மேல்மலையனூர் அருகே பயிர் காப்பீட்டு தொகையை வழங்க கோரி உண்ணாவிரத போராட்டம்

மேல்மலையனூர் அருகே பயிர் காப்பீட்டு தொகையை வழங்க கோரி விவசாயிகள் பட்டை நாமம் போட்டு உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டனர்.

Update: 2018-02-05 22:30 GMT
மேல்மலையனூர்,

மேல்மலையனூர் அருகே தேவனூர் கிராமத்தை சேர்ந்த விவசாயிகள் பயிர் காப்பீட்டு திட்டத்தின் கீழ் இணைந்திருந்தனர். இந்த நிலையில் கடந்த ஆண்டு இந்த பகுதியில் நிலவிய வறட்சியின் காரணமாக பயிர்கள் அனைத்தும் கருகி போனது. இந்த பகுதியில் வறட்சி நிவாரண குழுவினரும் நேரில் பார்வையிட்டு சென்றனர்.

இதற்கிடையே தேவனூரை சுற்றி உள்ள கிராமங்களை சேர்ந்த விவசாயிகளில் பாதிக்கப்பட்டவர்களுக்கு காப்பீட்டு நிறுவனம் மூலம் பணம் வழங்கப்பட்டுள்ளது. ஆனால் தேவனூர் கிராமத்தில் உள்ள விவசாயிகளுக்கு இதுவரையில் பயிர் காப்பீட்டு திட்டத்தின் கீழ் சம்பந்தப்பட்ட காப்பீட்டு நிறுவனத்தால் பணம் வழங்கப்படவில்லை என்று கூறப்படுகிறது.

இதனால் ஆத்திரமடைந்த விவசாயிகள் ஒன்று திரண்டு தேவனூரில் நான்குமுனை சாலையில் நேற்று காலை 11 மணியளவில் உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது அவர்கள் நெற்றியில் பட்டை நாமம் போட்ட படி அமர்ந்திருந்தனர். போராட்டம் குறித்து விவசாயி மணி கூறுகையில், கடந்த ஆண்டு ஏற்பட்ட வறட்சியால் கரும்பு பயிர் செய்திருந்த விவசாயிகள் பெரிய அளவில் பாதிக்கப்பட்டனர். இவர்களில் பயிர் காப்பீடு செய்தவர்களுக்கு காப்பீட்டு தொகையை வழங்க கோரி சம்பந்தப்பட்ட அலுவலர்களிடம் மனு கொடுத்தும் இதுவரையில் நடவடிக்கை எடுக்கவில்லை. ஆனால் அருகில் உள்ள கிராமங்களை சேர்ந்த விவசாயிகளுக்கு வறட்சி நிவாரணம், பயிர் காப்பீட்டு தொகை வழங்கப்பட்டுள்ளது. எங்களுக்கு மட்டும் வழங்கப்படவில்லை. அதிகாரிகளிடம் தெரிவித்தும் நடவடிக்கை எடுக்காததால் உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டுள்ளோம். அடுத்தகட்டமாக சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபடுவோம் என்று தெரிவித்தனர்.

இதற்கிடையே போராட்டம் பற்றி அறிந்த செஞ்சி மஸ்தான் எம்.எல்.ஏ. நேரில் வந்து போராட்டத்துக்கு ஆதரவு தெரிவித்து பேசினார். அப்போது பயிர்காப்பீட்டு தொகை கிடைக்க நடவடிக்கை எடுப்பதாக அவர் தெரிவித்தார்.

இந்த நிலையில் மாலையில் வளத்தி போலீஸ் இன்ஸ்பெக்டர் குமார பாலன், சப்-இன்ஸ்பெக்டர் குணபாலன் மற்றும் போலீசார், வேளாண்மைதுறை, வருவாய்த்துறை அதிகாரிகள் அங்கு வந்து பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது பயிர் காப்பீட்டு தொகையை பெற்று தர நடவடிக்கை எடுப்பதாக அதிகாரிகள் தெரிவித்தனர். இதையடுத்து அனைவரும் போராட்டத்தை கைவிட்டனர்.

மேலும் செய்திகள்