாக பல விதமான அறிவியல் சார்ந்த போட்டிகளை நடத்தி மாணவ-மாணவிகளை வெளிநாடுகளுக்கு கல்விச் சுற்றுலாவாக அழைத்துச் சென்று வருகின்றனர்.

அதன்படி 2017-2018-ம் கல்வி ஆண்டும் பெருநகர சென்னை மாநகராட்சியில் உள்ள 70 உயர்நிலை மற்றும் மேல்நிலைப்பள்ளிகளில் பயிலும் மாணவ-மாணவிகளுக்கு 3 சுற்றுகளாக அறிவியல் போட்டிகள் நடத்தப்பட்டது. இதன் இறுதிச்சுற்று ஷெனாய் நகரில் உள்ள ‘அம்மா’ அரங்கத்தில் நடைபெற்றது.

இதில் வெற்றி பெற்ற 8 மாணவ-மாணவிகளுக்கு பாராட்டு சான்றிதழ்களை மாநகராட்சி கமிஷனர் தா.கார்த்திகேயன் வழங்கினார். அவர்கள் அனைவரும் வருகிற மே மாதம் அமெரிக்க நாட்டில் உள்ள ‘நாசா’ விண்வெளி ஆராய்ச்சி மையத்திற்கு கல்விச் சுற்றுலாவாக அழைத்து செல்லப்பட உள்ளனர்.

மேலும், குடியரசு தின விழா அணிவகுப்பு கலைநிகழ்ச்சியில் கலந்து கொள்ள தேர்வு செய்யப்பட்ட சைதாப்பேட்டை, சென்னை பெண்கள் மேல்நிலைப்பள்ளியின் 9-ம் வகுப்பு மாணவி டி.ராமலட்சுமி மற்றும் உப்புநீரை, நன்னீராக மாற்றும் திட்டத்தை வடிவமைத்தமைக்காக இளம் சுற்றுச்சூழல் விஞ்ஞானி விருது பெற்ற வண்ணாரப்பேட்டை சென்னை மேல்நிலைப் பள்ளியில் 11-ம் வகுப்பு படிக்கும் பி.அரவிந்த், எஸ்.மனோஜ்குமார், பி.எஸ்.பிரவீண் குமார் ஆகியோருக்கும் அவர் பாராட்டு சான்றிதழ்களை வழங்கினார்.

இது தவிர ‘டெக்னோ கிளப்’ போட்டிகளில் மாவட்ட அளவில் வெற்றி பெற்று முதல் 3 இடங்களைப் பிடித்த மாணவர்களுக்கு நற்சான்றிதழ்கள், பதக்கங்கள், காசோலை மற்றும் கேடயங்கள் வழங்கப்பட்டது. மேலும், மாவட்ட அளவிலான போட்டிகளில் தேர்ந்தெடுக்கப்பட்ட சிறந்த பள்ளிகள், மாணவர்கள் மற்றும் ஆசிரியர்களுக்கும் பாராட்டுச் சான்றிதழ்களை தா.கார்த்திகேயன் வழங்கினார்.

இந்நிகழ்ச்சியில், துணை கமிஷனர்(கல்வி) மகேஸ்வரி ரவிக்குமார், கல்வி அலுவலர் டி.சுப்ரமணியன், சென்னை கிழக்கு ரோட்டரி கிளப் பிரதிநிதிகள் மற்றும் பெருநகர சென்னை மாநகராட்சி அதிகாரிகள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

மேலும் செய்திகள்