மகதாயி நதிநீர் பிரச்சினை முதல்-மந்திரி சித்தராமையா தலைமையில் பெங்களூருவில் அனைத்துக்கட்சி கூட்டம்

மகதாயி நதி நீர் பங்கீடு தொடர்பாக கர்நாடகம், மராட்டியம், கோவா ஆகிய மாநிலங்கள் இடையே பிரச்சினை இருந்து வருகிறது.

Update: 2018-02-08 22:30 GMT
பெங்களூரு,

மகதாயி நதிநீர் பிரச்சினை தொடர்பாக விசாரணை நடத்தி வரும் நடுவர்மன்ற காலத்தை நீட்டிக்க கோரும் கோவா அரசின் முடிவை ஏற்கமாட்டோம் என்று முதல்-மந்திரி சித்தராமையா தலைமையில் பெங்களூருவில் நடந்த கர்நாடக அனைத்துக்கட்சி கூட்டத்தில் முடிவு எடுக்கப்பட்டு உள்ளது.

மகதாயி நதி நீர் பங்கீடு தொடர்பாக கர்நாடகம், மராட்டியம், கோவா ஆகிய மாநிலங்கள் இடையே பிரச்சினை இருந்து வருகிறது.

அனைத்துக்கட்சி கூட்டம்

இதுகுறித்து நடுவர் மன்றம் அமைக்கப்பட்டு விசாரணை நடைபெற்று வருகிறது. நடுவர் மன்றத்தின் காலம் இந்த ஆண்டுடன் முடிவடைகிறது. இந்த காலத்தை நீட்டிக்க வேண்டும் என்று கோவா கோரிக்கை விடுத்துள்ளது. இதுகுறித்து ஆலோசிக்க அனைத்துக்கட்சி கூட்டம் முதல்-மந்திரி சித்தராமையா தலைமையில் பெங்களூரு விதான சவுதாவில் நேற்று நடைபெற்றது.

இதில் நீர்ப்பாசனத்துறை மந்திரி எம்.பி.பட்டீல், சட்டத்துறை மந்திரி ஜெயச்சந்திரா, எதிர்க்கட்சி தலைவர்கள் ஜெகதீஷ் ஷெட்டர், ஈசுவரப்பா, ஜனதாதளம் (எஸ்) கட்சியினர் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். இந்த கூட்டத்தில் அனைத்துக்கட்சி தலைவர்களும் நடுவர்மன்ற காலத்தை நீட்டிக்கக் கோரும் முடிவுக்கு எதிர்ப்பு தெரிவித்தனர். இதைதொடர்ந்து மகதாயி நடுவர் மன்றத்தின் காலத்தை நீட்டிக்குமாறு கோவா விடுத்துள்ள கோரிக்கையை ஏற்கக்கூடாது என்று தீர்மானிக்கப்பட்டது.

இந்த கூட்டம் முடிந்த பிறகு சித்தராமையா நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது:-

நாங்கள் ஏற்கமாட்டோம்

குடிநீர் பிரச்சினைக்கு விரைவாக தீர்வு காண வேண்டியுள்ளது. அதனால் நடுவர் மன்றத்தின் காலத்தை நீட்டிக்க வேண்டும் என்று கோரும் கோவாவின் கோரிக்கையை நாங்கள் ஏற்கமாட்டோம். கடந்த 2010-ம் ஆண்டு நவம்பர் 16-ந் தேதி நடுவர் மன்றம் அமைக்கப்பட்டது. மாநிலங்களுக்கு இடையேயான நதிநீர் பிரச்சினை தொடர்பான சட்டப்படி நடுவர் மன்றம் அமைக்கப்பட்ட 3 ஆண்டுகளில் தீர்ப்பை அறிவித்து இருக்க வேண்டும்.

ஆனால் அந்த நடுவர் மன்றத்தின் காலம் ஏற்கனவே 2 முறை நீட்டிக்கப்பட்டது. மீண்டும் ஒரு முறை நடுவர் மன்றத்தின் காலத்தை நீட்டிக்க வேண்டுமென்றால் சட்டத்தில் திருத்தம் செய்ய வேண்டும். அதன் காலத்தை நீட்டித்தால் தீர்ப்பு வருவதில் மேலும் தாமதம் ஏற்படும். அத்துடன் கர்நாடகத்துக்கு குடிநீர் கிடைப்பதிலும் காலதாமதம் உண்டாகும்.

பதில் வரவில்லை

மகதாயி நடுவர் மன்றம் வருகிற ஆகஸ்டு மாதம் 20-ந் தேதிக்குள் தீர்ப்பை அறிவிக்க வேண்டும். மூன்று மாநிலங் களும் தங்களது தரப்பு வாதங்களை எடுத்து வைத்துள்ளன. மேலும் ஆதாரங்களையும் தாக்கல் செய்துள்ளன. நடுவர் மன்றம் வருகிற 22-ந் தேதி வரை வாதத்தை கேட்க வேண்டும். காலநீட்டிப்பு பற்றி அரசுடன் கலந்தாலோசனை நடத்தி தகவல் தெரிவிப்பதாக நமது வக்கீல்கள் நடுவர் மன்றத்தில் கூறி உள்ளனர். நாங்கள் எக்காரணம் கொண்டும் நடுவர் மன்ற கால நீட்டிப்பை ஏற்கமாட்டோம்.

மகதாயி மட்டுமின்றி கிருஷ்ணா, காவிரி நதிநீர் பிரச்சினைகளிலும் எதிர்க்கட்சிகளின் கருத்துகளையும் கேட்டு அறிந்து கர்நாடக அரசு அதன்படி நடந்து கொள்ளும். மகதாயி பிரச்சினை குறித்து பேச நேரம் ஒதுக்குமாறு பிரதமரிடம் கேட்டுள்ளோம். நான் எழுதிய கடிதத்திற்கு இன்னும் பதில் வரவில்லை. மூத்த வக்கீல் நாரிமனுக்கு உடல்நிலை சரி இல்லை. அதனால் அவருக்கு பதிலாக மகதாயி நதிநீர் விவகார வழக்கில் மூத்த வக்கீல்கள் அசோக் தேசாய், சியாம் திவான் ஆகியோர் நடுவர் மன்றத்தில் ஆஜராகி கர்நாடகத்தின் கருத்தை எடுத்து வைப்பார்கள்.

இவ்வாறு முதல்-மந்திரி சித்தராமையா கூறினார்.

மேலும் செய்திகள்