திருமண மண்டபங்களுக்கான சொத்துவரியை குறைக்க வேண்டும், வையாபுரி மணிகண்டன் எம்.எல்.ஏ. வலியுறுத்தல்

திருமண மண்டபங்களுக்கான சொத்துவரியை குறைக்க வேண்டும் என்று வையாபுரி மணிகண்டன் எம்.எல்.ஏ. வலியுறுத்தினார்.

Update: 2018-02-06 22:45 GMT
புதுச்சேரி,

புதுவை முத்தியால்பேட்டை தொகுதியில் நடுத்தர மக்கள் பயன்படுத்தும் வகையில் 18 திருமண மண்டபங்கள் உள்ளன. இந்த மண்டபங்களுக்கு ஜி.எஸ்.டி., வருமான வரி உள்ளிட்ட 10 விதமான வரிகள் மத்திய மாநில அரசால் வசூலிக்கப்பட்டு வருகிறது. இதுதவிர நகராட்சி சார்பில் சொத்துவரி, ஆண்டுதோறும் திருமண மண்டப உரிமம் புதுப்பிப்பு கட்டணமும் வசூலிக்கப்படுகிறது.

இந்தநிலையில் நகராட்சி நிர்வாகம் சொத்துவரி, புதுப்பிப்பு கட்டணத்தை 100 சதவீதம் உயர்த்தியுள்ளது. மேலும் திருமண மண்டபத்தில் குப்பைகளை அகற்ற ஒரு நிகழ்ச்சிக்கு ரூ.2,500 கட்டணமாக நிர்ணயித்துள்ளது. இது திருமண மண்டப உரிமையாளர்களுக்கு மிகுந்த நெருக்கடியை ஏற்படுத்தியுள்ளது.

எனவே நகராட்சி நிர்வாகம் இந்த கட்டணத்தை குறைக்க வழிவகை செய்ய வேண்டும் என்று மண்டப உரிமையாளர்கள் வையாபுரி மணிகண்டன் எம்.எல்.ஏ.விடம் வலியுறுத்தினார்கள். இதைத் தொடர்ந்து அவர் மண்டப உரிமையாளர்களுடன் நகராட்சி ஆணையர் கணேசனை சந்தித்து ஆலோசனை நடத்தினார். இந்த ஆலோசனை கூட்டத்தில் நிர்வாக பொறியாளர் சேகர், வருவாய் அதிகாரி பாலாஜி ஆகியோரும் கலந்துகொண்டனர்.

அப்போது சொத்துவரி, உரிமம் புதுப்பிப்பு கட்டணத்தை ஆண்டுக்கு 10 சதவீதம் உயர்த்தவேண்டும், குப்பைகளை அகற்ற மாதத்திற்கு ஒருமுறை என கட்டணம் நிர்ணயிக்கவேண்டும் என்று அதிகாரிகளிடம் வையாபுரி மணிகண்டன் எம்.எல்.ஏ. வலியுறுத்தினார். இதைத்தொடர்ந்து குப்பை அகற்றுவதற்கு மாதம் ஒருமுறை கட்டணம் நிர்ணயிப்பதாக அதிகாரிகள் ஒப்புக்கொண்டனர்.

சொத்துவரி, உரிமம் புதுப்பிப்பு கட்டணம் தொடர்பாக அரசுதான் முடிவு செய்யவேண்டும் என்று தெரிவித்தனர். இதுதொடர்பாக முதல்-அமைச்சர், துறை அமைச்சரை சந்தித்து பேசுவதாக வையாபுரி மணிகண்டன் திருமண மண்டப உரிமையாளர்களிடம் தெரிவித்தார்.

மேலும் செய்திகள்