தற்செயல் விடுப்பு எடுத்து வருவாய்த்துறை ஊழியர்கள் 2-வது நாளாக போராட்டம்

வருவாய்த்துறை ஊழியர்கள் 2-வது நாளாக தற்செயல் விடுப்பு எடுத்து போராட்டம் நடத்தினார்கள். இதனால் அரசு அலுவலகங்கள் வெறிச்சோடின.

Update: 2018-02-08 23:00 GMT
ஈரோடு,

வருவாய்த்துறை ஊழியர்களுக்கு தனி ஊதியம் வழங்க வேண்டும். 10 ஆயிரத்துக்கும் மேற்பட்ட காலிப்பணியிடங்களை நிரப்ப வேண்டும். ஊதிய மாற்றத்தின் 12 மாதத்திற்கான நிலுவைத்தொகையை வழங்க வேண்டும். அனைத்து மாவட்டங்களிலும் பேரிடர் மேலாண்மை பணிக்கான துணை கலெக்டர் நிலையில் பணியிடங்களை ஏற்படுத்த வேண்டும். பதவி உயர்வு பட்டியல் உரிய காலத்தில் வழங்க வேண்டும்.

வறட்சி நிவாரணம் கணக்கிடுதல், அம்மா திட்ட முகாம், விலையில்லா வேட்டி-சேலை வழங்குதல் போன்ற பணிகளுக்கு செலவாகும் தொகையை ஒதுக்கீடு செய்ய வேண்டும் என்பன உள்பட மொத்தம் 20 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழ்நாடு வருவாய்த்துறை அலுவலர் சங்கம் சார்பில் 2 நாட்கள் தற்செயல் விடுப்பு எடுக்கும் போராட்டம் நடத்தப்படும் என்று அறிவிக்கப்பட்டது.

அதன்படி நேற்று முன்தினம் போராட்டம் தொடங்கியது. 2-வது நாளாக நேற்றும் வருவாய்த்துறை ஊழியர்கள் விடுப்பு எடுத்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.

ஈரோடு மாவட்டத்திலும் நேற்று வருவாய்த்துறை ஊழியர்கள் பணிக்கு செல்லவில்லை. இதனால் ஈரோடு மாவட்ட கலெக்டர் அலுவலகம், ஆர்.டி.ஓ. அலுவலகங்கள், தாலுகா அலுவலகங்கள் உள்ளிட்ட அரசு அலுவலகங்கள் வெறிச்சோடி காணப்பட்டன. ஈரோடு குடிமைப்பொருள் தாலுகா அலுவலகம் பூட்டி கிடந்தது. வருவாய்த்துறை ஊழியர்களின் போராட்டம் காரணமாக அரசு அலுவலகங்களுக்கு வந்த பொதுமக்கள் ஏமாற்றத்துடன் திரும்பி சென்றனர்.

மேலும் செய்திகள்