3 வீடுகளில் பூட்டை உடைத்து 31 பவுன் நகைகள்-பணம் கொள்ளை

சென்னை எம்.ஜி.ஆர். நகரில் ஒரே தெருவில் 3 வீடுகளில் பூட்டை உடைத்து 31 பவுன் தங்க நகைகளையும், ரொக்கப்பணத்தையும் மர்மநபர்கள் கொள்ளையடித்துச் சென்றுவிட்டனர்.

Update: 2018-02-09 21:45 GMT
சென்னை,

சென்னை எம்.ஜி.ஆர்.நகர் காந்தி தெருவில் வசிப்பவர் பேச்சிமுத்து (வயது 40). இவர் கொத்தனார் வேலை செய்கிறார். பூட்டிக்கிடந்த இவரது வீட்டில் புகுந்த மர்மநபர்கள் 8 பவுன் தங்க நகைகளையும், ரூ.20 ஆயிரம் ரொக்கப்பணத்தையும் கொள்ளையடித்துச் சென்றுவிட்டனர்.

இவரது வீட்டிற்கு பக்கத்து வீட்டில் உமாசங்கர் (47) என்ற டிரைவர் வசிக்கிறார். அவரது வீட்டின் பூட்டையும் உடைத்து புகுந்த மர்மநபர்கள் 23 பவுன் நகைகளையும், ரூ.50 ஆயிரம் ரொக்கப்பணத்தையும் அள்ளிச் சென்றுவிட்டனர்.

அதே தெருவில் வசிக்கும் முத்துக்குமரன் (48) என்பவர் வீட்டிலும் ரூ.20 ஆயிரம் ரொக்கப்பணத்தை கொள்ளையடித்துச் சென்றுவிட்டனர்.

3 வீடுகளிலும் மொத்தம் 31 பவுன் தங்க நகைகளும், ரூ.90 ஆயிரம் ரொக்கப்பணமும் கொள்ளையடிக்கப்பட்டுள்ளது. இந்த கொள்ளை சம்பவம் ஒரே தெருவில் நடந்ததால் அந்தப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

ஒரே கும்பல் துணிகரமாக 3 வீடுகளிலும் பூட்டை உடைத்து நகைகள் மற்றும் ரொக்கப்பணத்தை கொள்ளையடித்துச் சென்றிருக்கிறார்கள். இதுதொடர்பாக எம்.ஜி.ஆர்.நகர் போலீஸ் நிலையத்தில் புகார் கொடுக்கப்பட்டுள்ளது. போலீசார் வழக்குப்பதிவு செய்து கொள்ளையர்களை தேடி வருகிறார்கள்.

மேலும் செய்திகள்