ஆளில்லா தானியங்கி சூப்பர் மார்க்கெட்டுகள்

ஆளில்லாமல் செயல்படும் சூப்பர்மார்க்கெட்டுகள் உருவாகி வருகின்றன.

Update: 2018-02-06 05:09 GMT
தொழில்நுட்ப வளர்ச்சியால் சூப்பர் மார்க்கெட்டுகள் உள்ளிட்ட கடைகளில் பொருட்களின் இருப்பை எளிதாக அறியவும், விற்பனையை கணக்கிடவும் மெஷின்களும், ரோபோக்களும் வெளிவந்த வண்ணம் இருக்கிறது. இதன் அடுத்தகட்ட வளர்ச்சியாக ஆளில்லாமல் செயல்படும் சூப்பர்மார்க்கெட்டுகள் உருவாகி வருகின்றன. சமீபத்தில் சீனாவில் ஒரு ஆளில்லா சூப்பர் மார்க்கெட் திறக்கப்பட்டது நினைவூட்டத்தக்கது.

தற்போது உலகின் மிகப்பெரிய இணைய வர்த்தக நிறுவனமான அமேசான், ஆளில்லா சூப்பர்மார்க்கெட்டுகளை திறக்கும் முயற்சியில் தீவிரம் காட்டத் தொடங்கி உள்ளது. இதற்கான வெள்ளோட்டமாக, தங்கள் தலைமையகத்தில் தானியங்கி சூப்பர்மார்க்கெட்டை திறந்திருக்கிறது. இதற்காக அமேசான்கோ எனும் திட்டத்தையும் அவர்கள் தொடங்கி உள்ளனர். விரைவில் சில்லறை விற்பனையை விரிவுபடுத்தும் நோக்கில் பல்வேறு இடங்களிலும் ‘அமேசான்கோ’ ஆளில்லா சூப்பர்மார்க்கெட்டுகள் திறக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

அமேசான்கோ சூப்பர்மாக்கெட்டிற்கு செல்ல விரும்புபவர்கள் தங்கள் ஸ்மார்ட்போன்களில், அதற்கான அப்ளிகேசனை நிறுவிக் கொள்ள வேண்டும். அதன் வழியே நமக்கு தனிக் கணக்கு கொடுத்துவிடுவார்கள். உங்கள் வங்கிக் கணக்கு அடிப்படையில் நீங்கள் எவ்வளவு தொகை வரையில் ஷாப்பிங் செய்ய முடியும் என்ற இலக்கை நிர்ணயித்துவிடுவார்கள். அதன்பிறகு அமேசான் சூப்பர்மார்க்கெட் செல்லும்போதெல்லாம் உங்களுக்கான ஒரு குறியீடு உருவாகும். அது உங்களை கடையின் உள்ளே செல்ல அனுமதிக்கும். ஆளே இல்லாத சூப்பர்மார்க்கெட்டில் ஷாப்பிங் சென்றால் வேண்டிய பொருட்களை காத்திருக்காமல் வாங்கிக் கொண்டு, ஸாரி எடுத்துக் கொண்டு வந்து விடலாம். தொகை எலக்ட்ரானிக் குறியீடுகளின் அடிப்படையில் கணப் பொழுதில் கணக்கிடப்பட்டு உங்கள் கணக்கில் பிடித்தம் செய்து கொள்வார்கள்.

கடந்த 2017-ம் ஆண்டு இதற்கான ஆரம்ப கால சோதனை முயற்சி நடந்தது. அதன் அடிப்படையில் பொதுமக்கள் பயன்பாட்டுக்கு அனுமதிக்கும் இன்னும் மேம்படுத்தப்பட்ட வசதிகள் ஏற்படுத்தப்பட்டு தற்போது சியாட்டிலில் உள்ள அமேசான் தலைமை அலுவலகத்தில் பொது பயன்பாட்டிற்கான ‘அமேசான்கோ’ விற்பனை அங்காடி திறக்கப்பட்டு உள்ளது. திருட்டு முயற்சிகளைக்கூட எளிதாக கண்டுபிடித்துக் கொடுத்தது இந்தத் தொழில்நுட்பம். இதையடுத்து விரைவில் ஏராளமான இடங்களில் அமேசான் கோ விற்பனை மையங்களை திறக்கும் திட்டத்தில் மூழ்கி உள்ளது அமேசான்.

மேலும் செய்திகள்