மீண்டும் போராட்டம் என்ற தகவலால் அரசு கலைக்கல்லூரி முன்பு போலீஸ் குவிப்பு

சாலை மறியலில் ஈடுபட்ட 10 மாணவர்கள் மீது வழக்குப்பதிவு செய்ததை கண்டித்து மீண்டும் போராட்டம் என ‘வாட்ஸ்அப்’பில் பரவிய தகவலால் வேலூர் முத்துரங்கம் அரசு கலைக்கல்லூரி முன்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக போலீசார் குவிக்கப்பட்டனர்.

Update: 2018-02-05 22:45 GMT
வேலூர்,

வேலூர் ஓட்டேரியில் உள்ள முத்துரங்கம் அரசு கலைக்கல்லூரி மாணவ-மாணவிகள் கடந்த மாதம் 30-ந் தேதி பஸ் கட்டண உயர்வை கண்டித்து வகுப்புகளை புறக்கணித்து சாலை மறியலில் ஈடுபட்டனர். மாணவர்களின் ‘திடீர்’ போராட்டத்தால் அந்த பகுதியில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

இது குறித்து தகவல் அறிந்த வேலூர் தாசில்தார் பாலாஜி, வேலூர் துணை போலீஸ் சூப்பிரண்டு ஆரோக்கியம், கூடுதல் போலீஸ் சூப்பிரண்டு (மதுவிலக்கு அமலாக்கப்பிரிவு) பாலகிருஷ்ணன் ஆகியோர் சம்பவ இடத்துக்கு சென்று சாலை மறியலில் ஈடுபட்ட மாணவ-மாணவிகளிடம் பேச்சு வார்த்தை நடத்தினர்.

இதில் எவ்வித உடன்பாடும் ஏற்படவில்லை. மாணவர்களை கலைந்து செல்லும்படி போலீசார் எச்சரித்தனர். ஆனால் அதன்பின்னரும் மறியல் தொடர்ந்ததால் மாணவ-மாணவிகள் மீது போலீசார் தடியடி நடத்தினர். இதனையடுத்து மாணவ-மாணவிகள் நாலாபுறமும் சிதறி ஓடினர். மாணவ-மாணவிகள் ஒருவரை ஒருவர் முண்டியடித்துச் சென்று ஓடும் போது சிலர் கீழே விழுந்து காயமடைந்தனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.

இதையடுத்து அரசுக்கு எதிராக சாலை மறியலில் ஈடுபட்டது, பொது அமைதிக்கு பங்கம் விளைவித்தது உள்பட 3 பிரிவுகளின் கீழ் 10 மாணவர்கள் மீது பாகாயம் போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். அதைத்தொடர்ந்து கல்லூரிக்கு 5 நாட்கள் தொடர் விடுமுறை அறிவிக்கப்பட்டது.

இந்த நிலையில் விடுமுறைக்கு பின்னர் நேற்று கல்லூரி திறக்கப்பட்டது. காலை 2-ம் ஆண்டு இளங்கலை மாணவர்களுக்கு கணிப்பொறி துறை (சி.எல்.பி.) தேர்வு நடந்ததால் இளங்கலை முதல் மற்றும் 3-ம் ஆண்டு மாணவ-மாணவிகளுக்கு மட்டும் (சுழற்சி-1) விடுமுறை அளிக்கப்பட்டிருந்தது. முதுநிலை மாணவ-மாணவிகள் கல்லூரிக்கு வழக்கம் போல் வந்தனர்.

சாலை மறியலில் ஈடுபட்ட 10 மாணவர்கள் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்ததை கண்டித்து நேற்று காலை மீண்டும் கல்லூரி முன்பு போராட்டம் நடத்தப்படும் என மாணவர்கள் ‘வாட்ஸ்அப்’பில் தகவல் பரிமாறிக்கொண்டதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது.

அதன் காரணமாக முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக கல்லூரி நுழைவு வாயில் முன்பாக 10-க்கும் மேற்பட்ட போலீசார் குவிக்கப்பட்டிருந்தனர். ஆனால் மாலை 5 மணி வரை கல்லூரி முன்பாக மாணவர்களின் ஆர்ப்பாட்டம், போராட்டம் எதுவும் நடைபெறவில்லை. 

மேலும் செய்திகள்