மீன்குழம்பு சமைக்காததை கண்டித்ததால் மனைவி தீக்குளித்து தற்கொலை காப்பாற்ற முயன்ற கணவரும் சாவு

திருச்சியில் மீன்குழம்பு சமைக்காததை கணவர் கண்டித்ததால் மனைவி தீக்குளித்து இறந்தார். அவரை காப்பாற்ற முயன்ற கணவரும் உடல் கருகி பரிதாபமாக உயிரிழந்தார்.

Update: 2018-02-08 23:00 GMT
கே.கே.நகர்,

திருச்சி கே.கே.நகர் உஸ்மான் அலி நகர் 2-வது குறுக்கு தெருவை சேர்ந்தவர் சுரேஷ் (வயது 40). இவர் சொந்தமாக லாரிகள் வைத்து தொழில் செய்து வந்தார். மேலும் திருச்சி குட்ஷெட் லாரி உரிமையாளர் சங்க தலைவராகவும், திருச்சி மாவட்ட லாரி உரிமையாளர் சங்கத்தின் துணை தலைவராகவும் சுரேஷ் இருந்தார்.

இவருடைய மனைவி சத்யா(35). இந்த தம்பதியினருக்கு பிளஸ்-2 படிக்கும் ராகுல்(17) என்கிற மகனும், 10-ம் வகுப்பு படிக்கும் உதயா(15) என்கிற மகளும் உள்ளனர். சுரேஷ் வீட்டிலேயே அவரது தாய் கஸ்தூரியும் வசித்து வருகிறார்.

இந்நிலையில் நேற்று முன்தினம் காலை சுரேஷ் சத்யாவிடம் மீன் வாங்கி கொடுத்து விட்டு சமைத்து வைக்கும்படி கூறிவிட்டு தொழில் சம்பந்தமாக வெளியே சென்று விட்டார். குழந்தைகளும் பள்ளிக்கு சென்று விட்டனர். வீட்டில் மனைவி சாப்பாட்டுக்கு மீன்குழம்பு சமைத்து வைத்திருப்பார் என்ற ஆவலுடனும், பசியுடனும் சுரேஷ் மாலை 3 மணிக்கு வீட்டிற்கு சாப்பிட வந்தார். ஆனால் சத்யா மீன்குழம்பு சமைக்கவில்லை. இதுகுறித்து அவர், சத்யாவிடம் ஏன் மீன்குழம்பு சமைக்கவில்லை என்று கேட்டு கண்டித்துள்ளார்.

அதற்கு சத்யா, வாஷிங் மெஷின் கோளாறு காரணமாக துணிகளை கையால் சோப்பு போட்டு துவைத்ததால் நீண்ட நேரம் ஆகிவிட்டது. இதனால் மீன்குழம்பு வைக்கவில்லை என்று கூறியுள்ளார். அப்போது இருவருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. இதனால் மனமுடைந்த சத்யா வீட்டில் இருந்த மண்எண்ணெயை எடுத்து உடலில் ஊற்றியபடி வீட்டின் கழிவறைக்கு ஓடி சென்று உள்புறமாக கதவை தாழ்ப்பாள் போட்டுக்கொண்டு தீ வைத்து கொண்டார். இதில் உடல் முழுவதும் தீ பரவியதால் சத்யா வலியால் அலறி துடித்தார். அவரது அலறல் சத்தத்தை கேட்டு வீட்டில் இருந்த சுரேசும், அவரது தாய் கஸ்தூரியும் அதிர்ச்சியடைந்தனர்.

பின்னர் சுரேஷ் ஓடி சென்று கழிவறையின் கதவை உடைத்து கொண்டு மனைவி சத்யாவை காப்பாற்ற முயன்றார். அப்போது வலி தாங்க முடியாமல் சத்யா, கணவரை கட்டிப்பிடித்தார். இதில் சுரேஷ் உடலிலும் தீப்பிடித்தது. உடலில் எரிந்த தீயுடன் இருவரும் காப்பாற்றுங்கள், காப்பாற்றுங்கள்... என்று அலறியபடி கழிவறையில் இருந்து வெளியே ஓடி வந்தனர். இதனை கண்ட கஸ்தூரி இதுகுறித்து அக்கம், பக்கத்தினருக்கு தகவல் தெரிவித்தார். உடனடியாக ஓடிவந்த அக்கம், பக்கத்தினர் அவர்கள் மீது எரிந்த தீயை அணைத்தனர். பின்னர் பலத்த தீக்காயமடைந்த இருவரையும் மீட்டு 108 ஆம்புலன்சில் ஏற்றி சிகிச்சைக்காக திருச்சி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

ஆனால் அங்கு சிகிச்சை பலனின்றி நேற்று முன்தினம் இரவு முதலில் சத்யாவும், அவரை தொடர்ந்து அடுத்த சில மணி நேரங்களில் சுரேசும் பரிதாபமாக உயிரிழந்தனர். க.கே.நகர் போலீசார் இதுபற்றி விசாரணை நடத்தி வருகிறார்கள். 

மேலும் செய்திகள்