இயற்பியல் தொடர்பான 2 நாள் தேசிய கருத்தரங்கம்

பச்சையப்பன் கல்லூரியில் இயற்பியல் தொடர்பான தேசிய கருத்தரங்கு நேற்று தொடங்கியது. நிறைவு விழா இன்று(சனிக்கிழமை) நடைபெறுகிறது.

Update: 2018-02-09 22:00 GMT
சென்னை,

பச்சையப்பன் கல்லூரியின் 175-ம் ஆண்டு தொடக்க விழாவின் ஒரு பகுதியாக முதுகலை உயராய்வு மற்றும் இயற்பியல் துறையின் சார்பில் ‘இயற்பியலில் உள்ள பொருட்களின் சமீபகால போக்குகள்-2018’ என்ற தலைப்பில் 2 நாள் தேசிய கருத்தரங்கம் சென்னை பச்சையப்பன் கல்லூரி வளாகத்தில் உள்ள திருவள்ளுவர் ஹாலில் நேற்று தொடங்கியது.

இந்த கருத்தரங்கினை நெல்லை மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழக துணைவேந்தரும், பச்சையப்பன் கல்லூரியின் முன்னாள் மாணவருமான கே.பாஸ்கர் தலைமை தாங்கி, குத்துவிளக்கேற்றி தொடங்கி வைத்தார். கருத்தரங்கில் இயற்பியல் துறை தலைவர் பி.அருள் மொழிச்செல்வன் வரவேற்று பேசினார்.

பச்சையப்பன் கல்லூரி முதல்வர் எஸ்.காளிராஜ் 175-வது ஆண்டை கடந்து 200-வது ஆண்டை நோக்கி செல்லும் பச்சையப்பன் கல்லூரியின் மாண்பையும், வளர்ச்சியையும் பற்றி எடுத்து கூறினார்.

தொடக்கவிழாவில் சிலி நாட்டில் உள்ள கான்செப்சன் பல்கலைக்கழக மெட்டிரீயல் என்ஜினீயரிங் துறையின் இயக்குனர் ஆர்.வி.மங்களராஜா சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு சிறப்புரையாற்றினார். இதில், கருத்தரங்கை பற்றி அதன் ஒருங்கிணைப்பாளர் பி.முருககூத்தன் விரிவாக எடுத்துரைத்தார்.

கருத்தரங்கின் முக்கிய நிகழ்வாக இயற்பியல் தொடர்பான 200 ஆய்வு கட்டுரைகள் அடங்கிய விழா மலரை நெல்லை மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழக துணைவேந்தர் வெளியிட, அதன் முதல் பிரதியை பச்சையப்பன் அறக்கட்டளை தலைவர் எஸ்.ஜெயச்சந்திரன், நிதி அறங்காவலர் வி.ராமநாதன், அறங்காவலர்கள் ஆர்.பிரபாகரன், கே.ஹேமநாத், அறக்கட்டளையின் உறுப்பினர் வி.துரை மோகன் ஆகியோர் பெற்றுக்கொண்டனர். விழாவின் இறுதியில் துணை துறைத்தலைவர் ஏ.ஆர்.பிரபாகரன் நன்றி கூறினார்.

கருத்தரங்கின் நிறைவு விழா இன்று (சனிக்கிழமை) மாலை 4.30 மணிக்கு பச்சையப்பன் கல்லூரி வளாகத்தில் நடைபெற இருக்கிறது. இதில் அண்ணா பல்கலைக்கழகத்தின் ஆராய்ச்சி மைய இயக்குனர் ஆர்.ஜெயவேல், வேலூர் வி.ஐ.டி. படிக ஆராய்ச்சி மைய இயக்குனர் எஸ்.கலைநாதன் ஆகியோர் கலந்து கொண்டு சிறப்புரையாற்றுகின்றனர்.

மேலும் செய்திகள்