பொதுப்பணித்துறையில் கருணை அடிப்படையில் வேலை பெற்றவர்கள் தொடர் உண்ணாவிரதம்

பொதுப்பணித்துறையில் கருணை அடிப்படையில் வேலை பெற்றவர்கள் பணிநிரந்தரம் செய்யக்கோரி தொடர் உண்ணாவிரத போராட்டம் நடத்தினர்.

Update: 2018-02-05 23:15 GMT
புதுச்சேரி,

புதுவை அரசு பொதுப்பணித்துறையில் கருணை அடிப்படையில் நிரந்தர வாரிசு பணி வழங்க கோரி போராடி வந்த 200 பேர் கடந்த 2014-ம் ஆண்டு பணி அமர்த்தப்பட்டனர். அவர்களுக்கு மாதத்தில் 16 நாள் வவுச்சர் வேலை அடிப்படையில் பணி அமர்த்தப்பட்டது. காலி பணியிடம் வரும்போது பணி நிரந்தரம் வழங்கப்படும் என தலைமை பொறியாளரால் உறுதி அளிக்கப்பட்டது.

இந்த நிலையில், தற்போது பொதுப்பணித்துறையில் காலி பணியிடங்கள் அதிகமாக இருந்த போதிலும் பணி நிரந்தரம் வழங்கப்படவில்லை. இதனை கண்டித்தும், தங்களை பணிநிரந்தரம் செய்ய வேண்டும் என்று வலியுறுத்தியும் புதுச்சேரி பொதுப்பணித் துறையில் கருணை அடிப்படையில் வேலை பெற்றோர் தொழிற்சங்கம் சார்பில் பலகட்ட போராட்டங்கள் நடத்தப்பட்டது. ஆனால் இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை.

இதனை கண்டித்தும், தங்களை உடனடியாக பணி நிரந்தரம் செய்து அதற்கான ஆணை வழங்க வலியுறுத்தி நேற்று காலை பொதுப்பணித்துறை தலைமை அலுவலகம் எதிரில் தொடர் உண்ணாவிரத போராட்டத்தினை தொடங்கினர். இந்த போராட்டத்திற்கு சங்க பொதுசெயலாளர் கோபிகண்ணன் தலைமை தாங்கினார்.

போராட்டத்தில் சங்க தலைவர் கந்தன், துணை தலைவர்கள் ஜெயசந்திரன், கண்மணி, ரஞ்சித், இணை செயலாளர்கள் இளவரசன், பால்ராஜ், மனோபள்ளி ஸ்ரீகாந்த் உள்பட பலர் கலந்து கொண்டனர். 

மேலும் செய்திகள்