திருவள்ளூர் அருகே கொலை செய்யப்பட்டு கிடந்த பெண் சென்னையை சேர்ந்தவர், போலீசார் விசாரணை

திருவள்ளூர் அருகே கொலை செய்யப்பட்டு கிடந்த பெண் சென்னையை சேர்ந்தவர் என்பது தெரியவந்தது. இது தொடர்பாக 3 பேரிடம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Update: 2018-02-06 22:45 GMT
பூந்தமல்லி,

திருவள்ளூரை அடுத்த வெள்ளவேடு, திருமணம் கிராம பஸ் நிறுத்தம் அருகே கடந்த 2-ந் தேதியன்று வண்டலூர் நெமிலிச்சேரி வெளிவட்ட சாலையின் ஓரம் உள்ள முள்புதரில் பெண் ஒருவர் நெற்றி, கன்னம், தோள்பட்டை போன்ற பகுதிகளில் பலத்த வெட்டுக்காயங்களுடன், மூக்கு அறுக்கப்பட்ட நிலையில் கொடூரமாக கொலை செய்யப்பட்டு பிணமாக கிடந்தார். அந்த பெண்ணின் இடது கையில் ஆர்.முனுசாமி, பவித்ரா, மீனா என்றும் வலது கையில் சாந்தா என்றும் பெயர்கள் பச்சை குத்தப்பட்டிருந்தது. அவர் மெட்டி மற்றும் மூக்குத்தி அணிந்திருந்தார். இது குறித்து வெள்ளவேடு போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வந்தனர்.

திருவள்ளூர் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சிபி சக்கரவர்த்தி உத்தரவின் பேரில் இந்த கொலை வழக்கில் 3 தனிப்படைகள் அமைக்கப்பட்டு இறந்தவர் யார்? எனவும் அவரை கொலை செய்தவர்கள் யார்? என தீவிர விசாரணை நடந்து வந்தது. மாயமானவர்கள் குறித்த விவரத்தையும் போலீசார் சேகரித்து விசாரித்து வந்தனர்.

இந்த நிலையில் காணாமல் போன தன்னுடைய மனைவியை கண்டு பிடித்து தரக்கோரி சென்னை வியாசர்பாடி எஸ்.ஏ. காலனி பட்டாளம் தெருவை சேர்ந்த முனுசாமி என்பவர் சென்னை கொடுங்கையூர் போலீஸ் நிலையத்தில் புகார் செய்தார். போலீசார் காணாமல் போன அவரது மனைவி சாந்தலட்சுமி (வயது 38) என்பவரை தேடி வந்தனர். அப்போது திருமணம் பஸ் நிறுத்தம் அருகே கொலை செய்யப்பட்டு கிடந்த பெண் சென்னை வியாசர்பாடி எஸ்.ஏ.காலனி, பட்டாளம் தெருவை சேர்ந்த முனுசாமியின் மனைவி சாந்தலட்சுமி (38) என்பது தெரியவந்தது. போலீஸ் விசாரணையில் அவர் பட்டரவாக்கம் பகுதியில் கட்டிட வேலையில் சித்தாளாக வேலை செய்து வந்ததும், கடந்த 2-ந்தேதி வேலைக்கு சென்ற அவர் வீடு திரும்பவில்லை என்பதும் விசாரணையில் தெரியவந்தது.

அவரது செல்போனுக்கு தொடர்பு கொண்டபோது செல்போன் சுவிட்ச்ஆப் செய்யப்பட்டிருந்தது. இந்த கொலை தொடர்பாக அவருடன் பணிபுரியும் 3 பேரை பிடித்து போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். விசாரணை முடிந்த பின்னரே சாந்தலட்சுமி எதற்காக கொலை செய்யப்பட்டார்? என்ற விவரங்கள் தெரியவரும் என்று போலீசார் தெரிவித்தனர். 

மேலும் செய்திகள்