5 பேரூராட்சிகளில் பயணிகள் நிழற்கூடம் அமைக்க ரூ.35 லட்சம் நிதி ஒதுக்கீடு

ராசிபுரம் சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட 5 பேரூராட்சிகளில் பயணிகள் நிழற்கூடம் அமைக்க ரூ.35 லட்சம் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு உள்ளது என்று அமைச்சர் சரோஜா தெரிவித்தார்.

Update: 2018-02-09 22:30 GMT
ராசிபுரம்,

ராசிபுரம் சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட பட்டணம் பேரூராட்சி அலுவலகத்தில் சமூகநலம் மற்றும் சத்துணவுத் திட்டத்துறை அமைச்சர் டாக்டர் சரோஜா பொதுமக்களிடம் குறைகளை கேட்டார். அப்போது அவரிடம் முதியோர் உதவித்தொகை, ஆழ்துளை கிணறு அமைத்தல், அங்கன்வாடி கட்டிடங்கள், குடிநீர் வசதி உள்பட அடிப்படை வசதிகளை கேட்டு பொதுமக்கள் மனு அளித்தனர். மனுவை பெற்றுக்கொண்ட அமைச்சர் சரோஜா அவற்றின் மீது உடனடியாக நடவடிக்கை எடுக்கும்படி அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார்.

பின்னர் பட்டணத்தில் பயணிகள் நிழற்கூடம் அமைக்கவேண்டிய இடம், சந்தை மைதானம், சத்துணவு கூடம், பட்டணம் வடக்குத் தெருவில் ஒருங்கிணைந்த குழந்தைகள் வளர்ச்சி திட்டத்தின் கீழ் ரூ.4½ லட்சம் மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள அங்கன்வாடி மைய கட்டிடத்தை அவர் பார்வையிட்டார். அப்போது அமைச்சர், குழந்தைகளின் வசதிக்கேற்ப வாசல் படிக்கட்டுக்களை அமைத்து தரும்படி அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார்.

பிறகு அப்பகுதியில் உள்ள குழந்தைகள் அங்கன்வாடி மையத்திற்கு சென்ற அமைச்சர், அங்கு வருகை புரிந்த குழந்தைகளின் எண்ணிக்கை பற்றியும், அவர்களுக்கு வழங்கப்படும் உணவு வகைகளை பற்றியும் அங்கன்வாடி மைய பொறுப்பாளரிடம் கேட்டறிந்தார். அப்போது அவர் குழந்தைகளுக்கு வழங்கப்படும் உணவை பரிசோதித்தார். அவரே உணவை ருசி பார்த்தார். பாத்திரங்களை சுத்தமாக வைத்திருக்க வேண்டும். சுகாதாரமான முறையில் உணவை சமைத்து குழந்தைகளுக்கு வழங்கவேண்டும். குழந்தைகளை சுத்தமாகவும், சுகாதாரமாகவும் வைத்திருக்க வேண்டும் என்று மைய பொறுப்பாளருக்கு அறிவுரை வழங்கினார்.

பின்னர் அமைச்சர் சரோஜா கூறும்போது, “ராசிபுரம் சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட பட்டணம், பிள்ளாநல்லூர், அத்தனூர், வெண்ணந்தூர், புதுப்பட்டி ஆகிய 5 பேரூராட்சி பகுதிகளிலும் பொதுமக்கள் மற்றும் பயணிகள் பயன்பெறும் வகையில் ஒவ்வொரு பேரூராட்சிக்கும் ரூ.7 லட்சம் மதிப்பீட்டில் 5 பயணிகள் நிழற்கூடம் கட்டுவதற்கு சட்டமன்ற உறுப்பினர் தொகுதி மேம்பாட்டு நிதியில் இருந்து ரூ.35 லட்சம் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டிருப்பதாகவும், அதற்கான பணிகள் விரைவில் தொடங்கப்படும்” என்றும் தெரிவித்தார்.

நிகழ்ச்சிகளில் ராசிபுரம் நகர செயலாளர் பாலசுப்பிரமணியன், ஒன்றிய அ.தி.மு.க. செயலாளர்கள் காளியப்பன் (ராசிபுரம்), இ.கே.பொன்னுசாமி (நாமகிரிப்பேட்டை), வக்கீல் தாமோதரன்( வெண்ணந்தூர்), பட்டணம் பேரூராட்சி முன்னாள் தலைவர் வேலப்பன், பட்டணம் அ.தி.மு.க. துணை செயலாளர் பாலசுப்பிரமணியன், மசக்காளிப்பட்டி கூட்டுறவு சங்கத் தலைவர் பிரகாசம், அத்தனூர் பேரூராட்சி முன்னாள் தலைவர் ராமதாஸ், பேரூராட்சிகளின் உதவி இயக்குனர் முருகன், உதவி செயற்பொறியாளர் ஜெகதீஸ்வரி, பட்டணம் பேரூராட்சி செயல் அலுவலர் சதீஸ் மற்றும் அரசு அதிகாரிகள், கட்சி பிரமுகர்கள், பொதுமக்கள் கலந்துகொண்டனர்.

அதேபோல் பிள்ளாநல்லூர் பேரூராட்சியிலும் பொதுமக்களிடம் அமைச்சர் குறைகளை கேட்டார். நிகழ்ச்சியில் பிள்ளாநல்லூர் பேரூராட்சி நிர்வாக அதிகாரி இளங்கோ உள்பட பலர் கலந்துகொண்டனர்.

மேலும் செய்திகள்