விரிவுரையாளர் முறைகேடு: மேலும் ஒருவர் குண்டர் சட்டத்தில் கைது

பாலிடெக்னிக் கல்லூரி விரிவுரையாளர் தேர்வில் முறைகேடு தொடர்பாக மேலும் ஒருவர் குண்டர் சட்டத்தில் கைது செய்யப்பட்டார்.

Update: 2018-02-09 22:30 GMT
சென்னை,

தமிழ்நாடு அரசு பாலிடெக்னிக் கல்லூரிகளில் விரிவுரையாளர் பணிக்கு கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் தேர்வு நடந்தது. இந்த தேர்வில் முறைகேடு நடந்திருப்பதாக புகார் எழுந்தது.

இதுதொடர்பாக சென்னை மத்திய குற்றப்பிரிவு ‘சைபர் கிரைம்’ பிரிவு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர்.

இந்த முறைகேடு வழக்கில் சென்னை முகப்பேர் கிழக்கு பகுதியை சேர்ந்த கணேசன் (வயது 38), கொளத்தூரை சேர்ந்த ரகுபதி (34) திருச்சி வயலூரை சேர்ந்த தினேஷ் (26), சுரேஷ்பால் உள்பட 7 பேர் கைது செய்யப்பட்டனர்.

முக்கிய குற்றவாளியாக கருதப்பட்ட மதுரவாயலை சேர்ந்த தனியார் நிறுவன ஊழியர் ஷேக் தாவூத் நாசர் (32) பொன்னேரி நீதிமன்றத்தில் சரண் அடைந்தார். இந்த வழக்கில் ஷேக் தாவூத், சுரேஷ்பால், கணேசன் ஆகிய 3 பேரும் ஏற்கனவே குண்டர் சட்டத்தின் கீழ் சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர்.

இந்தநிலையில் இந்த வழக்கில் இன்னொரு முக்கிய குற்றவாளியான ரகுபதி என்பவரையும் குண்டர் சட்டத்தின் கீழ் சிறையில் அடைக்க போலீஸ் கமிஷனர் ஏ.கே.விஸ்வநாதன் நேற்று உத்தரவிட்டார்.

இதோடு தொடர்ந்து குற்றச்செயல்களில் ஈடுபட்டதாக மேலும் 7 குற்றவாளிகளையும் குண்டர் சட்டத்தின் கீழ் சிறையில் அடைக்க கமிஷனர் ஏ.கே.விஸ்வநாதன் உத்தரவு பிறப்பித்தார்.

மேலும் செய்திகள்