குறைதீர்வு கூட்டத்தை புறக்கணித்த அரசு அலுவலர்களுக்கு நோட்டீஸ் கலெக்டர் உத்தரவு

திருவண்ணாமலையில் மக்கள் குறைதீர்வு நாள் கூட்டத்தை புறக்கணித்த அரசு அலுவலர்களுக்கு நோட்டீஸ் வழங்க கலெக்டர் உத்தரவிட்டுள்ளார்.

Update: 2018-02-05 22:45 GMT
திருவண்ணாமலை,

திருவண்ணாமலையில் கலெக்டர் கந்தசாமியை கண்டித்து கடந்த 2-ந் தேதி வருவாய்த்துறையினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது திங்கட்கிழமை நடக்கும் வாராந்திர மக்கள் குறைதீர்வு கூட்டத்தை புறக்கணிக்கப்போவதாக தெரிவித்தனர்.

இந்த நிலையில் நேற்று வழக்கம்போல் மக்கள் குறை தீர்வு கூட்டம் நடந்தது. கூட்டத்திற்கு மாவட்ட கலெக்டர் கே.எஸ்.கந்தசாமி தலைமை தாங்கினார். மாவட்ட வருவாய் அலுவலர் ரத்தினசாமி முன்னிலை வகித்தார். இந்த கூட்டத்தை வருவாய்த்துறையினர் புறக்கணித்தனர். எனினும் அலுவலர்களை கொண்டு கூட்டம் நடத்தப்பட்டது.

முன்னதாக கலெக்டர் கந்தசாமி அலுவலக வளாகத்தில் உள்ள மாற்றுத்திறனாளிகள் நலத்துறை அலுவலகம் வழியாக கூட்டத்திற்கு நடந்து வரும் போது வெளியே சில மாற்றுத்திறனாளிகள் தரையில் அமர்ந்திருந்தனர். அவர்களிடம் கலெக்டர் கந்தசாமி நேரில் சென்று குறைகள் குறித்து கேட்டறிந்தார்.

மேலும் மாற்றுத்திறனாளிகள் அலுவலகத்திற்கு சென்று மனு கொடுப்பதில் சிரமம் இருப்பதாக அவர் கருதி அலுவலகத்திலிருந்த மேசைகளை வெளியே வைத்து அவர்களிடம் மனு வாங்குமாறு அலுவலர்களுக்கு அறிவுறுத்தினார். மேலும் மாற்றுத்திறனாளிகளுக்கு தகவல் உதவி மையம் இனி வருங்காலங்களில் ஏற்படுத்தி கொடுக்க வேண்டும் என்று கூறினார். மாற்றுத்திறனாளிகளிடம் மனுக்களையும் பெற்றார்.

பின்னர் அவர் நிருபர்களிடம் கூறியதாவது:-

குறைகளை மனுக்களாக அளிக்க வரும் மாற்றுத்திறனாளிகள் நலனுக்காக பேட்டரியினால் இயங்கக்கூடிய வாகனம் ஏற்பாடு செய்யப்படும். கோர்ட்டு, கலெக்டர் அலுவலக பகுதிகளுக்கு பஸ் நிறுத்தத்தில் இருந்து பஸ் இயக்கப்பட நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. மக்கள் குறையை கேட்க வேண்டிய இந்த நாளில் குறை தீர்வு கூட்டத்தை புறக்கணித்த அலுவலர்களுக்கு நோட்டீஸ் வழங்க உத்தரவிட்டுள்ளேன். கலந்து கொள்ளாதவர்கள் குறித்த விவரம் சேகரிக்கப்படும். மேலும் மாற்றுத்திறனாளிகள் நலனுக்காக இனி வரும் காலங்களில் மாற்றுத்திறனாளிகள் நேரடியாக மாற்றுத்திறனாளிகள் நல அலுவலகத்தில் வந்து மனு அளிக்கலாம்.

இவ்வாறு அவர் கூறினார்.

மேலும் செய்திகள்