குலசேகரன்பட்டினத்தில் கணவாய் மீன்கள் அதிகம் பிடிபடுகின்றன வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி

குலசேகரன்பட்டினம் கடல் பகுதியில் அதிக அளவில் பிடிபடும் கணவாய் மீன்கள், பல்வேறு நாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப்படுகின்றன.

Update: 2018-02-09 21:00 GMT
குலசேகரன்பட்டினம்,

குலசேகரன்பட்டினம் கடல் பகுதியில் அதிக அளவில் பிடிபடும் கணவாய் மீன்கள், பல்வேறு நாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப்படுகின்றன.

கணவாய் மீன்

குலசேகரன்பட்டினம் கடல் பகுதியில் கணவாய் மீன்கள் அதிகளவில் உள்ளன. இதையடுத்து தூத்துக்குடி தருவைக்குளம், வெள்ளப்பட்டி உள்ளிட்ட பகுதிகளை சேர்ந்த சுமார் 20 மீனவர்கள் தினமும் காலையில் வேனில் குலசேகரன்பட்டினத்துக்கு வருகின்றனர். பின்னர் அவர்கள் ஓரிரு படகுகளில் சுமார் 10 கடல்மைல் தொலைவுக்கு கடலில் செல்கின்றனர். அங்கு தெர்மாகோல் மிதவை மூலம் மீனவர்கள் தனித்தனியாக கடலில் தூண்டில் போட்டு, அந்த மீன்களை பிடிக்கின்றனர்.

ஏற்றுமதி

பிடிபட்ட மீன்களை பனிக்கட்டி மற்றும் கடல் நீர் நிரப்பிய பிளாஸ்டிக் டிரம்மில் படகுகளில் சேகரித்து வைக்கின்றனர். பின்னர் அவற்றை மதியம் கடற்கரைக்கு கொண்டு வந்து வேனில் ஏற்றி சென்று, தூத்துக்குடியில் உள்ள மீன் ஏற்றுமதி நிறுவனத்தில் வழங்குகின்றனர். அந்த நிறுவனத்தில் இருந்து தினமும் பல்வேறு நாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப்படுகின்றன. 200 கிராம் முதல் 5 கிலோ கிராம் எடை வரையிலான இந்த மீன்கள், ஒவ்வொன்றும் ரூ.300 முதல் ரூ.1,500 வரையிலும் விற்பனை செய்யப்படுவதாகவும், பல்வேறு நாடுகளில் இந்த மீன்களுக்கு கிராக்கி இருப்பதாகவும் மீனவர்கள் தெரிவித்தனர்.

மேலும் செய்திகள்