இனியொரு விதி செய்வோம்

பணம் கொடுத்து பதவிக்கு வந்த துணை வேந்தர்கள், எந்த வழியில் பணம் சம்பாதிக்கலாம் என்று தானே நினைப்பார்கள்.

Update: 2018-02-06 07:21 GMT
கோவை பாரதியார் பல்கலைக்கழகத்தில் பேராசிரியர்களை நியமனம் செய்வதில் பல கோடி ரூபாய் கைமாறி இருக்கிறது. கோடி கணக்கில் லஞ்சம் பெற்றதாய் துணை வேந்தரும் கைது செய்யப்பட்டு உள்ளார். இது ஒரு அவமானகரமான செய்தி.

துணை வேந்தர் பொறுப்பு என்பது மிக உன்னதமானது. அதனால் தான் கவர்னரே தன் கைப்பட கையெழுத்திட்டு அந்த பதவிக்கு நியமன ஆணை வழங்குகிறார். வேறு எந்த துறையில் சேருபவருக்கும் அவர் கையெழுத்திட்டு நியமன ஆணை வழங்குவதில்லை. அப்படி இருக்கையில், இந்த பொறுப்பை அலங்கரிப்பவர்கள் உன்னதமானவர்களாகவும், நேர்மையானவர்களாகவும், தூய்மையானவர்களாகவும், கல்லூரிகளை மேம்படுத்தும் எண்ணம் கொண்டவர்களாகவும், மாணவ சமூகத்துக்கு முன்மாதிரியாக திகழ்பவர்களாகவும் இருக்க வேண்டாமா?

இன்றைக்கு எங்கும் ஊழல், எதிலும் ஊழல் என்ற நிலை வந்தாகிவிட்டது. இதற்கு அடிப்படை காரணம் பல உண்டு. குறிப்பாக, முறைகேடு செய்வதை யாரும் அவமானமாக கருதுவதில்லை. பெற்றோர் செய்யும் முறைகேட்டை பார்த்து பிள்ளைகளும் அதை பின்பற்றுகிறார்கள். பள்ளி, கல்லூரிகளில் ஒழுக்கம் கற்பிக்கப்படுவதில்லை. எப்படி மதிப்பெண்கள் பெறுவது என்பதை மட்டுமே கற்றுக்கொடுக்கிறார்கள். படிப்பை முடித்த பின்பு எப்படி குறுக்கு வழியில் பணியில் சேரலாம் என்று தான் பலரும் எண்ணுகிறார்கள். தமிழகத்தில் இருக்கும் 3 ஆயிரம் மருத்துவ படிப்புக்கான சீட்டில் கிட்டத்தட்ட ஆயிரம் சீட்டுகள் பணம் கைமாறுவதால் நிரப்பப்பட்டவையாகத்தான் இருந்தது. இப்படித்தான் படிப்பிலும், படித்த பின் பணியில் சேருவதிலும் குறுக்கு வழியை தேடுகிறார்கள். இந்த கலாசாரம் அனைத்து இடங்களிலும் பரவி விட்டது.

தற்போது, துணை வேந்தர் பதவிகளும் அப்படித்தான் நிரப்பப்படுகின்றன. பணம் கொடுத்து பதவிக்கு வந்த துணை வேந்தர்கள், எந்த வழியில் பணம் சம்பாதிக்கலாம் என்று தானே நினைப்பார்கள். அதுதான் கோவை பாரதியார் பல்கலைக்கழகத்தில் அரங்கேறி இருக்கிறது. அங்கு மட்டும் அல்ல இன்னும் பல பல்கலைக்கழகங்களில் இந்த நிலை தான் நீடிக்கிறது. இப்படியொரு நிலை கிட்டத்தட்ட 15 ஆண்டுகளாக தொடர்கிறது. 2 கோடி ரூபாய் கொடுத்து துணை வேந்தரானால், 20 கோடி ரூபாய் சம்பாதித்து விட வேண்டும் என நினைக்கிறார்கள்.

முன்பெல்லாம், துணை வேந்தரை தேர்வு செய்யும் ‘தேடுதல் கமிட்டி’ தூய்மையான மனிதர்களை, திறமையானவர்களை, ஒழுக்கமானவர்களை தேடி கண்டுபிடிக்கும். பல்வேறு தகுதிகளை ஆராய்ந்து சரியான ஆளை இந்த கமிட்டி தேர்வு செய்யும். இந்த பதவிக்கு ஒருவர், இன்னொருவரின் பெயரை வேண்டுமானால் பரிந்துரை செய்யலாம். யாரும் தானாக விண்ணப்பிக்க முடியாது. அப்படி இருக்கும்போது, தான் பரிந்துரை செய்பவர் அந்த பதவிக்கு தகுதியானவரா? என ஆராய்ந்து, பரிந்துரை செய்து வந்தனர். இல்லாதபட்சத்தில், தனக்கு கெட்டப் பெயர் வந்துவிடுமே என பரிந்துரை செய்தவர்கள் அச்சப்பட்டனர்.

ஆனால், இன்றைக்கு அந்த நிலை இல்லை. தற்போது, கிளர்க் பணிக்கு விண்ணப்பம் செய்வதை போல துணை வேந்தர் பதவிக்கு விண்ணப்பிக்கலாம் என்ற நடைமுறை உள்ளது. அதாவது, துணை வேந்தராக விரும்புபவர்கள் விண்ணப்பம் செய்யலாம். இந்த நடைமுறை அந்த பதவிக்கான புனிதத்தன்மையை கெடுத்துவிட்டது. அதோடு, ஊழல் நடைபெறுவதற்கான வாய்ப்பையும் பன்மடங்கு பெருக்கிவிட்டது. துணை வேந்தர் பதவிக்கு மட்டுமின்றி பல பணிகளுக்கும் ஆட்களை தேர்வு செய்ய ஒரு ‘சக்தி மையம்’ இருக்கிறது. அதில் மிக உயரிய பதவிகளை சுமக்கும் அதிகாரிகள் இருக்கிறார்கள். அங்கு குறிப்பிட்ட தொகை கைமாறிவிட்டால் போதும், நினைத்த பதவிகளை அலங்கரித்துவிட முடியும் என்ற நிலை இங்கே இருக்கிறது. இதனால் தான் தகுதியானவர்கள் புறக்கணிக்கப்பட்டு, யாரெல்லாமோ துணை வேந்தர்களாகி விடுகிறார்கள்.

இதற்கு இனி தீர்வுகாண்பது என்பது சற்று கடினம். ஒட்டுமொத்த சமூகமும் மாற வேண்டும். ஒவ்வொரு மனிதனும் நாணயமானவர்களாக இருக்க வேண்டும். பள்ளி, கல்லூரிகளில் முதலில் ஒழுக்கத்தை, நேர்மையை கற்பிக்க வேண்டும். நாம் பிறருக்கு முன்மாதிரியாக வாழ முற்பட வேண்டும். அப்போதுதான் ஊழலை தடுக்க முடியும். ஊழலை எதிர்த்து குரல் கொடுக்கும் எண்ணம் வரும்.

நான் துணை வேந்தராக இருந்தபோதும் சரி, அதற்கு முன்பு இருந்தவர்களும் சரி நேர்மையாகவும், கல்வி தரத்தை மேம்படுத்தும் எண்ணம் கொண்டவர்களாகவும் இருந்தோம். ஏ.எல்.முதலியார் 27 ஆண்டுகள் துணை வேந்தராக இருந்தார். மாசற்றவராக அந்த பதவியை வகித்தார். இதற்காக தான் சார்ந்த துறையை விட்டுவிட்டு, அர்ப்பணிப்போடு துணை வேந்தராக பணிபுரிந்தார். இன்றைக்கு அப்படிப்பட்டவர்கள் யாரும் இல்லை.

இந்த நிலை மாற துணை வேந்தரை தேர்வு செய்யும் நடைமுறை மாற வேண்டும். அந்த பதவிக்கு விண்ணப்பம் செய்யலாம் என்ற நடைமுறைக்கு முதலில் முடிவு கட்ட வேண்டும். அதாவது, தேடுதல் குழு தகுதியான, தூய்மையானவர்களை தேடி கண்டுபிடிக்க வேண்டும். மேலும், தேடுதல் கமிட்டியில் அரசியல் சாயமற்ற, பணத்துக்கு ஆசைப்படாத, நேர்மையான நபர்களை இடம்பெற செய்ய வேண்டும். அப்போதுதான் துணை வேந்தர் பதவிக்கும், பேராசிரியர்கள் நியமனத்துக்கும் பணம் கைமாறும் சூழல் ஏற்படாது. பல்கலைக்கழகங்களில் கல்வியின் தரமும் உயரும்.

அதுமட்டுமின்றி, கடந்த 15 ஆண்டுகளாக துணை வேந்தர் பதவி நியமனம் மற்றும் பல்கலைக்கழகங்களில் பேராசிரியர்கள் நியமனத்தில் நடந்த முறைகேடுகளை கண்டறிய சி.பி.ஐ. விசாரணை நடத்த வேண்டும். பணம் கொடுத்து பதவிக்கு வந்தவர்கள், பணம் பெற்று நியமனம் செய்தவர்கள் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும். இது ஒரு அதிரடியான நடவடிக்கையாக இருக்க வேண்டும். வரும் தலைமுறைக்கு முன்னுதாரணமான நடவடிக்கையாக இருக்க வேண்டும். இனியொரு விதி செய்வோம்.

டாக்டர் ஏ.கலாநிதி, முன்னாள் துணை வேந்தர், அண்ணா பல்கலைக்கழகம்

மேலும் செய்திகள்