மதுரை மீனாட்சி அம்மன் கோவிலுக்குள் பக்தர்கள் செல்போன் கொண்டு செல்ல தடை, ஐகோர்ட்டு உத்தரவு

மதுரை மீனாட்சி அம்மன் கோவிலுக் குள் பக்தர்கள் செல்போன் கொண்டு செல்ல தடை விதித்து, ஐகோர்ட்டு உத்தரவிட்டுள்ளது.

Update: 2018-02-09 23:15 GMT
மதுரை,

மதுரை மீனாட்சி அம்மன் கோவிலில் கடந்த 2-ந் தேதி இரவு பயங்கர தீ விபத்து ஏற்பட்டது. இதனால், கிழக்கு ராஜகோபுரத்தை ஒட்டியுள்ள வீரவசந்தராயர் மண்டபமும், அங்கிருந்த கடைகளும் எரிந்து சேதம் அடைந்தன. தீ விபத்துக்கு கோவிலில் கடைகளை அனுமதித்ததே காரணம் என்று கூறப்பட்டதையடுத்து, கடைகளை காலி செய்யும் நடவடிக்கையில் கோவில் நிர்வாகம் இறங்கியுள்ளது.

இந்த நிலையில் மதுரை ஐகோர்ட்டிலும் மீனாட்சி அம்மன் கோவில் பாதுகாப்பு தொடர்பாக வழக்கு தொடரப்பட்டது.

மதுரை அண்ணாநகரை சேர்ந்த வக்கீல் எஸ்.முத்துக்குமார், இது தொடர்பாக மதுரை ஐகோர்ட்டில் தாக்கல் செய்த மனுவில் கூறியிருந்ததாவது:-

மீனாட்சி அம்மன் கோவிலுக்கு உச்சக்கட்ட பாதுகாப்பு வழங்க வேண்டும் என்று 2009-ம் ஆண்டு மத்திய புலனாய்வு அமைப்பு தமிழக அரசிடம் கூறியும் அதை அமல்படுத்த எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. இந்த நிலையில் மதுரை மீனாட்சி அம்மன் கோவிலில் கடந்த 2-ந்தேதி தீ விபத்து ஏற்பட்டது. இதனால் பக்தர்கள் பெரும் அதிர்ச்சிக்கு ஆளாகி உள்ளனர்.

கோவில் வளாகத்தில் 115 கடைகள் இருப்பதாக சொல்கின்றனர். உண்மையில் 400-க்கும் மேற்பட்ட கடைகள் உள்ளன. இந்த கடைகளில் வீட்டு உபயோக பொருட்கள், விளையாட்டு பொருட்கள், பேட்டரி, சீன தயாரிப்பு பொம்மைகள், வாசனை திரவியங்கள், துணி பொம்மைகள் என எளிதில் தீப்பிடிக்கும் பொருட்கள் விற்கப்படுகின்றன.

எனவே மீனாட்சி அம்மன் கோவில் பாதுகாப்பு ஏற்பாடுகளை கண்காணிக்கவும், கோவிலை புனரமைத்தல் மற்றும் பராமரிப்பு பணிகளை மேற்பார்வையிடவும் தொல்லியல் துறை நிபுணர்கள் அடங்கிய உயர்மட்டக்குழு அமைக்கவும், தீ விபத்துக்கு காரணமான அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்கவும் உத்தரவிட வேண்டும்.

இவ்வாறு மனுவில் கூறப்பட்டு இருந்தது.

இந்த மனு நீதிபதிகள் கிருபாகரன், தாரணி ஆகியோர் முன்பு நேற்று விசாரணைக்கு வந்தது.

மனுதாரர் தரப்பில் வக்கீல்கள் வாதாடியதாவது:-

“மத்திய தொல்லியல் அதிகாரியின் மேற்பார்வையில் வீரவசந்தராயர் மண்டபத்தை பழமை மாறாமல் சீரமைக்க உத்தரவிட வேண்டும். பல்வேறு பிரச்சினைகளை தவிர்க்க கோவிலுக்குள் பக்தர்கள் செல்போன் கொண்டு செல்ல தடை விதிக்க வேண்டும். கோவிலின் வீடியோ பதிவு அறை நேற்று தீப்பிடித்துள்ளது. இது கடந்த 2-ந்தேதி நடந்த சம்பவத்தை மறைக்கும் நோக்கத்தில் செய்யப்பட்டதா என்ற சந்தேகத்தை எழுப்பி உள்ளது.

1997-ம் ஆண்டு பிறப்பிக்கப்பட்ட அரசாணையின் அடிப்படையில் மீனாட்சி கோவிலைச் சுற்றி ஒரு கிலோ மீட்டர் தூரத்துக்கு 9 மீட்டர் உயரத்துக்கு மேல் கட்டிடங்கள் இருக்கக்கூடாது என்ற விதி கடுமையாக பின்பற்றப்படவில்லை. பல்வேறு வணிக கட்டிடங்கள் விதிமீறி கட்டப்பட்டு உள்ளன.“

இவ்வாறு வக்கீல்கள் வாதாடினார்கள்.

பின்னர் அரசு வக்கீல் சண்முகநாதன் ஆஜராகி, “மீனாட்சி கோவில் வீடியோ பதிவு அறையில் லேசான தீ விபத்து தான் ஏற்பட்டது. விதிகளை மீறிய கட்டிடங்கள் மீதான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன“ என்று தெரிவித்தார்.

விசாரணை முடிவில் நீதிபதிகள் பிறப்பித்த உத்தரவு வருமாறு:-

“மதுரை மீனாட்சி அம்மன் கோவிலின் பாதுகாப்பை கருத்தில் கொண்டு கோவிலுக்குள் பக்தர்கள், பார்வையாளர்கள் செல்போன் கொண்டு செல்ல அனுமதிக்கக்கூடாது. செல்போன்களை கோவிலுக்கு வெளியில் பாதுகாப்பாக வைக்க ஏற்பாடு செய்ய வேண்டும். மேலும் கோவில் பாதுகாப்பு ஏற்பாடுகளை கண்காணிக்கவும், பராமரிப்பு பணிகளை மேற்கொள்ளவும் மத்திய தொல்லியல் துறை நிபுணர்களுடன் இணைந்து செயல்பட வேண்டும். தேவைப்படும்பட்சத்தில் மத்திய தொழில் பாதுகாப்பு படையினரை மீனாட்சி அம்மன் கோவிலில் பாதுகாப்பு பணிக்கு ஈடுபடுத்த மத்திய அரசை, மாநில அரசு நாடலாம்.

உயர்தொழில்நுட்ப கண்காணிப்பு கேமராக்களை பொருத்தி கண்காணிப்பை தீவிரப்படுத்த வேண்டும். கோவில் சுற்றுச்சுவரில் இருந்து ஒரு கிலோ மீட்டர் தூரம் வரை உள்ள கட்டிடங்கள் 9 மீட்டர் உயரத்துக்கு மேல் இருந்தால் இடிக்கும் பணிகளை தீவிரப்படுத்த வேண்டும். இதுகுறித்த அறிக்கையை மார்ச் மாதம் 12-ந்தேதி கோர்ட்டில் தாக்கல் செய்ய வேண்டும்.

இவ்வாறு நீதிபதிகள் உத்தரவில் கூறியுள்ளனர். 

மேலும் செய்திகள்