சமையல் செய்யாததால் ஆத்திரம்: மனைவியை வெட்டிய கணவர் கைது

சமையல் செய்யாத ஆத்திரத்தில் மனைவியை வெட்டிய கணவரை போலீசார் கைது செய்தனர்.

Update: 2018-02-06 23:14 GMT
தாம்பரம்,

சென்னையை அடுத்த குரோம்பேட்டை, துர்கா நகரை சேர்ந்தவர் ராஜேந்திரன்(வயது 50). இவருடைய மனைவி ரேவதி(45). இவர்களுடைய மகள் கல்லூரியில் படித்து வருகிறார். ரேவதி கல்லூரிக்கு செல்லும் தனது மகளுக்கு காலையில் எழுந்து சமையல் செய்து கொடுப்பது வழக்கம்.

நேற்று காலை அவருடைய மகள் கல்லூரிக்கு புறப்பட்டு கொண்டிருந்தார். அப்போது தூங்கிக் கொண்டிருந்த ரேவதி அவருக்கு சமையல் செய்து கொடுக்க எழுந்திருக்கவில்லை என தெரிகிறது. மகளுக்கு சமையல் செய்து கொடுக்கும்படி ராஜேந்திரன் மனைவியை எழுப்பினார்.

ஆனால் நீண்ட நேரம் ஆகியும் ரேவதி தூக்கத்தில் இருந்து எழவில்லை. இதனால், ஆத்திரம் அடைந்த ராஜேந்திரன் வீட்டில் இருந்த அரிவாள் மனையால் ரேவதியின் முகத்தில் வெட்டினார். இதில் அவர் படுகாயம் அடைந்தார். அருகில் இருந்த உறவினர்கள் ரேவதியை மீட்டு சிகிச்சைக் காக குரோம்பேட்டை அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர்.

அங்கு அவருக்கு முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டது. பின்பு அவரை மேல் சிகிச்சைக்காக சென்னை அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர்.

இதுகுறித்து குரோம்பேட்டை போலீசார் வழக்குப்பதிவு செய்து மனைவியை வெட்டிய ராஜேந்திரனை கைது செய்தனர்.

மேலும் செய்திகள்