கிராம மக்கள் சாலை மறியல் போராட்டம்

ஊத்துக்கோட்டை அருகே போலீஸ் விசாரணைக்கு அழைத்து சென்றவர்களை விடுவிக்கக்கோரி செங்கரை கிராம மக்கள் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

Update: 2018-02-09 23:15 GMT
ஊத்துக்கோட்டை,

ஊத்துக்கோட்டை அருகே உள்ள செங்கரை கிராம எல்லையில் சவுடு மண் குவாரியை நடத்த தனியார் நிறுவனத்துக்கு தமிழக அரசு அனுமதி வழங்கி உள்ளது. இங்கு அள்ளப்படும் சவுடு மண் சென்னை மற்றும் இதர பகுதிகளுக்கு லாரிகளில் கொண்டு செல்லப்படுகிறது. இந்த நிலையில் செங்கரை கிராமத்தை சேர்ந்த திவாகர் (வயது 24), குட்டி (வயது 21), ஜெயமணி (23) ஆகியோர் நேற்று அதிகாலையில் குவாரிக்கு சென்றனர். சவுடு மண்அள்ளுவதால் நிலத்தடி நீர் மட்டம் குறைந்துவிடும் என்றும், ஆகையால் குவாரியை இயக்க கூடாது என்று தகராறில் ஈடுபட்டனர். அரசு அனுமதியுடன்தான் குவாரியை இயக்குகிறோம் என்று குவாரியின் நிர்வாகிகள் எடுத்து கூறினாலும் அந்த வாலிபர்கள் தொடர்ந்து தகராறில் ஈடுபட்டனர்.

இது குறித்து குவாரி நிர்வாகிகள் ஊத்துக்கோட்டை போலீஸ் நிலையத்தில் புகார் செய்தனர். சப்-இன்ஸ்பெக்டர் நித்தியானந்தம் அங்கு விரைந்து சென்று தகராறில் ஈடுபட்ட திவாகர், குட்டி, ஜெயமணி ஆகியோரை போலீஸ் நிலையத்திற்கு அழைத்து வந்தனர்.

இந்த தகவல் கேள்விபட்டதும் அந்த நபர்களின் உறவினர்கள் மற்றும் பொதுமக்கள் போலீஸ் விசாரணைக்கு அழைத்து சென்றவர்களை விடுவிக்கக்கோரி சூளமேனி- தேர்வாய்கண்டிகை சிப்காட் சாலையில் மறியலில் ஈடுபட்டனர். இதனால் வாகன போக்குவரத்து தடைபட்டது.

தகவல் கிடைத்த உடன் ஊத்துக்கோட்டை போலீஸ் இன்ஸ்பெக்டர் பரந்தாமன், பெரியபாளையம் போலீஸ் இன்ஸ்பெக்டர் வெங்கடாசலம், வெங்கல் இன்ஸ்பெக்டர் குமார் ஆகியோர் அங்கு விரைந்து சென்று சாலை மறியலில் ஈடுபட்டவர்களுடன் பேச்சுவார்தை நடத்தினார். விசாரணைக்கு அழைத்து சென்ற நபர்களை விடுவிப்போம் என்று உறுதி அளித்ததன் பேரில் பொதுமக்கள் சாலை மறியலை விலக்கி கொண்டனர். மறியல் காரணமாக சூளமேனி- தேர்வாய் கண்டிகை சிப்காட் சாலையில் 1 மணி நேரம் வாகன போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

மேலும் செய்திகள்