கொப்பல் அருகே விபத்து: டிராக்டர் - டேங்கர் லாரி மோதல்; 4 பேர் நசுங்கி சாவு 7 பேர் படுகாயம்

கொப்பல் அருகே நேற்று காலையில் டிராக்டர் மீது டேங்கர் லாரி மோதியதில் 4 பேர் உடல் நசுங்கி பரிதாபமாக இறந்தனர்.

Update: 2018-02-08 21:45 GMT
பெங்களூரு,

கொப்பல் அருகே நேற்று காலையில் டிராக்டர் மீது டேங்கர் லாரி மோதியதில் 4 பேர் உடல் நசுங்கி பரிதாபமாக இறந்தனர். மேலும் படுகாயம் அடைந்த 7 பேர் ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வருகிறார்கள்.

டிராக்டர் மீது டேங்கர் லாரி மோதல்


கொப்பல் மாவட்டம் எலபூர்கா தாலுகா தலகல்லா-பன்னிகொப்பா கிராமங்களுக்கு இடையே செல்லும் கொப்பல்-கதக் சாலையில் நேற்று காலை சுமார் 6.30 மணியளவில் டிராக்டர் ஒன்று சென்று கொண்டிருந்தது. தோட்டத்தில் கூலி வேலை செய்யும் தொழிலாளிகள் டிராக்டரில் இருந்தனர். அப்போது, டிராக்டருக்கு பின்னால் வேகமாக வந்த டேங்கர் லாரி, திடீரென்று டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்து முன்னால் சென்று கொண்டிருந்த டிராக்டர் மீது பயங்கரமாக மோதியது.

இதில், டிராக்டர் தாறுமாறாக ஓடி கவிழ்ந்தது. அதில் பயணித்த தொழிலாளிகள் டிராக்டரின் அடியில் சிக்கி உயிருக்கு போராடினார்கள். இதேபோல், டேங்கர் லாரியும் சாலையில் கவிழ்ந்தது. இதற்கிடையே, டேங்கர் லாரியை அங்கேயே விட்டுவிட்டு அதன் டிரைவர் தப்பி ஓடிவிட்டார்.

4 பேர் நசுங்கி பலி

இதுகுறித்து தகவல் அறிந்தவுடன் கூகனூர் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்றனர். பின்னர், அவர்கள் மீட்பு பணியில் ஈடுபட்டனர். அப்போது, டிராக்டரின் அடியில் சிக்கி 4 பேர் உடல்நசுங்கி பரிதாபமாக இறந்ததும், 7 பேர் படுகாயம் அடைந்து உயிருக்கு போராடுவதும் தெரியவந்தது. படுகாயம் அடைந்தவர்களை மீட்ட போலீசார் அருகே உள்ள அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவர்களுக்கு டாக்டர்கள் தீவிர சிகிச்சை அளித்து வருகிறார்கள். மேலும், இறந்தவர்களின் உடல்களை கைப்பற்றிய போலீசார் பிரேத பரிசோதனைக்காக அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

விபத்துக்கு காரணம் என்ன?

விபத்து குறித்து போலீசார் விசாரணை நடத்தினார்கள். விசாரணையில், இறந்தவர்களின் பெயர்கள் சன்னப்பா ஈரப்பா(வயது 32), ஈரம்மா(50), பிவீஜான்(55), முகமது ராஜாசாப்(20) என்பதும், உறவினர்களான இவர்கள் அனைவரும் பன்னிகொப்பா கிராமத்தை சேர்ந்தவர்கள் என்பதும் தெரியவந்தது. அவர்கள் தோட்ட வேலைக்காக டிராக்டரில் சென்றபோது விபத்தில் சிக்கி இறந்ததும் தெரியவந்தது.

மேலும், முன்னால் சென்ற காரை அதிவேகமாக சென்று முந்திய டேங்கர் லாரி, டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்து டிராக்டர் மீது மோதியது தான் விபத்துக்கான காரணம் என்று போலீசார் தெரிவித்தனர். இதுகுறித்த புகாரின் பேரில் கூகனூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து டேங்கர் லாரி டிரைவரை வலைவீசி தேடிவருகிறார்கள். இந்த சம்பவம் நேற்று கூகனூர் பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியது.

மேலும் செய்திகள்